Tuesday, November 1, 2016

PAAVAIYARGAL MAAN POLE - ORE MUTHAM

Tiruchendurai Ramamurthy Sankar writes:

காவிரியின் நீர்போலே.....

ஹார்மோனியத்தை பிரதான வாத்தியமாகக் கொண்டு எம்.எஸ்.வி இசையில் பல பாடல்கள் உண்டு. நாடோடி, அந்த 7 நாட்கள் படப்பாடல்கள் குறிப்பிடத் தக்கவை. கவாலி வகையில் வந்த, பாரடி கண்ணே கொஞ்சம் பாட்டிலும் ஹார்மோனியம் முக்கியத்துவம் பெற்றது. ரஹ்மானின் "கண்ணாளனே " மற்றும் ஓர் முக்கியமான பாடல்.

கிஸ்மத்(1968) ஹிந்திப்படத்தில் ஓ.பி.நய்யரின் இசையில் வந்த " கஜுரா மொஹொபத்வாலா" ஹார்மோனிய இசையில் ஒரு மைல்கல் என்று சொல்லலாம். சாதாரணமாக ஆண்வேஷமிட்டு வரும் பிஸ்வஜித் பெண்வேஷம் இட்டு , பபிதாவுடன் பாடும் பாடல் இன்றும் பிரபலம். பஞ்சாபி இசையில் ஹார்மோனியத்திற்குப் பெரும்பங்கு உண்டு. அதை சிறப்பாக வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தவர் ஓ.பி.நய்யார்.

இளையராஜாவிற்கு பாடலில் ஹார்மோனியத்தை பெரிதும் பயன்படுத்தும் வாய்ப்புக் கிட்டியது முதன்முதலாக இந்தப் பாட்டில்தான். பல இசைக்கருவிகளை வாசிக்கத் தெரிந்த ஒரு இசையமைப்பாளராக இருந்தாலும் ஹார்மோனியம் வாசிக்கவரும்போது அவருடைய home coming தெரியும் பாடல் இது. பாவலர் பிரதர்ஸ் குழுவில் ஹார்மோனியம் வாசித்த ராஜா, கித்தார், பியானோ என்றெல்லாம் தன் ஆளுமையைக் காட்டி வந்த நேரத்தில் இந்தப் பாடல் இடைச்செருகலான ஒரு மெலிதான தென்றல்.

பாடலின் பல்லவியும் , முதல் சரணம் வரையில் கூட வரும் ஹார்மோனியம் , ஜானகி பாட்டில் நுழைந்ததும் அவரது வழக்கமான fox trot ற்குப் போய் , பிறகு திசை மாறிப் போவது சற்றே வருத்தம். இருந்தாலும் SPB யும் , ஜானகியும் போட்டி போட்டு இளையராஜாவின் உற்சாகத்திற்கு ஈடு கொடுத்திருப்பார்கள். ( நான் கங்கை அமரனின் ரசிகன். இந்தப் பாட்டில் இரண்டாவது சரணத்தில் ராஜாவை விட அமரன் அதிகமாகத் தெரிவார்! ) தொகையறா இல்லாததால் கவாலி வகைக்கு சற்றே வெளியே இருக்கும் பாடல்.

சனிக்கிழமை காலை 9.30 க்கு திரைவிருந்து. கே.எஸ்.ராஜா , இளையராஜாவின் இந்தப்பாடல் கம்போசிங்கை திரை விருந்தாக வழங்குகிறார். மைக்கில் ராஜாவின் குரல் " ராஜகோபால் ( என்று நினைவு!) , அந்த இடத்தில் இன்னும் சரியா வர்ல! தான தனனே தானதனே, இன்னும் ஒரு தடவை வரணும்! ரிதம் இன்னும் க்ளோஸா வாங்க! " . கம்போஸிங்கை நேரில் பார்க்க முடியாத சிறு நகரப் பிரஜைக்கு இது பிரமிப்பு. அடுத்த திங்கட்கிழமை பள்ளியில் இது பற்றிப் பேசியிருக்கிறோம். எம்.எஸ்.வி ரசிகனுக்கு கொஞ்சம் சிரம தசையான நேரமது!

இளையராஜா மோகன், ராமராஜன் இருவருக்கும் சோறுபோட்டு குழம்பு ஊத்தியிருக்கிறார். அவரும் எம்.எஸ்.வியும் சேர்ந்து சோறுபோட்டு குழம்பு ஊற்றி வளர்த்த இன்னொரு சுமார் நடிகர் ஜெய்கணேஷ். எந்தப் பாணியும் இல்லாமல் , ஏராளமான படங்களில் நடித்தும், வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் , எதுவுமே சாதிக்காமல் இருந்தவர்களில் இரண்டாமவர் ஜெய் கணேஷ். முதலாமவர்........சரி வேண்டாம்! உடன் சுமித்ரா, ஶ்ரீகாந்த்! பார்ப்பதற்கு எந்த ஆவலையுமே தூண்டாத நடிகர் குழாம்!

ஒரே முத்தம் (1980) , என் போன்ற சினிமாபைத்தியங்கள் பார்ப்பதற்கு முன்பே திரையரங்குகளை விட்டுப் போய்விட்டது. வந்ததா? என்றுகூட சந்தேகத்தை சரவணனிடம் கேட்டிருக்கிறேன். ஆனால் இந்தப் பாடல் கேட்கும்போதெல்லாம், என் மனதுக்குள் SPB, ஜானகி, இசைக்குழுவுடன் இளையராஜாவும், கங்கை அமரனும் , கண்ணதாசனோடு சேர்ந்து உட்கார்ந்து கம்போஸ் செய்வது காட்சியாய் விரியும். எந்த டெம்ப்ளேட் குழப்பங்கள், இசை ஞானி போன்ற அவஸ்தையான கிரீடங்கள் இன்றி, ஒரு துடிப்பான இளம் இசையமைப்பாளராக அவர் இருந்த நேரம்.

https://youtu.be/z_a8TSsB890


Discussion at:
https://www.facebook.com/groups/1018417744856618/permalink/1371852009513188/

No comments:

Post a Comment