dhool

dhool
Click on the above image and Join the discussion in our Facebook group

Wednesday, January 7, 2026

Ennai azhaithadhu - Oruvanuku Oruthi

 தேன் மலர் மறப்பதுண்டோ தென்றலே உன் நினைவை....🙏


மெல்லிசை மாமணி திரு V. குமாரின் நினைவு நாள் இன்று. இயக்குனர் K.பாலசந்தரின் ஆஸ்தான இசையமைப்பாளராக இருந்தவர், அறுபதுகளிலும் எழுபதுகளிலும் எத்தனையோ அற்புதமான பாடல்களை உருவாக்கியவர்.


எண்பதுகளில் குமாரின் திறமை வற்றாமல் இருந்தும் வாய்ப்புகள் வற்றிப்போயின.  வாய்ப்புகளை தேடி செல்ல அவரது சுயமரியாதை அனுமதிக்கவில்லை. மென்மையான உள்ளம் கொண்ட அவருக்கு இந்த புறக்கணிப்பு மிகுந்த வேதனை அளித்திருக்க வேண்டும். 


பக்தி பாடல்களுக்கு இசையமைத்தார். தூர்தர்ஷனில் சில மெல்லிசை நிகழ்ச்சிகள், நாடகங்களுக்கு இசையமைத்தார். அந்த வாய்ப்புகளும் நின்றுவிடவே செய்வதறியாது வீட்டிலேயே முடங்கி இருந்தார். 'ஒரு காலத்துல நாள் பூரா டெலிஃபோன் மணி அடிச்சிட்டிருக்கும். தயாரிப்பாளர்களின் கார்கள் வரிசையா வெளியே நிக்கும். ராப்பகலா கம்போஸிஷன், ரிகர்ஸல்ன்னு வீடே பரபரப்பா இருக்கும்... அதுக்கப்புறம் திடீரென்னு இந்த வெறுமை...அவ்வளவு பிஸியா இருந்தவரு வீட்ல சும்மா இருக்கிறது எவ்வளவு கஷ்டம்.... டெலிஃபோன் அடிச்சா மாதிரி இருந்ததேன்னு அப்பப்போ ஆவலா கேட்டுக்கிட்டே இருப்பாரு... ' குமாரின் மனைவி திருமதி சுவர்ணா இதையெல்லாம் என்னிடம் பகிரும்போது அவர் கண்கள் குளமாயின... குரல் கம்மியது. 


இந்த புறக்கணிப்பே காலப்போக்கில் குமாரின் உடல்நிலை மோசமாவதற்கு ஒரு காரணமாக இருந்திருக்ககூடும். 1996ஆம் வருடம் ஜனவரி 7 அன்று திரு குமாரின் மறைவு தினத்தந்தியின் உள்பக்கத்தில் ஒரு சிறிய செய்தியாய் வந்தது. அவர் வாழ்ந்தது போலவே அமைதியாய், எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் விடைப்பெற்றார்....


குமார் தானே இல்லை.. அவர் உருவாக்கிய அருமையான பாடல்கள் இன்றும் நம்மிடம் பத்திரமாக இருக்கின்றன... 


அப்படி அவர் விட்டுச்சென்ற ஒரு அரிய பொக்கிஷம் இதோ....  


இரவில் காதலர்கள் ரகசியமாக சந்திக்கிகும் வழக்கமான பாடல் காட்சி தான்... ஆனால் குமாரின் கைவண்ணத்தில் எவ்வளவு அழகாக உயிர்பெறுகிறது!  வாலியின் வரிகளை ஒரு மயிலிறகால் வருடும் மெட்டில் பூட்டுகிறார் குமார்... ஜானகியும் யேசுதாசும் அந்த அந்தரங்க தவிப்பை  தேன்சொட்டும் குரல்களில் கதகதப்பாக இசைக்கும் போது....  நம் வசம் நாமில்லையே....


ஒலியும்-


https://youtu.be/cnLXqRiTYnM?feature=shared


ஒளியும்-


https://youtu.be/-oisJNiSlwQ?feature=shared


- Saravanan Natarajan

No comments:

Post a Comment