dhool

dhool
Click on the above image and Join the discussion in our Facebook group

Thursday, January 8, 2026

Oru paarvai - Nangooram

 ஒரு பார்வை பார்க்கும் போது

உயிர் பாடும் நூறு பாட்டு...🎵
1978 தீபாவளிக்கு வெளிவந்த 'பைலட் பிரேம்நாத்' படத்தின் வெற்றி அந்த காலகட்டத்தில் இந்திய-இலங்கை கூட்டுதயாரிப்பில் 'நீலக்கடலின் ஓரத்திலே', 'மோகன புன்னகை', 'ரத்தத்தின் ரத்தமே' போன்ற மேலும் சில படங்கள் வெளிவர வித்திட்டது. அந்த வரிசையில் வெளிவந்த மற்றுமோர் படம் 'நங்கூரம்' (1979)
லங்கால் முருகேசு என்ற இலங்கை தமிழர் தயாரிக்க, டிமதி வீரரட்னே இயக்கத்தில் வந்த படம். சென்னை ஸ்டூடியோக்களில் உள்புற காட்சிகளும், இலங்கையின் அழகான நுவரெலியா, பெரெடேனியா போன்ற இடங்களில் வெளிப்புற காட்சிகளும் பாடல்களும் படமாக்கப்பட்டன. முத்துராமன், லட்சுமி, மாஸ்டர் சேகர், சுருளிராஜன் ஆகிய இந்திய நடிகர்களுடன் இலங்கை நடிகர்கள் இருவர் நடித்திருந்தனர். ஒருவர் லட்சுமியின் தங்கையாக நடித்த சிங்கள கவர்ச்சி நடிகை ஃபரீனா லை.
மற்றொருவர்- பாடகர், நடிகர், சமூக ஆர்வலர் என்ற பன்முக கலைஞர் விஜய குமாரதுங்க. நல்ல உயரமும் வசீகர புன்னகையும் கொண்டு எழுபதுகளில் அவர் இலங்கையின் முன்னனி நாயகனாக திகழ்ந்தார். அரசியல் கட்சி ஒன்றை தொடங்கி இலங்கையில் பல்வேறு பிரிவுகளிடையே ஒற்றுமையை கொண்டு வர முயற்சித்து கொண்டிருக்கையில் 1988ல் வெறியர்களால் தன் வீட்டு வாசலில் அவர் சுட்டுக்கொல்லப்பட்போது கதறியபடியே ஓடிவந்து அவரது உடலை தாங்கிப்பிடித்தவர் அவரது காதல் மனைவி சந்திரிகா- பின்னாளின் இலங்கையின் அதிபர்.
'நங்கூரம்' படக்கதை என்னமோ பாடாவதியான முக்கோண காதல் கதை தான். ஒரு நடுத்தர குடும்பத்தின் மூத்த பெண் ராதா ( லட்சுமி), அவளை ஒரு மனதாக காதலிக்கும் அடுத்த வீட்டு வாலிபன் ஆனந்தா ( விஜய குமாரதுங்க), இந்தியாவிலிருந்து அங்கு ஒரு தொழிற்சாலை கட்டுவதற்காக வரும் வினோத் (முத்துராமன்). ராதா வினோதை நேசிக்கிறாள் என்பதை அறிந்து புத்த பிட்சுவாக துறவறம் பூணுகிறான் ஆனந்தா.
'நங்கூரம்' தோல்வி படமாக அமைந்தாலும் அதன் பாடல்கள் அற்புதமானவை. இந்தியாவை சேர்ந்த V. குமாரும் இலங்கையை சேர்ந்த கேமதாஸாவும் இணைந்து பாடல்களுக்கு இசையமைத்தார்கள் என்று அறிவிப்புடன் இசைத்தட்டும் படமும் வெளிவந்தன . ஆனால் குமார் சாரின் மனைவி திருமதி ஸ்வர்ணாவிடம் இதை பற்றி கேட்டபோது பாடல்களுக்கு குமார் மட்டும் தான் இசையமைத்தார் என்று கூறினார். பாடல்களை கேட்கும் போது இது உண்மையாக இருக்குமென்றே தோன்றுகிறது- ஒவ்வொன்றிலும் பிரத்யேகமான குமாரின் செழுமையான மெலடி பாணி பளிச்சிடுகிறது.
சாலையில் சந்தித்து ராதாவும் ஆனந்தாவும் பேசிக்கொள்கிறார்கள், சிரிக்கிறார்கள்... பிறகு அவள் அங்கிருந்து செல்கிறாள். அவள் மேல் உள்ள காதலை அவளிடம் தெரிவிக்க அவன் ஏனோ தயங்குகிறான். அது வெட்கத்தினாலா, அல்லது தனது காதல் நிராகரிக்கப்படுமோ என்ற அச்சத்தினாலா? மென்மையான அவனது மனதில் தடாலடியாக தன் காதலை வெளிப்படுத்த தைரியம் இல்லை... ஏக்கம் நிறைந்த பெருமூச்சாக ஒலிக்கிறது அவனது பாடல்....
'சொல்லாத சொல்லுக்கு விலையேதுமில்லை...' என்று முன்பு எழுதிய கவியரசர் இங்கே இப்படி எழுதுகிறார்....
//கோடி வார்த்தைகளை
சேர்த்து வைத்து கொண்ட உள்ளம்...
ஓடி ஓடி அது பாய்ந்து செல்லுகின்ற வெள்ளம்...
நினைக்கிறேன் சொல்ல மொழியில்லை
எனக்குத்தான் என்ன நாணமோ
நீயும் மௌன ராகம் நானும் மௌன கீதம்
சொன்னால் ஏற்றுக்கொள்வாய்...
என்னால் முடியவில்லை....//
இந்த பரிதவிப்பை எவ்வளவு அழகாக படம்பிடிக்கிறது குமாரின் மெட்டு! The hesitation, the procrastination, the suffering is so beautifully brought out in the slow paced charanam lines, punctuated with pregnant pauses....
SPBயின் குரல் இந்த கையறுநிலையை காய்ச்சலுடன் சுமந்து வருகிறது. சுவர்ணாவின் ஹம்மிங் அணல் மேல் மெழுகு...
இந்த பாடல் அந்த காலகட்டத்தில் இலங்கை வானொலியிலும் விவித் பாரதியிலும் ஒலித்தது... பிறகு காலத்தின் மணலில் புதைந்த போனது....
நேற்று V. குமாரின் நினைவு நாள். அவர் விட்டுச்சென்ற இதுபோன்ற பொக்கிஷங்களை நாம் மீட்டெடுத்து கொண்டாட இது ஒரு காரணமாக அமையட்டுமே....
- Saravanan Natarajan


Wednesday, January 7, 2026

Ennai azhaithadhu - Oruvanuku Oruthi

 தேன் மலர் மறப்பதுண்டோ தென்றலே உன் நினைவை....🙏


மெல்லிசை மாமணி திரு V. குமாரின் நினைவு நாள் இன்று. இயக்குனர் K.பாலசந்தரின் ஆஸ்தான இசையமைப்பாளராக இருந்தவர், அறுபதுகளிலும் எழுபதுகளிலும் எத்தனையோ அற்புதமான பாடல்களை உருவாக்கியவர்.


எண்பதுகளில் குமாரின் திறமை வற்றாமல் இருந்தும் வாய்ப்புகள் வற்றிப்போயின.  வாய்ப்புகளை தேடி செல்ல அவரது சுயமரியாதை அனுமதிக்கவில்லை. மென்மையான உள்ளம் கொண்ட அவருக்கு இந்த புறக்கணிப்பு மிகுந்த வேதனை அளித்திருக்க வேண்டும். 


பக்தி பாடல்களுக்கு இசையமைத்தார். தூர்தர்ஷனில் சில மெல்லிசை நிகழ்ச்சிகள், நாடகங்களுக்கு இசையமைத்தார். அந்த வாய்ப்புகளும் நின்றுவிடவே செய்வதறியாது வீட்டிலேயே முடங்கி இருந்தார். 'ஒரு காலத்துல நாள் பூரா டெலிஃபோன் மணி அடிச்சிட்டிருக்கும். தயாரிப்பாளர்களின் கார்கள் வரிசையா வெளியே நிக்கும். ராப்பகலா கம்போஸிஷன், ரிகர்ஸல்ன்னு வீடே பரபரப்பா இருக்கும்... அதுக்கப்புறம் திடீரென்னு இந்த வெறுமை...அவ்வளவு பிஸியா இருந்தவரு வீட்ல சும்மா இருக்கிறது எவ்வளவு கஷ்டம்.... டெலிஃபோன் அடிச்சா மாதிரி இருந்ததேன்னு அப்பப்போ ஆவலா கேட்டுக்கிட்டே இருப்பாரு... ' குமாரின் மனைவி திருமதி சுவர்ணா இதையெல்லாம் என்னிடம் பகிரும்போது அவர் கண்கள் குளமாயின... குரல் கம்மியது. 


இந்த புறக்கணிப்பே காலப்போக்கில் குமாரின் உடல்நிலை மோசமாவதற்கு ஒரு காரணமாக இருந்திருக்ககூடும். 1996ஆம் வருடம் ஜனவரி 7 அன்று திரு குமாரின் மறைவு தினத்தந்தியின் உள்பக்கத்தில் ஒரு சிறிய செய்தியாய் வந்தது. அவர் வாழ்ந்தது போலவே அமைதியாய், எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் விடைப்பெற்றார்....


குமார் தானே இல்லை.. அவர் உருவாக்கிய அருமையான பாடல்கள் இன்றும் நம்மிடம் பத்திரமாக இருக்கின்றன... 


அப்படி அவர் விட்டுச்சென்ற ஒரு அரிய பொக்கிஷம் இதோ....  


இரவில் காதலர்கள் ரகசியமாக சந்திக்கிகும் வழக்கமான பாடல் காட்சி தான்... ஆனால் குமாரின் கைவண்ணத்தில் எவ்வளவு அழகாக உயிர்பெறுகிறது!  வாலியின் வரிகளை ஒரு மயிலிறகால் வருடும் மெட்டில் பூட்டுகிறார் குமார்... ஜானகியும் யேசுதாசும் அந்த அந்தரங்க தவிப்பை  தேன்சொட்டும் குரல்களில் கதகதப்பாக இசைக்கும் போது....  நம் வசம் நாமில்லையே....


ஒலியும்-


https://youtu.be/cnLXqRiTYnM?feature=shared


ஒளியும்-


https://youtu.be/-oisJNiSlwQ?feature=shared


- Saravanan Natarajan

Tuesday, January 6, 2026

Ezhaikkum kaalam varum

 🎶தென்றலின் ஓசை பாட்டாக...

தென்னையில் ஆடும் கீற்றாக...

என் மனம் ஆடும் தானாக...

கீதமே… நாதமே…. ஓடிவா….🎶


எழுபதுகளில் வந்த எண்ணற்ற  மறக்கப்பட்ட திரைப்படங்களில் மற்றொன்று, ஏழைக்கும் காலம் வரும் (1975/ சாரதா கம்பைன்ஸ்) முத்துராமன், ஸ்ரீகாந்த், சுபா நடித்திருந்தனர். 


அதிக நாள் ஓடாமல் தியேட்டரை விட்டு ஓடிப்போன இந்த படத்தை இன்றும் நம்  நினைவகத்தில் நிலைநிறுத்துவது, படத்தின் பாடல்கள். ஆம், இதுப்போன்ற படங்களுக்கு கூட அற்புதமான பாடல்களை வாரிவழங்கி சாகாவரம் பெறச்செய்த அந்த இசை வள்ளல்- V. குமார்!


இந்த படத்தில் இடம்பெற்றது தான்  இலங்கை வானொலி கொண்டாடி மகிழ்ந்த ‘ஓராயிரம் கற்பனை நூறாயிரம் சிந்தனை’.... சுசீலாம்மா குரலில் ஒரு வடிவம், SPB குரலில் மற்றொரு வடிவம். சுசீலாம்மாவின் பாடலோ ஒரு பெண் தான் காதலிக்கும் ஆடவனுக்கு விடுக்கும் ஒரு உருக்கமான வேண்டுகோள்.  SPBயின் பாடலோ இசைக்கே ஒரு ஆராதனை. 


"அவர் மிகவும் நல்ல மனிதர்…. அவருடைய பல பாடல்களைப் பாடியிருப்பது என் பாக்கியம்,...’ என்றார் SPB. சில வருடங்களுக்கு முன் ‘என்னோடு பாட்டு பாடுங்கள்’ (Jaya TV) நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளர் ‘ஒரு நாள் யாரோ’ பாடலை பாடியபோது குமார் மீது மனமார்ந்த பாராட்டுகளை குவித்த எஸ்பிபி, " எம்.எஸ். விஸ்வநாதனும் கே.வி. மகாதேவனும் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் , ஒரு புதிய இசையமைப்பாளர் தனக்கென ஒரு தனி இடத்தை செதுக்குவது என்பது சராசரி சாதனை அல்ல, குமார் அதை செய்தார். தனித்துவமான ரிதம் வடிவங்கள், வித்தியாசமான வாத்திய ஜோடனைகள், நெஞ்சையள்ளும் மெட்டுக்குளை உருவாக்கி "மெலடி" என்ற வார்த்தைக்கு புதிய அர்த்தத்தை கொண்டு வந்தார்."


இந்த பாடலை ஒரு மேற்கோளாக எடுத்துக் கொள்ளுங்கள்; பியானோவின் மெய்சிலிர்க்க வைக்கும் பிண்ணணியில், குமார் இசைக்கு ஒரு அழியா அஞ்சலியை உருவாக்குகிறார்… வாலியின் வரிகளில் இசைக்கு ஒரு கோயில் எழுப்பப்படுகிறது... அங்கு தன் குரலால் இசையெனும் கடவுளுக்கு  தேனாபிஷேகம் செய்கிறார் SPB.... இசையின் உன்னத ரசிகர்களான நமது தீரா மோகத்தையும் எதிரொலிக்கிறது பாடல்....


வி.குமாரின் நினைவு தினம் இன்று. பாசாங்கு இல்லாத, நல்ல உள்ளம் கொண்ட மெல்லிசைப் படைப்பாளி தனது பூவுலக  வாழ்க்கையை விட்டு 29 ஆண்டுகள் கடந்துவிட்டன. மண்ணுலகில், சூழ்ச்சிகள் நிறைந்த கோடம்பாக்க சினிமா உலகின் பிணைப்புகளிலிருந்து என்றென்றும் விடுவிக்கப்பட்ட அவரது ஆன்மா, விண்ணுலகில் எந்த தடையுமின்றி  இசையமைத்து மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்.


குமாரின் மனைவி பாடகி ஸ்வர்ணாம்மவோடு இன்று காலை பேசினேன். 'நீ ஃபோன் பண்ணுவேன்னு தெரியும்மா. ஒரு வருஷம் கூட இந்த தேதிய நீ மறக்கிறதில்ல. எனக்கும் அவர் நினப்பாவே இருக்கு. ராணி மாதிரி என்னை வெச்சிருந்தாரு, இப்படி தனியா தவிக்கவிட்டு போயிட்டாரு...' என்றார் வேதனையுடன். இத்தனை காலம் அவரது அக்கா ரமா அவருக்கு துணையாக இருந்தார். கடந்த வருடம் அக்காவின் மறைவுக்கு பின் ஸ்வர்ணா தனிமையில் வாடுகிறார். அன்பு மகன் சுரேஷ் அமெரிக்காவிலிருந்து அடிக்கடி ஃபோன் பேசுவது, அவ்வப்போது வந்து போவது ஒரே ஆறுதல். 


"எங்களையெல்லாம் யாரும்மா ஞாபகம் வெச்சிக்கிறாங்க..." என்றார் விரக்தியுடன். 'எப்படிம்மா அப்படி சொல்லலாம்? என்னை போல நிறைய ரசிகர்கள் குமார் சாரை நினைச்சிக்கிட்டேதாம்மா இருக்கோம்...' என்றேன் பதட்டத்துடன்.


குமார் சார் விட்டுச்சென்ற இசையின் உன்னதம் அவரை நாம் என்றென்றும் நன்றியுடன் நினைத்துப்பார்க்க வைக்கிறது. நமது காலத்துக்கு பிறகும்கூட வரும் தலைமுறைகளில் இசை ஆர்வலர்கள் குமார் சாரின் பாடல்களை கண்டெடுப்பார்கள்... அந்த மாயவலையில் கட்டுண்டு மெய்மறந்து ரசிப்பார்கள், அவரது மேதாவிலாசங்களை இனங்கண்டு வியப்பார்கள்... இந்த இசையின் மேன்மை தற்காலிக ஜாலமல்ல, அது நிலையானது, நித்தியமானது, நிரந்தரமானது...


https://youtu.be/7ljQXCTeJkA?feature=shared


🎶எத்தனைக் காலம் வாழ்ந்தாலும்...

என்னென்ன கோலம் கொண்டாலும்...

என்னுயிர் நாதம் சங்கீதம்...

கீதமே… நாதமே…. ஓடிவா….🎶


https://www.facebook.com/share/p/1CmxqmcEaR/