dhool

dhool
Click on the above image and Join the discussion in our Facebook group

Tuesday, March 19, 2024

HAPPY BIRTHDAY SHYAM


 

நல்ல சேதி சொல்ல வேண்டும்

🎵💖
இசையமைப்பாளர் திரு ஷியாமிடம் இன்று நீண்ட இடைவெளிக்கு பின் பேசினேன். பேசி சில வருடங்கள் ஆகிவிட்டதென்பதால் என்னை மீண்டும் அறிமுகம் செய்து கொண்டேன். நண்பர் சுந்தருடன் அவரது இல்லதிற்கு சென்றதை ஞாபகப்படுத்தி துபாயிலிருந்து பல முறை அவரிடம் ஃபோனில் பேசியதை கூறினேன். துபாய் என்று சொன்னவுடன் அவருக்கு ஞாபகம் வந்தது. 'ஆ... அந்த சரவணனா! சொல்லுங்க. எப்படி இருக்கிறீங்க?' என்று பரிவுடன் கேட்டார். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை ஆசையாக தெரிவித்தேன். அன்புடன் ஏற்றுக்கொண்டார்.
காலையிலிருந்து அவரது பாடல்களை கேட்டுக்கோண்டிருக்கிறேன் என்பதை சொன்னதும் சந்தோஷப்பட்டார். இன்று காலை நான் கேட்டுக்கொண்டிருந்த அவரது சில பாடல்களை சிலாகித்து கூறினேன். ரசித்து கேட்டார். உடல்நலத்தை பற்றி விசாரித்தேன். 'Hmm... ups and downs.... எனக்காக பிரார்த்தனை செய்யுங்க' என்றார். 'நிச்சயமாக சார். நான் மட்டுமில்ல... உங்களுக்கு நிறைய ரசிகர்கள் இருக்காங்க... We will all pray for your well being!' என்று கூறினேன். 'Thank you... God bless you!' என்றார் ஷியாம்.
SPB மறைந்த போது அவரை பற்றி ஷியாம் பேசிய காணொளியில் ஷியாம் இப்படி தொடங்கினார் 'நான் ஒரு இசையமைப்பாளன். என் பெயர் ஷியாம்'. மலையாளத்தில் 200 படங்களுக்கு மேல் இசையமைத்தவர், தமிழில் சில படங்களுக்கே இசையமைத்திருந்தாலும் அவற்றில் பல நல்ல பாடல்களை தந்தவர்....இப்படிப்பட்ட சாதனையாளர் இத்தனை அடக்கத்துடன் தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார். அது தான் ஷியாம்- A humble, unassuming genius!
சென்னையிலேயே பிறந்து வளர்ந்து சென்னையிலேயே பணி புரிந்து 87 வயதில் இன்றும் சென்னையிலேயே வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு தமிழரை மலையாள ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்... SPBக்கு ஒரு 'மழை தருமோ என் மேகமும்' ஜானகியம்மாவுக்கும் 'கலீர் கலீர்' என்ற காவியமும் கொடுத்த ஷியாம் அவர்களை நாமும் எவ்வளவு கொண்டாடவேண்டும்!
ஜானகியம்மா அடிக்கடி ஷியாமின் அபார திறமையை மனதார பாராட்ட நான் கேட்டிருக்கிறேன். SPB பற்றி ஷியாம் பேசிய காணொளியில் SPB தன் மேல் வைத்திருந்த அன்புக் கலந்த மரியாதையை நெழ்ச்சியுடன் விவரித்தார்.
நான் இன்று காலை கேட்டுக்கோண்டிருந்ததும் ஷியாமின் இசையில் SPB- ஜானகி பாடிய சில அருமையான டூயட் பாடல்களைத்தான்.
SPB- ஜானகி டூயட் பாடல்கள் என்றாலே நம் நினைவில் உடனே வருவது இளையராஜா- Quite naturally. ஏனென்றால் அவ்விருவரின் திறமைகளை நன்றாக அறிந்து கொண்டு அவர்களை ஊக்குவித்து அற்புதமாக பயன்படுத்தியவர் இளையராஜா.
ஆனால், அதற்கு முன்னரே சில இசையமைப்பாளர்கள் SPB- ஜானகியை ஜோடி சேர வைத்து சில அழகான பாடல்களை வழங்கியிருக்கிறார்கள். மெல்லிசை மன்னர் ( பவுர்ணமி நிலவில்/ பூங்கொடியே பூங்கொடியே/ கேள்வி கேட்கும் நேரமல்ல இது/ அங்கே வருவது யாரோ), KVM ( இரவுகளை பார்த்ததுண்டு/ கண்ணால் நடத்தும் ஒரு கதை), V. குமார் ( ஏம்மா கண்ணு), சங்கர்- கணேஷ் (ஒன்றே ஒன்று),GKV (தேன் சிந்துதே வானம்) என்று போகிறது இந்த வரிசை.
SPB- ஜானகிக்கு இப்படி அழகான பாடல்களை கொடுத்த ஆரம்பகால இசையமைப்பாளர்களின் இந்த வரிசையில் ஷியாமையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அந்த வகையில் ஷியாமின் இசையில் SPB- ஜானகி பாடிய சில அழகான டூயட் பாடல்களில் இன்று சற்று இளைப்பாறலாம்....
1974ரில் ரவிச்சந்திரன்- ஷீலா நடிப்பில் வந்த 'அப்பா அம்மா' ஷியாம் தனியாக இசையமைத்த முதல் தமிழ் படம். படம் படுதோல்வி அடைந்ததால் பாடல்களும் அதிக கவனம் பெறவில்லை.
இந்த படத்தில் 'மாட்டிக் கொண்டாயா' என்ற பாடலில் பாலுவையும் ஜானகியையும் ஜோடியாக பூட்டி வைத்தார் ஷியாம். அவ்விருவரும் சந்தோஷம் பொங்க சிரிப்பு மூட்டி விடுகிறார்கள். ஆமாம், ஒவ்வொரு வரியும் விதவிதமான சிரிப்புடன் முடிக்கும் படி வித்தியாசமாக பாடலை அமைத்திருக்கிறார் ஷியாம். பாலுவும் ஜானகியும் சிரித்துச் சிரித்து நம்மை சிறையிலிடுகிறார்கள்.
கேட்டு பாருங்கள் இந்த சிரிப்பில் உண்டாகிய சங்கீதத்தை:
* * * * * *
அடுத்து கமல்ஹாசனின் ஆரம்பகால முற்போக்கு எண்ணங்கள் கொண்ட 'உணர்ச்சிகள்' (1976) படத்திலிருந்து ஒரு பாடல். 'ராசலீலா' மலையாள படத்தின் தமிழாக்கம். R.C. சக்தியுடன் இணைந்து கமலும் கதை- திரைக்கதையில் ஈடுபட்டார். கமல், ஸ்ரீவித்யா, L. காஞ்சனா, மேஜர் என பலர் நடித்திருந்தார்கள்.
இந்த படமும் தோல்வி படமே. தமிழை பொருத்தவரை ஷியாமின் கதை இப்படித்தான்- பெரும்பாலும் தோல்வியடைந்த சிறு பட்ஜட் படங்களே அவருக்கு கிடைத்தன. நான் ஷியாமை பற்றிய என் நீண்ட கட்டுரையில் குறிபட்டிருந்ததைப்போல் பல படங்கள் வெளிவரவும் இல்லை. ஆனால், ஷியாமின் இசையில் எப்பொழுதும் ஒரு குறையும் இருந்ததில்லை.
உணர்ச்சிகள் படத்தின் இந்த SPB- ஜானகி டூயட்டை எடுத்துக்கொள்ளுங்கள். இளம் காதலர்களின் உள்ளங்களில் எவ்வளவு போராட்டங்கள் இருக்கும்... .அந்த தவிப்புகளை, தயக்கங்களை, குறும்புகளை, குழப்பங்களை எவ்வளவு நளினமாக படம்பிடிக்கிறது ஷியாமின் மெட்டும், SPB- ஜானகியின் குரலும்....
நெஞ்சத்தில் போராடும் எண்ணங்கள்:
* * * * *
மூன்றாவதாக நாம் கேட்கபோகும் பாடல் ரவீந்தர்- அம்பிகா நடிப்பில் வெளிவந்த 'இதயம் பேசுகிறது' (1982) என்ற படத்திலிருந்து ஷியாமின் இசையில் SPB- ஜானகி பாடிய இந்த ரம்மியமான பாடல். 'பூமேனி அஞ்சுமோ' என்று SPB கெஞ்சும் போதும், ஜானகி ' மயிலிறகில் மஞ்சமோ' என்று கொஞ்சும் போதும் நம் இதயங்களை கொள்ளை கொள்கிறது பாடல்.
கனவே தீண்டாதே...
கதையை தூண்டாதே...
இதயம்....இதயம்....இதயம்....
* * * * * *
அடுத்தாக வந்த சுவடு தெரியாமல் மறைந்து போன 'குப்பத்துப் பொண்ணு' என்ற விழலுக்கு ஷியாம் இறைத்த ஓர் தேனருவி... இலங்கை வானொலியிலும் விவித் பாரதியிலும் ஒரு காலத்தில் அடிக்கடி ஒலித்த பாடல்...இன்று காலத்தின் மூடுபனியில் மறைந்து போன பாடல்... இந்த அழகிய பாடலை மீட்டெடுத்து மீண்டும் ஒரு முறை கேட்கலாம்... இந்த ரெண்டு புறாக்களோடு நாமும் இசைவானம் எங்கும் மேயலாம்....
* * * * *
அதே வருடம், P.C.ஸ்ரீராமின் ஒளிப்பதிவில், ஜெயதேவியின் தயாரிப்பில், மௌலியின் இயக்கத்தில், பிரதாப்- சுஹாசினி நடிப்பில் வெளிவந்த 'நன்றி, மீண்டும் வருக' என்ற படத்தில் ஷியாமின் இசையில் ஒரு குதூகலமான காதல் டூயட்... பல்லவி எது என்று ஷியாம் நம்மை தடுமாற வைக்கும் வித்யாசமான வார்ப்பு.... இந்த பாடலை குறிப்பிட்டால் எண்பதுகளில் வானொலி கேட்டோரின் உதட்டில் ஒரு புன்னகை மலரும்... SPB and Janaki have a field day!
* * * * * *
எண்பதுகளின் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மோகன். முன்னணி நடிகையரில் ஒருவர் சரிதா. இந்த இருவரும் ஜோடி சேர்ந்து நடித்த ஒரே படம் 1984ல் ஜெயதேவி இயக்கத்தில் வெளிவந்த 'நலம், நலமறிய ஆவல்'.
இந்த படத்திலும் ஷியாமின் இசையமைப்பில் SPB- ஜானகி ஒரு அருமையான பாடலை பாடியிருக்கிறார்கள்.... ஒரே முறை இந்த பாடலை 'ஒளியும் ஓலியும்' நிகழ்ச்சியில் பார்த்தேன். வானொலியில் கேட்டதேயில்லை. ஆனால் பாடல் மனதில் தங்கிவிட்டது. பல வருடத்தேடலுக்கு பின் லண்டன் நண்பர் ஜனா இந்த பாடலை இலங்கையில் கண்டெடுத்து எனக்கு அனுப்பினார்.
வாலியின் வரிகள். ஆரம்பமே அமர்க்களம்- காதலும் மோதலும், செல்ல சிணுங்கலும்- Ah....the ecstasy of being in love!
//என் ஜன்னல் கதவை மூடி வைத்தது எதனாலே?
உன் உள்ளம் தப்பி ஓடும் அதனாலே!
என் குளியலறை மீது பூவைப்போட்டது எதனாலே?
ஓ...உனக்கென்ன தெரியும்..உன் பார்வைக் பட்டு மேனி வேகும் அதனாலே!
ஏன் கோயிலில் காணவில்லை?
வரம் கேட்டது கிடைத்ததம்மா!
என் தந்தையை சந்தித்ததேன்?
கல்யாணம் கட்டத்தான்..... கெட்டிமேளம் கொட்டத்தான்.....!
நல்ல சேதி சொல்ல வேண்டும்...
என் பக்கம் வந்தால் என்ன!//
கல்யாணமென்றவுடன் ஷியாம் மங்களகரமான நாதஸ்வரத்தை ஒலிக்கச்செய்கிறார்... இரண்டாவது இடையிசையை சித்தாரும் ஜானகியும் தனதாக்கிக்கொள்கிறார்கள்.... எவ்வளவு அழகான பாடல்!
* * * * * *
எத்தனையோ அழகான பாடல்களை ஷியாம் சார் தந்திருக்கிறார். ஆனால் இன்று தொலைக்காட்சியிலோ வானொலியிலோ அவை ஒளிக்க/ ஒலிக்க செய்வதில்லை. ஷியாம் சாரின் பிறந்த நாளில் இந்த ஆறு பாடல்களை பதிவிடுகிறேன். அவை மீண்டும் இசை ரசிகர்களின் செவிகளில் வளம் வந்தால் என் ஆதங்கம் சற்றேனும் ஆறும். நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ?

- Saravanan Natarajan

Wednesday, March 6, 2024

ஜெயச்சந்திரன்- 80ஆவது பிறந்த நாள்- 40 இசையமைப்பாளர்கள்

  


இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே

🎵💖
ஜெயச்சந்திரன்- 80ஆவது பிறந்த நாள்- 40 இசையமைப்பாளர்கள் 💖
2016 மார்ச் மாதம் ஒரு அழகான மாலை வேளையில் ஜெயச்சந்திரன் சாரை சந்தித்தேன். முதலில் அவர் வீட்டில் தான் சந்திப்பதாக இருந்தது. பின் ஏதோ வேலையாக மயிலாப்பூருக்கு வந்தவர், 'வுட்லேன்ஸல சந்திக்கலாமா? அவங்களோட சாம்பார் வடை எனக்கு ரொம்ப பிடிக்கும்'! என்றார் குழந்தையைப்போல...
அன்று ஆறஅமர இரண்டு மணி நேரம் பேசினோம். அதற்கு பிறகு ஒரு ஓணம் நிகழ்ச்சியில் பங்கேற்று பாட அவர் ஷார்ஜா வந்திருந்த போதும் சந்தித்து பேசினோம். ஃபோனிலும் அவ்வப்போது பேசுவதுண்டு.
ஆனாலும், அந்த முதல் சந்திப்பின் நினைவுகளை தான் இன்றும் பசுமையாக அசைபோட்டுக் கொண்டிருக்கிறேன். எனக்கு பிடித்த அவரின் பாடல்களை ஒவ்வொன்றாய் நினைவுகூர்ந்து நான் சொல்ல சொல்ல மிகவும் ரசித்தது தன்னுடைய அனுபவங்களையும் அபிப்ராயங்களையும் எந்த ஒளிவுமறைவும் இல்லாமல் உற்சாகமாக பகிர்ந்துக்கொண்டார்.
மலையாளத்திலும் அருமையான வாய்ப்புகளை வழங்கி, தமிழிலும் தன்னை அட்டகாசமாக அறிமுகப்படுத்தி பல அழகான பாடல்களை பாடச்செய்த மெல்லிசை மன்னர் மேல் நெகிழ்ச்சியான பக்தி. இளையராஜாவின் அபார ஆற்றல் மேல் தனி மரியாதை. 'விழியோ உறங்கவில்லை', 'கண்ணனின் சந்நிதியில்', 'அன்பே உன் பேரென்ன ரதியோ', ' ராஜா வாடா சிங்கக்குட்டி' 'கண்ணன் முகம் காண', 'அமுத தமிழில்', 'Swing swing உனது ஊஞ்சல் நான்' போன்ற பாடல்களை நான் பட்டியலிட அவர் கண்களில் ஒரு மின்னல் வந்துப் போனது.
'அலையே கடல் அலையை', 'வெள்ளி நிலாவினினலே', 'செந்தூரக்கோலம் என் சிங்காரதீபம்', 'ராஜா பொண்ணு அடி வாடியம்மா', 'பூந்தென்றலே', 'கீதா சங்கீதா', 'நெஞ்சில் உள்ள காயமொன்று' என்று ஆரம்பகால இளையராஜாவின் இசையலைகளில் ஜெயச்சந்திரனும் சுகமாக வளம் வந்ததை ஆசையாய் நினைத்துப்பார்தோம். 'காற்றினிலே வரும் கீதம்', 'வைதேகி காத்திருந்தாள்', 'நானே ராஜா நானே மந்திரி', ' என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்', 'தழுவாத கைகள்' போன்ற ஜெயச்சந்தினை முன்னிறுத்தி வந்த இளையராஜாவின் ஆல்பங்களை குறிப்பிட்டதும் உணர்ச்சிவசப்பட்டார். ' ஒரு யாத்ராமொழி' படத்தின் 'மஞ்சோலும் ராத்திரி மாஞ்சு' பாடல் சில வரிகளை பாடினார்.
KVM பற்றி பேசினோம். 'அவரது இசையில் ஒரு பாடலை பாடி முடித்தவுடன் என்னை மிகவும் பாராட்டினார்...' என்றார். ' எங்கெங்கும் அவள் முகம்', '' எத்தனை அவதாரம் அடடா', ' மாளிகையானாலும் மலர்வனமானாலும்' என்று KVMமின் இசையில் ஜெயச்சந்திரன் பாடிய பாடல்களை ஒவ்வொன்றாக குறிப்பிட்டு இதுவா எனக்கேட்டேன். 'இல்லை...இல்லை... வேறொரு பாட்டு- கூட பாடினது சுசீலாம்மான்னு ஞாபகம்' என்றார். 'திருநாளும் வருமோ சுவாமி' என்று நான் பாட அரம்பித்தவுடன் என் கையைப்பற்றி 'அதே அதே!' என்றார் மகிழ்ச்சியாக.
குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் 'மலரோ நிலவோ மலைமகளோ' பாடலை வியந்து பாராட்டினேன். 'மிகவும் சவாலான பாடல்... நல்லா encourage செய்து பாட வைத்தார்' என்றார். சங்கர்- கணேஷ் இசையில் 'பால் நிலவு காய்ந்ததே' பாடலை என் வேண்டுகோளை ஏற்று மேஜையின் மேல் தாளம் போட்டபடி அழகாய் பாடினார். மணி- ராஜா ( மரகதமணி- ராஜாமணி) இசையில் 'கிராமத்து கிளிகள்' படத்தின் 'கன்னிப்பெண் கன்னத்தின் காயங்களே' பாடலை நான் சிலாகித்த போது ஆச்சரியமாக பார்த்தார். ஓட்டலிலிருந்து கிளம்பும்போது 'சொன்னா நம்பமாட்டீங்க' என்ற படத்தில் K. லக்ஷ்மிநாராயணன் என்பவரின் இசையில் 'வளர்பிறை நிலவே நீ எங்கே' என்ற பாடலை நான் நினைவுப்படுத்தியதும் என்னை வாரி அணைத்துக்கொண்டார்!
1973 முதல் 2020 வரை தமிழ் திரையிசையில் தன் நீண்ட இசைப்பயணத்தில் எத்தனை இசையமைப்பாளர்களின் இசையில் பாடியிருப்பார் ஜெயச்சந்திரன்!
இன்று அவரது 80வது பிறந்த நாளில் 40 இசையமைப்பாளர்களின் இசையில் ஜெயச்சந்திரனின் பாடல் பட்டியலை தொகுத்து சமர்ப்பிக்கிறேன்- விஸ்வநாதனிலிருந்து சன்னி விஸ்வநாத் வரை எவ்வளவு இனிமையான பயணம் 💖
1. M.S. விஸ்வநாதன்- அலைகள்
2. K.V. மகாதேவன்- நெருப்பிலே பூத்த மலர்
3. V. தட்சிணாமூர்த்தி- நந்தா என் நிலா
4. குன்னக்குடி வைத்தியநாதன்- ராக பந்தங்கள்
5. G.K. வெங்கடேஷ்- பெண்ணின் வாழ்க்கை
6. சலீல் சவுத்ரி- அழியாத கோலங்கள்
7. V. குமார்- தூண்டில் மீன்
8. சங்கர்- கணேஷ்- யாரோ அழைக்கிறார்கள்
9. G. தேவராஜன்- வாழ்வு மலர்ந்தது
10. இளையராஜா- கிழக்கே போகும் ரயில்
11.ஷியாம்- ஜாதிப்பூக்கள்
12. சந்திரபோஸ்- தரையில் வாழும் மீன்கள்
13.கங்கை அமரன்- ராமாயி வயசுக்கு வந்துட்டா
14. T. ராஜேந்தர்-A.A.ராஜ் - ஒரு தலை ராகம்
15.ஸ்ரீகுமார்- சரிகமப
16. கண்ணன் லதா- புதிய பூவிது
17. T. ராஜேந்தர்- இரயில் பயணங்களில்
18. R. ராமானுஜம்- அன்ன பறவை
19. விஜயரமணி- யாகசாலை
20. ஸ்டாலின் வரதராஜன்- நூலறுந்த பட்டம்
21. L. வைத்தியநாதன்- லாட்டரி டிக்கட்
22. V.S. நரசிம்மன்- யார்
23. தேவேந்திரன்- காலையும் நீயே மாலையும் நீயே
24. K. லக்ஷமிநாராயணன்- சொன்னா நம்மமாட்டீங்க
25. ரவீந்திரன்- ரசிகன் ஒரு ரசிகை
26. மனோஜ்- கியான்- செந்தூரப்பூவே
27. S.A.ராஜ்குமார்- சின்னப்பூவே மெல்ல பேசு
28. சவுந்தர்யன்- சேரன் சோழன் பாண்டியன்
29. கியான் வர்மா- இணைந்த கைகள்
30. A.R. ரஹ்மான்- மே மாதம்
31. S. தாணு- புது பாடகன்
32. வித்யாசாகர்- பசும்பொன்
33. தேவா- சொக்க தங்கம்
34. S.P. வெங்கடேஷ் ( சங்கீதராஜன்)- இதுதாண்டா சட்டம்
35. பரணி- சுந்தரா டிராவல்ஸ்
36. G.V. பிரகாஷ்- கிரீடம்
37. மரகதமணி - தேவராகம்
38. ஸ்ரீகாந்த் தேவா- வெற்றிவேல் சக்திவேல்
39. அருண் கோபன்- அமுதா
40. சன்னி விஸ்வநாத்- வன்முறை
Happy Birthday Jayachandran Sir💖
- Saravanan Natarajan

தசாப்தங்களை கடந்த இசை சாம்ராஜ்யம்...
பாடகர் ஜெயச்சந்திரனின் பாட்டுப்பயணத்தை அவரது பிறந்த நாளில் நான் பட்டியலிட்டுக்கொண்டிருந்த போது ஒரு குறிப்பிட்ட இசையமைப்பாளரின் இசையில் ஜெயச்சந்திரன் பாடிய ஒரு பாடலை பட்டியலில் சேர்த்ததும் நினைவுகள் எங்கோ போயின. ஆனால் அப்போது அந்த பட்டியலிலிருந்து கவனத்தை சிதற விடாமல் இருக்க அந்த நினைவுகளை சற்று தள்ளி வைத்தேன்.
ஆனால் அந்த நினைவுகள் என்னை அவ்வளவு எளிதாக விடுவாதாயில்லை. இன்று அதை பற்றி சொல்கிறேன்....
நான் துபாயில் வசித்து வந்த காலக்கட்டத்தில் வெள்ளிதோரும் இரவு மலையாள பண்பலையில் 'பாட்டின்டே பாழாலி' என்ற நிகழ்ச்சியை தவறாமல் கேட்பேன். அப்படி வெள்ளிக்கிழமை மாலை எங்காவது வெளிய செல்ல நேரிட்டால், மறுநாள் அதே நிகழ்ச்சி மறு ஒலிபரப்பு செய்யப்படும் போது கேட்டுவிடுவேன்.
அந்த நிகழ்ச்சி ஏன் மனதை அந்த அளவுக்கு கவர்ந்ததென்றால் பழைய பாடல்களை, பல அரிய பாடல்களை எடுத்துக்கொண்டு அந்த பாடல் உருவான பிண்ணனியை வெகு சுவாரஸ்யமாக விவரித்து பாடலை ஒலிபரப்புவார்கள்.
ஒரு வெள்ளி இரவு, நான் பாதி தூக்கத்தில் இருந்த போது, நிகழ்ச்சியின் இறுதியாக ஒரு பாடலை அறிமுகப்படுத்தி ஒலிபரப்பினார்கள். அறிமுகத்தை தூக்கக்கலக்கத்தில் சரியாக கேட்கவில்லை. ஆனால் பாடலை கேட்ட போது வியப்பில் விழித்துக்கொண்டேன்...."இது 'அந்த' தமிழ் பாட்டு மாதிரியே இருக்கே" என்று அடையாளம் கண்டு கொண்டேன்.... ஆனால் அதற்கு பிறகு அந்த மலையாள பாடலை கேட்கவேயில்லை...அதை பற்றி விவரங்களும் தெரியவில்லை...
சமீபத்தில் நண்பர் சுந்தர் என்னுடன் ஒரு பாடலை பகிர்ந்திருந்தார்... இரு தினங்களுக்கு பின் தான் அதை கேட்க நேரம் கிடைத்தது. என்ன ஆச்சரியம்- நான் பல வருடங்களாக தேடி கொண்டிருந்த அதே ' ஒரு கான சாம்ராஜ்யம்' மலையாள பாடல்!
மோகனகல்யாணியின் சில இழைகளை கொண்டு நெய்யப்பட்ட ஒரு பழங்காலத்து பட்டாடை! 1953ல் பதிவான பாடல்- இன்றும் நிறம் மாறாத பூவைப்போல மிக அழகாக ஜொலிக்கிறது...
விவரங்களை கொஞ்சம் தேடிப்பார்த்தால் இந்த பாடல் ஒரு திரைப்பாடலல்ல எனத்தெரிய வருகிறது. 1953யில் மேடையேறிய 'நூர்ஜஹான்' என்ற மலையாள நாடகத்திற்காக தட்சிணாமூர்த்தி சுவாமியின் இசையில் உருவான ரம்மியமான ஜோடிப்பாடல். பாடியிருப்பவர்கள் P. லீலா மற்றும் கட்டஞ்சேரி அகஸ்டின் ஜோசெஃப். இந்த ஜோசெஃப் யார் தெரியுமா? K.J. யேசுதாஸின் பெயரில் அந்த 'J'க்கு உரிமையாளர்- ஆம், யேசுதாஸின் தந்தை! பாடலை கேட்டுப்பாருங்கள்- 'வசந்தமும் வந்நு' என்று லீலா அடிக்கோடிடும்போது நம் அடிமனதிலும் வசந்தம் பரவுகிறது...
தட்சிணாமூர்த்தி சுவாமியின் அடிமனதிலும் இந்த ' ஒரு கான சாம்ராஜ்யம்' பாடல் தங்கிவிட்டது போலும். கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் கழித்து 'நந்தா என் நிலா' படத்தில் ஒரு காதல் டூயட் பாடலுக்கு இந்த மெட்டையே பயன்படுத்தினால் என்ன என்று தோன்றியிருக்கிறது. ஆனால் அந்த மெட்டை அப்படியேவா பயன்படுத்தினார்? இல்லை, அந்த மேதை ஐம்பதுகளில் தான் அமைத்த மெட்டில் எழுபதுகளுக்கு ஏற்றாற்போல் சில மாற்றங்களை செய்து, சிந்தசைஸர் போன்ற நவீன கருவிகளுடன் ஒரு புதுப்பொலிவுடன் நளினமாக மெருகேற்றுகிறார்.
நா. காமராசனை அழைத்து வந்து அந்த பழைய 'ஒரு கான சாம்ராஜ்யம்' பாடலை கேட்கச் செய்து, இந்த புதிய மெட்டையும் வாசித்து காண்பிக்கிறார் சுவாமி. நா. காமராசன் அந்த 'சாம்ராஜ்யத்தை' பற்றிக்கொள்கிறார். 'ஒரு கான சாம்ராஜ்யம்' இப்போது காமராசனின் பேனாவில் ' ஒரு காதல் சாம்ராஜம்' என பிரம்மாண்டமாக விரிகிறது.
எவ்வளவு அழகான கற்பனை பாருங்கள்-
ஒரு காதல் சாம்ராஜ்யம் கண்ணில் வரைந்தாள்...
கனவென்னும் முடிசூடி கன்னம் கன்னம் சிவந்தாள்....
எப்படிப்பட்ட கண்கள் அவை! ஒரு காதல் சாம்ராஜியத்தையே உருவாக்கும் எழில் படைத்தவை... அந்த காதல் சாம்ராஜியத்தில் கனவுகளால் அலங்கரிக்கப்பட்ட மகுடத்தை சூடி, காதலன் செய்யும் குறும்புகளால் நாணி கன்னம் சிவக்கிறாள்...
இப்படி காமரசம் சொட்டும் காமராசனின் கவித்துவமான வரிகளை பாட ஜெயச்சந்திரனையும் T.K. கலாவையும் அழைக்கிறார் சுவாமி. சரணங்களும் கொள்ளை அழகு! பல்லவியை ஒவ்வொரு முறையும் இரண்டு பேரையும் சேர்த்தே பாடவைக்கிறார் சுவாமி- மன்மதனும் ரதியும் ஒருசேர உலா வருவது போல்....
கேட்டுப் பாருங்கள்:
சுவாமியின் மகள் திருமதி கோமதிஸ்ரீயிடம் இந்த இரு பாடல்களை பற்றி இன்று காலை சிலாகித்து பேசிக்கொண்டிருந்தேன். பாவம், எப்படி தான் என் அன்புத் தொல்லையை பொறுத்து கொள்கிறாரோ!
25 வருட இடைவெளியில் ஒரே மெட்டைச்சார்ந்த இரு வேறு பாடல்கள்... காலங்களை கடந்து நம்மை பார்த்து புன்னகைக்கிறார் சுவாமி....



- Saravanan Natarajan