(சற்று தாமதமான) நினைவாஞ்சலி - K.J. ஜாய் (14.6.1947- 15.1.2024)
லண்டன் சவுத்ஹாலில் பிரபலமான ஒரு இந்திய ரெஸ்டாரென்டில் 2007இல் ஒரு மழைக்கால மாலைப்பொழுது. பிரபலமான ஹிந்தி பாடல்களை அக்கார்டியனில் அற்புதமாய் வாசித்துக் கொண்டிருந்தார் அந்த கலைஞர். விழலுக்கு இறைத்த நீர்- அங்கே உணவருந்த வந்தவர்கள் யாரும் அந்த இசையை கவனித்தாக தெரியவில்லை. நான் அந்த கலைஞர் நின்றிருந்த மேடைக்கு அருகில் இருந்த டேபிளுக்கு மாறினேன்... பேச்சு சத்தத்தை தவிர்த்து அந்த உன்னத இசையை இன்னும் ஆழமாய்
ரசிப்பதற்காக...
லண்டன் அருகில் இருந்த பேஸிங் ஸ்டாக்கில் எனக்கு அப்பொழுது இரண்டு மாத வேலை. இந்திய உணவுக்காக ஏங்கி போயிருந்த என் மேல் கருணைக்கொண்டு ஒரு நண்பர் அன்று அந்த உணவகத்துக்கு அழைத்து சென்றிருந்தார்.
வாசித்து முடித்ததும் எழுந்த லேசான கரகோஷத்திற்கிடையே அந்த ஓட்டலின் மேலாளர் ஒருவர் அந்த இசைக்கலைஞருக்கு பரிசளித்து ஓரிரு வார்த்தைகள் அவரை பாராட்டி பேசினார். அந்த கலைஞரின் பெயர் K.J. ஜாய் என்று குறிப்பிட்டார். அந்த பெயரை கேட்டதும் ஆச்சரியத்துடன் எழுந்து அக்கார்டியனை சுமந்த நின்றிருந்த அந்த கலைஞரை நோக்கி விரைந்தேன். அவரின் கையை பற்றி பல அற்புத மலையாள பாடல்களுக்கு இசையமைத்த அதே K.J. ஜாய் தானா அவர் என்று ஆங்கிலத்தில் ஆவலாக கேட்டேன். புன்சிரிப்புடன் ஆமாம் என்றார். 'மலையாளியானு?' என்று என்னை விசாரித்தார். 'இல்லை, தமிழ்' என்று நான் கூறியதும் என்னை ஆச்சரியமாய் பார்த்தார்.
அவரின் ஆச்சரியம் நியாயமானது. மலையாளத்தில் 71 படங்களுக்கு இசையமைத்து அருமையான பாடல்களை கொடுத்திருந்தாலும் தமிழில் ஜாய்க்கு கிடைத்திருந்தது வெகு சில வாய்ப்புகளே. அதுவும் ஜாய் அதிகமாக பணியாற்றிய எழுபதுகளிலும் எண்பதுகளிலும் கேபில் டீவி இல்லை, OTT கிடையாது, யூடியூப் இல்லை, இணையமே இல்லை... அதனால் கேரளத்துக்கு வெளியே ஜாய் அவர்களை பற்றியோ, அவரின் பாடல்களை பற்றியோ அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ரேடியோ கேட்டு வளர்ந்த என் தலைமுறையினருக்கு விவித் பாரதியின் 'மதுர் கீதம்' நிகழ்ச்சி நிச்சயம் நினைவிருக்கும். தினமும் மாலை 4.30யிலிருந்து 5.30 வரை ஒலிபரப்பாகிய மதுர்கீதத்தில் நான்கு தென்னக மொழிகளிலிருந்து பாடல்கள் இடம்பெறும். மலையாள பாடல்களுக்கென்ன ஒதுக்கப்பட்ட 15 நிமிடங்களில் ஜாய் சாரின் பாடல்களை கேட்டு ரசித்திருக்கிறேன். மேலும், துபாயில் நான் இருந்த வருடங்களில் மலையாள பண்பலையில் ஜாய் சார் இசையமைத்த இன்னும் பல பாடல்களை கேட்கும்போது அவரின் இசைவீச்சுகள் பிடிப்பட்டன.
ஜாய் சாரின் ஆச்சரியமான பார்வைக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இசையமைத்த 'சிப்பியின் உள்ளே முத்தாடும் செய்தி' என்று தொடங்கும் எனக்கு மிகவும் பிடித்த தமிழ் பாடலின் பல்லவியை சன்னமாக பாடினேன். 'உன் மகனாய் நான் வரவோ' என்று நான் முடித்தவுடன், அதன் பின் வரும் இசையை உற்சாகமாக அக்கார்டியனில் வாசித்தார் ஜாய். ( எழுத்தாளர் சுஜாதாவின் 'ஜன்னல் மலர்' என்ற கதை 1979இல் ஸ்ரீகாந்த்- ஸ்ரீப்ரியா நடிக்க 'யாருக்கு யார் காவல்' என்ற திரைப்படமாக வந்தது. அதில் K.J. ஜாய் இசையமைத்த பாடல் இது- இளையராஜாவின் பேரலையை மீறி எண்பதுகளில் கூட வானொலியில் அடிக்கடி நேயர் விருப்பமாக ஒலிபரப்பட்ட பாடல்)
நான் ஜாய் சாரிடம் உரையாடியதையும், அதையடுத்து அவர் உற்சாகமாக வாசித்ததையும் கவனித்த அந்த ரெஸ்டாரென்ட்டில் உணவருந்திக் கொண்டிருந்த சிலர் அப்பொழுது எழுந்து நின்று கைத்தட்டினார்கள். அந்த பாராட்டுதலை சிரம் தாழ்த்தி ஏற்றுக்கொண்ட ஜாய் சாரின் முகத்தில் சொல்லொன்னா சந்தோஷம்.
பேஸிங் ஸ்டாக்குக்கு திரும்பிச்செல்லும் போது காரில் என் நண்பரிடம் ஜாய் பற்றியும் அவர் இசையமைத்த பாடல்களைப்பற்றியும் பேசிக்கொண்டே சென்றேன். நண்பர் மலையாளியாக இருந்த போதிலும் லண்டனிலேயே பிறந்து வளர்ந்ததால் ஜாயை பற்றி கேள்விப்பட்டிருக்கவில்லை. எப்படியெல்லாம் திரையிசை உலகில் கோலோச்சியவர் இன்று இப்படி யாரும் கண்டுக்கொள்ளாத இடத்தில் வாசித்துக்கொண்டிருக்கிறாரே என்று என் மனம் தவியாய் தவித்தது...
சாஸ்திரிய சங்கீதத்தின் நிழலில் இருந்து மலையாள திரையிசையை மெல்லிசைக்கு மெல்ல அழைத்து வந்தவர் பாபுராஜ். பின் எழுபதுகளில் சலீல் சவுத்ரி அமைத்துக்கொடுத்த இன்னிசை பாதையில் மலையாள திரையிசையை அழகாக தாங்கி சென்ற மூவர் - ஷியாம், A.T. உம்மர் மற்றும் K.J. ஜாய்.
கேரளாவில் பிறந்திருந்தாலும் ஜாய் வளர்ந்தது சென்னையில் தான். சிறு வயதில் வயலின் கற்றார். பின்பு அக்கார்டியனின் கணீர் ஒலி அவர் மனதை கவரவே, அதை தானாகவே கற்றுக்கொண்டார்.
மெல்லிசை மன்னரின் குழுவில் சேர்ந்து அவர் முதல்முதலில் அக்கார்டியன் வாசித்த திரைப்பாடல் 1967இல் வெளிவந்த 'பெண் என்றால் பெண்' படத்தில் சுசீலாம்மா பாடிய 'தேடி தேடி காத்திருந்தேன்'. MSVயின் குழுவில் மங்களமூர்த்தி, பென் சுரேந்தர் போன்ற ஜாம்பவான்கள் ஏற்கனவே அக்கார்டியன் வாசித்துக்கொண்டிருந்தார்கள். பின்பு செல்லப்பா, ராஜ்குமார் போன்றோரும் வாசித்தார்கள். ஆனாலும் MSVக்கு ஏனோ ஜாய் மீது அளவற்ற பாசம்.
தென்னக சினிமாவில் முதன்முதலில் கீபோர்ட் சொந்தமாக வாங்கி, அதை வாசித்தது ஜாய். 1969இல் இந்தி இசையமைப்பாளர்கள் சங்கர்-ஜெய்கிஷனிடம் அந்த Yamaha YC-30 கீபோர்டை ( தன் காரை விற்று) 20,000 ரூபாய் கொடுத்து வாங்கினாராம் ஜாய்! இசை மீது அப்படி ஒரு ஆர்வம்!
MSVயை தவிர KVM, தட்சிணாமூர்த்தி சுவாமி, ராஜன்- நாகேந்திரா உட்பட ஏராளமான தென்னகத்து இசையமைப்பாளர்களுக்கும், பம்பாய் சென்று நௌஷாத், மதன் மோகன், லக்ஷ்மிகாந்த்- பியாரேலால், R.D. பர்மன் போன்ற மேதைகளின் குழுக்களிலும் ஜாய் வாசித்திருக்கிறார்.
ஜாய் தனி இசையமைப்பாளராக அறிமுகமான படம்- 1975இல் வெளிவந்த 'Love Letter'. அடுத்த பதினைந்து ஆண்டுகளில் மலையாள திரையிசை வானில் ஜாய் ஒரு வானம்பாடியாய் வலம் வந்தார்.
சுசீலாம்மா, ஜானகிம்மா, வாணிம்மா, ஜெயச்சந்திரன் சார் எல்லோரும் ஜாய் அவர்களின் திறமையை என்னிடம் சிலாகிக்க கேட்டிருக்கிறேன்.
இதோ அவரது இசையில் எனக்கு மிகவும் பிடித்த சில மலையாள பாடல்கள்:
1.யேசுதாஸ், ஜானகி குரல்களில், படம்- ஆராதனா:
2.யேசுதாஸ், படம்: ஓர்மகளே விட தரு
3.யேசுதாஸ், ஜானகி. படம்- அனுபல்லவி
4.யேசுதாஸ், ஜானகி. படம்- ஆராதனா
5. யேசுதாஸ், ஜானகி. படம்- பாப்பு
6. ஜெயச்சந்திரன், படம்- முத்துச்சிப்பிக்கள்
8. யேசுதாஸ், படம்- சக்தி (கிருஷ்ணசந்திரனுக்கு யேசுதாஸ் குரல்!)
9. யேசுதாஸ், படம்- மனுஷ்யம்ருகா
10. யேசுதாஸ், SPB, P. சுசீலா, வாணி ஜெயராம் (நால்வரும் சேர்ந்து பாடிய ஒரே பாடல் இதுவாகத்தான் இருக்கும்) படம்- சர்ப்பம்
'யாருக்கு யார் காவல்' படம் வந்த சுவடு தெரியாமல் போனது. அதில் அத்தனை அருமையான பாடலை கொடுத்திருந்தும் ஜாய்க்கு தமிழில் வாய்ப்புகள் குவியவில்லை. கிடைத்த ஒன்றிரண்டு படங்களும் படுதோல்வி அடைந்தன அல்லது வெளிவரவேயில்லை. ஆனாலும் அவற்றிலும் ஜாய் அழகான பாடல்களை தந்திருக்கிறார்:
படம்: வெளிச்சம் விளக்கை தேடுகிறது. பாடியது- TMS
படம்: கொம்புத்தேன் ( கோபால் ஸ்ரீபதியுடன் சேர்ந்து ஜாய் இசையமைத்தாக தெரிகிறது). பாடியது- TMS, P.சுசீலா
படம்: அந்தரங்கம் ஊமையானது
பாடியது- SPB, S.ஜானகி
படம்: அந்தரங்கம் ஊமையானது
பாடியது- யேசுதாஸ்
1978இல் வெளிவந்த அகல்யா என்ற படத்தில் ஜாயின் இசையில் ஜானகிம்மா பாடிய இந்த 'லலிதா சஹஸ்ரநாம ஜபங்கள்' பாடலை கேட்டுப்பாருங்கள்- அமைதி சூழ்ந்த ஆனந்தம் உங்களை ஆட்கொள்ளும்...
பக்கவாதம் வந்து பல வருடங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த ஜாய் சார் சென்ற 15ஆம் தேதி ஆரவாரமின்றி இயற்கை எய்தினார். மலையாள இணையத்தளங்களில் அவரின் மறைவுச்செய்தி உடனே அறிவிக்கப்பட்டது. கேரள முதல்வர் தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.
மறுநாள் மாலை ஜானகிம்மாவின் அழைப்பு. ' ஜாய் போயிட்டாராமே....' என்று ஆரம்பித்து ஜாயின் இசையில் தான் பாடிய பாடல்கள் சிலவற்றை நினைவுகூர்ந்தார். நானும் சிலவற்றை நினைவுப்படுத்தினேன். பிறகு ஜானகிம்மா சொன்னார், 'ரெண்டு வருஷத்துக்கு முன்னால அவரைப்போய் பார்த்தேன். படுத்த படுக்கையாய் இருந்தார்...ஆனாலும் என்னை பார்த்ததும் சந்தோஷமாயிட்டாரு. ரெண்டு- மூணு பாட்டு நான் பாட, அவரும் சேர்ந்து பாடினாரு. ரெக்கார்டிங் போது நடந்த சம்பவங்கள ஞாபக படுத்தி சிரிச்சிக்கிட்டோம்.... இப்போ அவரும் போயிட்டாரு. ஒவ்வொருத்தரா போயிட்டிருக்காங்க... பழைய ஞாபகங்கள பகிர்ந்திக்கக்கூட யாருமில்ல... இன்னும் நான் தான்...' என்ற அவர் தொடரும் முன் பேச்சை மாற்றினேன்... ஆனாலும் அவர் பேச்சில் தென்பட்ட வெறுமை என்னை வாட்டிக்கொண்டிருக்கிறது....
17ஆம் தேதி ஒரு சிறிய மலர்கொத்தை வாங்கிக்கொண்டு நான் சென்ற இடம் சென்னை சாந்தோமில் ஒரு வீடு. அன்று மாலை நல்லடக்கம் செய்யும்முன் அந்த வீட்டில் கிடத்தப்பட்டிருந்தது K.J. ஜாயின் உடல்.
நாலைந்து பேர் மலையாளத்தில் பேசிக்கொண்டிருந்தார்கள். கண்ணாடி பெட்டியின் உள்ளே தூய வெள்ளை வேட்டி, சட்டை அணிவிக்கப்பட்டு அமைதியாய் கிடந்தார் ஜாய். லண்டனில் நான் கண்ட ஆறடி உயர ஆஜானுபாகுவான ஜாய் பலவருட நோயின் அலைக்கழிப்பில் வெறும் எலும்புக்கூட்டாய் இளைத்திருந்தார். கொண்டு சென்ற மலர்களை அந்த பெட்டியின் மீது வைத்தேன். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அவரது அழகான புகைப்படம் பக்கத்தில் வைக்க பட்டிருந்தது. வணங்கிவிட்டு கதவை நோக்கி திரும்பினேன்.
வாசலில் அழுது சிவந்த முகத்துடன் ஒரு பெண் அமர்ந்திருந்தார். கண்கள் சந்தித்த போது நான் அங்கு வந்ததற்கு நன்றியுடன் கைக்கூப்பினார். ' Are you the person who called? ' என்று கேட்டார். அன்று காலை இந்து பேப்பரில் ஜாய் அவர்களின் படம் போட்டு வந்திருந்த Obituary தகவலை பார்த்து அதில் குறிப்பிட்டிருந்த ஃபோன் நம்பரை அழைத்து ' Can even members of the general public come and pay their respects to Joy Sir?' என்று கேட்டேன். 'You are most welcome" என்று பதிலளித்த பெண்ணிடம் நன்றி கூறி, அவர்களின் முகவரியை தெரிந்துக்கொண்ட பின்பு தான் அங்கு சென்றிருந்தேன்...
அதை வைத்து தான் அவர் என்னை பார்த்ததும் ஃபோனில் அழைத்தது நான் தானா என்று கேட்டார். நான் ஆமாம் என்று சொன்னதும் தன்னை ஜாய் அவர்களின் மகள் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். 'And, you?' என்று கேட்டார் என்னை பார்த்து. 'Oh, I'm just a fan!' என்றேன் சற்று சங்கோஜத்துடன். இத்தனை வருடங்களும் சென்னையிலே தான் இருந்திருக்கிறார்கள். தெரிந்திருந்தால் ஜாய் சார் உயிருடன் இருக்கும்போதே அவரை சென்று பார்த்திருப்பேனே....
'மலையாளியானு?' என்று இவரும் கேட்டார். "இல்லை, நான் தமிழ்" என்றதும் தந்தையைப்போல மகளும் என்னை ஆச்சரியமாக பார்த்தார்...
Adieos Joy Sir! Thank you for enriching our lives with countless joys