நீ தானா நெசந்தானா..நெசந்தானா.........
நிக்க வச்சு நிக்க வச்சு பாக்குறேன்..
இன்று கங்கை அமரன் சாரின் பிறந்தநாள். சாருடன் எங்கள் சந்திப்பு நினைவுகளின் அடுத்த பாகத்தை இந்த இனிய நாளில் தொடர்கிறேன்....
'ஒரு விடுகதை ஒரு தொடர்கதை' மற்றும் 'கரை கடந்த ஒருத்தி' கங்கை அமரனின் இசையில் வெளிவந்த முதல் இரு படங்களாக இருக்கலாம், ஆனால் அவர் முதல் முதலில் இசையமைத்த படம் 'மலர்களிலே அவள் மல்லிகை'. துரதிர்ஷ்டவசமாக அந்த படம் வெளிவரவில்லை. அந்த படத்தை பற்றி பேசினோம்.
"மாஸ்டர் சேகர் தானே சார் ஹீரோ?" என்று கேட்டேன். " ஆமாம், சங்கீதா ஹீரோயின். முக்காவாசி படத்தை எடுத்துட்டாங்க... அப்புறம் ஏதோ காரணத்தில நின்னு போச்சு..." என்றார் அமரன். படத்தின் இசைத்தட்டிலிருந்து கிடைத்த தகவல்கள்- தயாரிப்பாளர்கள்- சுகுமார் & விஜயகுமார். இயக்குனர்- ஆனந்த்.
"நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல... நான் பாட்டும் அண்ணன் ட்ரூப்ல வேல செஞ்சிக்கிட்கடு, சான்ஸ் கிடைக்கும்போது பாட்டு எழுதிக்கிட்டு இருந்தேன்... ம்யூசிக் பண்ணனும்னு யோசிக்கல... தயக்கமா தான் இருந்தது.... ஆனா ரொம்ப வற்புந்தினாங்க... எனக்கும் அப்புறம் பண்ணலாம்னு ஆசை வந்திச்சு....'"
இந்த படத்திற்காக "இசையினிலே ராகங்கள் பல நூறு" என்ற பூவை செங்குட்டுவன் எழுதிய பாடல் தான் கங்கை அமரன் இசையில் பதிவான முதல் பாடல். பாடியவர்- P. சுசீலா! "நாங்க கேட்டு வளர்ந்த குரல்... MSV ஐயா இசையில சுசீலாம்மா பாட்டெல்லாம் ஊர்ல ரேடியோல கேட்டுக்கிட்டே இருப்போம்.... மெட்ராஸ் போய் அவங்கள ஒரு தடவையாவது பார்கணும்னு ஏங்கினதுண்டு.... நான் இசையமைச்ச முதல் பாட்ட சுசீலாம்மா பாடினது எனக்கு கிடைச்ச பாக்கியம்...." என்று சந்தோஷமாக நினைவு கூர்ந்தார் அமரன்.
அந்த பாடல்:
'நாள்தோறும் இங்கே நான் பாடும்போது தேன் அள்ளித்தூவும் சுகராகமே...' சுசீலாம்மாவுக்கு எவ்வளவு பொருத்தமான வரிகள்! கங்கை அமரனின் அமர்க்களமான orchestral arrangements - அவரின் தனித்துவமான இசை கற்பனைகள் முதல் பாடலிலேயே புலப்படுகின்றன.
இந்த முதல் படத்திலேயே ஜெயச்சந்திரனுக்கு இரண்டு அழகான டூயட் பாடல்களை கொடுத்திருக்கிறார் அமரன்.
"சிந்து நதியோரம்... தென்றல் விளையாடும்" என்ற பாடல் வரிகளை சுந்தரும் நானும் பாட ஆரம்பித்தவுடன் உற்சாகமாய் கையை உயர்த்தினார் கங்கை அமரன். ஜெயச்சந்திரன்-சுசீலா பாடிய ரம்மியமான பாடல்.
"லடாக் போயிருந்தபோது சிந்து நதியை பார்த்ததும் இந்த பாட்டை முணுமுணுக்க ஆரம்பிச்சுட்டேன்" என்று நான் சொன்னதற்கு "அடடா...." என்று சந்தோஷப்பட்டார். ஆமாம் அது வரை வரலாற்று புத்தகங்களிலும் பாடல்களிலும் மட்டுமே கேள்விப்பட்ட சிந்து நதியை நேரில் பார்த்த போது இந்த அழகான பாடல் நினைவில் வந்தது இயற்கை தானே!
இந்த படத்தில் ஜெயச்சந்திரன் பாடிய மற்றொரு டூயட் ஜானகியம்மாவுடன். இந்த 'பூவே மல்லிகைப்பூவே' பாடலை எண்பதுகளில் கூட இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்டிருக்கிறேன்.
ஜெயச்சந்திரனை பற்றி கங்கை அமரன் இப்படி கூறினார்- " ரொம்ப நல்ல குரல்... அருமையா பாடுவார். தமிழ் உச்சரிப்பு கரெக்டா இருக்கும். ராயல் ஃபேமில பிறந்தவர். ஆனா.... எந்த பந்தாவும் இல்லாம சிம்பிளா இருப்பார். நல்லா ஜோக் அடிப்பார். டி நகர்ல அவர் வீட்ல நிறைய தடவை அவரோட சேர்ந்து அரட்டை அடிச்சிக்கிட்டு ஒண்ணா சாப்பிட்டிருக்கோம். Self - respect ரொம்ப ஜாஸ்தி. நடுல கொஞ்ச காலம் அண்ணன்கிட்ட அவருக்கு பாடும் வாய்ப்பு அமையல. ஒரு நாள் திடீர்னு பிரசாத் ஸ்டூடிவுக்கு வந்தார். அண்ணனை பார்த்து, சிரிச்சு "Hello ராஜா.... சும்மா தான் வந்தேன்... ரொம்ப நாளாச்சு உங்கள எல்லாம் பார்த்து. நல்லா இருக்கீங்களா? OK, bye!"னு கையசச்சிட்டு போயிட்டார்! ஆச்சரியமா இருந்தது!" கங்கை அமரன் குரலில் இன்னும் அந்த ஆச்சரியம் இருந்தது....
தனது முதல் படத்தில் ஜெயச்சந்திரனுக்கு இரண்டு பாடல்களை கொடுத்த கங்கை அமரன், தனது நெருங்கிய நண்பர்களான SPBயையும் வாசுவையும் விட்டுவிடுவாரா? இதோ அவ்விருக்காக அமரன் உருவாக்கிய துள்ளலான Male duet:
( 2003ல் நண்பர் சங்கர் ஷார்ஜாவில் முதல் தடவை என் வீட்டிற்கு வந்தபோது என் இசை சேகரிப்புகளை பார்வையிட்டவாறே கேட்ட கேள்வி- "நானும் நீயும் இன்று இளைஞன்" பாட்டு இருக்கா?)
இப்படி பேசிக்கொண்டிருக்கும் போதே கங்கை அமரன் "காஃபி சாப்பிடலாமே..." என்று கூறி தன் உதவியாளரிடம் காஃபி கொண்டுவரச்சொல்லி பணித்தார்... காஃபி வந்ததும் "எடுத்துக்குங்க...." என்று அன்புடன் உபசரித்தார்.
கங்கை அமரனின் இசையில் எனக்கு மிகவும் பிடித்த 'பூவோ பொன்னோ பூவிழி மானோ' (யேசுதாஸ்- ஜானகி) பாடலை நான் குறிப்பிட, அமரன் அதன் பல்லவியை ஞாபகம் வைத்து அழகாக பாடினார்... "அருமையான ஆஹிர் பைரவ்!" என்று சுந்தர் பாராட்டி மகிழ்ந்தார்.
அதே 'புதுயுகம்' படத்தின் 'அழகே நீ அழலாமா' பாடலை குறிப்பிட்டு சுந்தர் "சார், எனக்கு இந்த பாட்ட கேக்கும் போது 'நிலவே என்னிடம் நெருங்காதே' பாட்டு ஞாபகம் வரும்' என்று சொன்னவுடன் கங்கை அமரன் எந்த ஒளிவுமறைவும் இல்லாமல் "அதான்.... அதேதான்" என்று சொல்லி சிரித்தார். S.N. சுரேந்தர்- ஷோபா சந்திரசேகர் பாடிய பாடல். ஹிந்துஸ்தானி மால்குஞ்ஜியில் ஒரு மென்சோக மெலடி...
அப்படியே மெல்லிசை மன்னரின் பெருமைகளை சிறு நேரம் அசைபோட்டார் கங்கை அமரன் " அடடா.... எவ்வளவு அழகான பாட்டெல்லாம் போட்டிருக்கார்.... அவரை சின்ன வயசிலேந்து கடவுள் ஸ்தானத்தில வச்சு கும்பிட்டிருக்கேன்.... ஒரு காலத்தில அவர் குழுவில கிடார் வாசிப்பேன்னோ, அவர் இசையமைப்பில பாட்டு எழுவேன்னோ நெனச்சுக்கூட பார்க்கல..." என்று பிரமிப்புடன் சொன்னார்.
மெல்லிசை மன்னரின் இசையில் கங்கை அமரன் எழுதிய பாடல்களில் எனக்கு இந்த பாடல் சட்டென்று நினைவில் வந்தது. 'கள்' என்று ஒவ்வொரு வரியும் முடியுமாறு கவிதையாய் எழுதியிருப்பார் கங்கை அமரன்-
"சார், மூன்று இசையமைப்பாளர்கள் கூட்டணில ஒரு பாட்டு. உங்க ம்யூசிக்ல பாடியது MSV. பாடல் காட்சியில நடிக்கிறது (சங்கர்) கணேஷ்..." என்று நான் சொன்னவுடன்,
'ஓடம் எங்கே போகும்...
அது நதி வழியே
வாழ்க்கை எங்கே போகும்
அது விதி வழியே....' என்று கங்கை அமரன் கண்ணை மூடியவாறே அற்புதமாக பாடினார். "என் இசையில MSV ஐயா பாடினார். நல்லா போட்டிருக்கேன்னு பாராட்டினாரு. எவ்வளவு பெரிய பாக்கியம்!"
சமீபத்தில் (சங்கர்) கணேஷின் மகனுக்கு கங்கை அமரன் அளித்த பேட்டி ஒன்றை பார்த்தது ஞாபகம் வந்தது. கணேஷும் உடன் இருந்தார். மிகவும் ஆத்மார்த்தமாக, நட்புடன் பாசமாய், சிரிப்பும் சந்தோஷமுமாய் பேசிக்கொண்டார்கள் கணேஷும் அமரனும்.
அது தான் கங்கை அமரன். எல்லோரையும் அரவணைத்து செல்லும் நல்ல உள்ளம் கொண்டவர்.
இப்படியே சிரிச்சிக்கிட்டே இருங்க அமர் சார். Happy Birthday 
- அமரருவி தொடர்ந்து பொழியும்....
- Saravanan Natarajan