dhool

dhool
Click on the above image and Join the discussion in our Facebook group

Sunday, March 1, 2026

ஒரு பாடல்ரசிகனின் பரிதாபங்கள் #17

 ஒரு பாடல்ரசிகனின் பரிதாபங்கள் #17

மும்பை!
போன வாரம் மும்பையில் இருந்தபோது ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீதர்ஜியின் மகன் திருமணத்தில் கலந்துக்கொண்ட பிறகு லிங்கிங் ரோட் ஷாப்பிங் செல்ல ஆசைப்பட்டார் அகமுடையாள். மறுவார்த்தை சொல்லாமல் அங்கு அழைத்து சென்று, அவர் கடை கடையாக ஏறி இறங்க, கால்கடுக்க காத்திருந்தேன். ஒரு கட்டத்துக்கு மேல் ஒரு கடைக்காரன் பாவம் பார்த்து ஒரு ஸ்டூலை இழுத்துப்போட்டு 'பைட்டோ பாய்' என்றார் கரிசனமாக. கறை படிந்த பற்களுடன் அவர் சிந்திய புன்னகையில் பானும் புரிதலும் தெரிந்தது.
இந்தப்பக்கம் காலணிகள். அந்தப்பக்கம் காதணிகள். பர்ஸ், கைப்பைகள். விதவிதமான ஆடைகள்.... ஆடைகள்.... ஆடைகள்.... ஜன நெரிசல். சத்தம். அதை மறக்கடிக்க மும்பையில் முன்பு வாழ்ந்த இரண்டு வருடங்களின் ஞாபகங்களில் சிறிது நேரம் மூழ்கியிருந்தேன்.
'காதலர் தினம்' படம் முழுக்க முழுக்க பம்பாயில் (முக்கியமாக பேன்ட்ராவில்) எடுக்கபட்டதால் தான் என்னவோ வேலன்டைன்ஸ் டேயான முந்தைய நாள் பவானியும் நானும் அதே பேன்ட்ராவில் சுற்றிக்கொண்டிருந்தோம் என்ற எண்ணம் வந்தது காதலெனும் தேர்வெழுதி பாஸான இந்த மாணவனுக்கு. ஆனாலும் 'டோலி டோலி டோலி டோலி' என என் தோழி பாடவில்லையே என்று சற்று வருந்தினேன்.
One thought led to another. மும்பையில் படமாக்கப்பட்ட தமிழ் படங்களை மனதில் பட்டியலிட தொடங்கினேன். முதல் தமிழ் பேசும் படமான காளிதாஸாவே (1931) மும்பையில் அப்போது இயங்கி வந்த ஜோதி ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டது தான்.
நாயகன், பம்பாய், ஓகே கண்மணி படங்கள் நினைவுக்கு வந்த போது மணிரத்தினம் இந்த நகரத்தை எவ்வளவு தத்ரூபமாக காட்டியிருக்கிறார் என்று தோன்றியது.
சூப்பர் ஸ்டாரின் பாட்ஷா, காலா, தர்பார் படங்களில் மும்பை முக்கியமான கதைக்களம்.
'ரிதம்' படத்தில் வசந்த் மும்பை வாழ்க்கையை மிக இயல்பாக படம்பிடித்திருந்தார்.
ஏன், எனக்கு மிகவும் பிடித்த 'அவர்கள்' படம் ஆரம்பிப்பதே பம்பாய் ரயிலில் தானே. 'மாதுங்கா தாண்டியாச்சா?' என்று அந்த மாமி கேட்க 'தானாவே தாண்டிட்டோம்' என்று மாமா சொல்வாரே! சுஜாதா ரஜினியுடன் வாழ்ந்ததும் பம்பாயில் தானே...
'மதனமாளிகை' படத்தில் நாயகி அல்கா அறிமுகமாவதே மும்பை ஓபராய் ஹோட்டலில் தானே... அதுவும் M.B. ஸ்ரீனிவாசனின் இசையில் உஷா உதுப் பாடிய இந்த பாடலில்....
இதனிடையே இஷா கோப்பிக்கர் விஜய்யிடம் கேட்வே ஆஃப் இந்தியாவில் நின்றுக்கொண்டு 'மனசே மனசே குழப்பமென்ன.... இதுதான் வயசே காதலிக்க....' என்று கொஞ்சிய காட்சி மனதில் ஆடியது. ரெட்டை ஜடையில்....
'என்ன... ஸ்ட்ரீட் நடூல உட்கார்ந்துக்கிட்டு, வாய திறந்து எதையோ யோசிச்சிக்கிட்டு இருக்கீங்க...?' என்ற கேள்வியுடன் பவானி இரண்டு- மூன்று பைகளை என் மடியில் வைத்தார். கோபிக்கர் விஷயத்தை சொன்னால் கோபிப்பார்... அதனால்...' இல்ல, 'காதல் கவிதைகள் எழுதிடும் நேரம் பாட்டில் கேட்வே ஆஃப் இந்தியாவில காத்தடிச்சு பறந்து போன ஒரு குடையை துரத்திக்கிட்டு சுகுமாரி ஓடுவாங்களே... அது ஞாபகம் வந்தது!' என்றேன்.
'ஐய்யோ ஐய்யோ... முதல்ல வாய மூடுங்க. பாக்கறவங்க என்ன நினைப்பாங்க??' என்று முறைத்துவிட்டு மீண்டும் வேறு பக்கம் மறைந்தார்.
'லூஸா நீ??' என்று சூர்யா சமந்தாவை பார்த்து இதே மும்பையில் (அஞ்சான்) கேட்டது நேரங்கெட்ட நேரத்தில் ஞாபகம் வந்து தொலைத்தது.
மும்பையில் எடுக்கப்பட்ட 'வெந்து தணிந்தது காடு' படத்தின் இந்த அழகான பாடலை அடுத்து முணுமுணுக்க ஆரம்பித்தேன்.
அந்த படத்தின் சண்டை காட்சிகள் நினைவில் வரவே மும்பையின் அடிதடி முகத்தை பற்றி யோசிக்க இப்போ 'துப்பாக்கி' படம் ஞாபகம் வந்தது. அதன் திடுதிடுக்கும் காட்சிகள் மும்பையில் (இதே லிங்கிங் ரோட் மார்க்கெட் உட்பட) படமாக்கப்பட்டது ஞாபகம் வந்த போது சற்று அச்சத்துடன் இங்குமங்கும் நொட்டமிட்டேன்.
அதற்குள் இன்னும் சில பைகளை சுமந்துக்கொண்டு பவானி வந்து சேரவே டிரைவரை அவசரமாக அழைத்து காரில் ஏறிக்கொண்டோம்.
மனதில் தமிழ் சினிமாவில் மும்பை என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதிவிட்ட திருப்தி... ஆனால் அது அதிக நேரம் நீடிக்கவில்லை... ஏதோ ஒன்றை விட்டுவிட்டது போல் ஒரு தவிப்பு. கார் முன்னோக்கி செல்கையில் மன ஓட்டத்தை பின்னோக்கி செலுத்தி இன்னும் கொஞ்சம் யோசித்து பார்த்தேன்...
ஆ... பிடிப்பட்டது. மும்பையில் வசிக்கும் ஒரு தமிழ் குடும்பம். தன் மூன்று மகன்களும் கல்யாணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரிகளாகவே வாழவேண்டும் என்று பிடிவாதமாக இருக்கும் ஒரு விசித்திரமான அப்பா. பாலா, முரளி, கிருஷ்ணா என்ற அந்த மூன்று மகன்களின் தவிப்பு. அந்த வீட்டில் வசிக்க வரும் தாராவுக்கும் கிருஷ்ணாவுக்கும் ஏற்படும் காதல் என்று சுவாரசியமாக செல்லும் கதை. 'திருமணம் எங்கள் பிறப்புரிமை' என்ற மேடை நாடகம் தான் 'பிரம்மச்சாரிகள்' என்ற பெயரில் படமாக்கப்பட்டது. பட்ஜட் படம். பெரும்பாலும் indoor காட்சிகள். ஆனாலும் பம்பாயில் சில வெளிப்புற காட்சிகளும் உண்டு- ஓபராய் ஓட்டலில் கிருஷ்ணாவை வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு போய் அவனுக்கு சமோசாவும் ஐஸ்க்ரீமும் தாரா வாங்கிக்கொடுக்கும் காட்சி ஞாபகம் வந்தது.
படத்தின் ஹைலைட்... மெல்லிசை மன்னரின் இசையமைப்பில் எனக்கு மிகவும் பிடித்த இரு பாடல்கள். ஒன்று SPB குரலில் 'கமதநி..சநிதம..', 'அழகிய திருமுக தரிசனம் தந்திட வாராயோ' என்று இரு ஆரம்ப பல்லவி வரிகளை கொண்ட MSVயின் அற்புத வார்ப்பு. கனவு காதல் பாடல். புலவர் புலமைப்பித்தனின் அழகான வரிகள்... பாலுவின் மாயாஜாலம்....
மற்றொன்று.... தந்தையின் நியாயமற்ற நிலைபாட்டினால் உள்ளம் குமுறும் அந்த இளைஞன் தன் கோழைத்தனத்தை, கையாலாகாமையை எண்ணி விரக்தியுடன் பாடும் பாடல். ராஜ்குமார் பாரதியை அழைத்து பாட வைத்தார் MSV. பல டேக்குகளுக்குப்பின் ஓகே செய்தாராம். 'சந்திரனை பார்த்தா சூரியனாய் தெரிகிறது...'
ஆஹா.... இந்த அருமையான பாடலின் நினைவில் மெய்மறந்தேன்....
இதற்கிடையே தான் வாங்கி வந்ததையெல்லாம் காண்பித்துக்கோண்டிருந்த பவானி ஒரு ஜூஸ் சென்டரை பார்த்து 'கரும்பு ஜுஸ் குடிக்கலாமா?' என்று கேட்க, நான் இன்னும் அதே நினைவில் 'செங்கரும்பு கூட வேம்பாக கசக்கிறது...' என்று பாடித்தொலைய.....
பவானி சொன்னதெல்லாம் நல்ல வேளை அந்த மராத்தி ஓட்டுனருக்கு புரியவில்லை 🤦‍♂️
- பரிதாபங்கள் தொடரும்.....
- Saravanan Natarajan

https://www.facebook.com/saravanan.natarajan.319/posts/pfbid036UsRy2Yfc3Zn1pdLQc5sTrQeVLFCVYu1FHbPjTrnC7nA1FQr3roFusxC6o7jmxjHl

No comments:

Post a Comment