ஒரு பார்வை பார்க்கும் போது
உயிர் பாடும் நூறு பாட்டு...
1978 தீபாவளிக்கு வெளிவந்த 'பைலட் பிரேம்நாத்' படத்தின் வெற்றி அந்த காலகட்டத்தில் இந்திய-இலங்கை கூட்டுதயாரிப்பில் 'நீலக்கடலின் ஓரத்திலே', 'மோகன புன்னகை', 'ரத்தத்தின் ரத்தமே' போன்ற மேலும் சில படங்கள் வெளிவர வித்திட்டது. அந்த வரிசையில் வெளிவந்த மற்றுமோர் படம் 'நங்கூரம்' (1979)
லங்கால் முருகேசு என்ற இலங்கை தமிழர் தயாரிக்க, டிமதி வீரரட்னே இயக்கத்தில் வந்த படம். சென்னை ஸ்டூடியோக்களில் உள்புற காட்சிகளும், இலங்கையின் அழகான நுவரெலியா, பெரெடேனியா போன்ற இடங்களில் வெளிப்புற காட்சிகளும் பாடல்களும் படமாக்கப்பட்டன. முத்துராமன், லட்சுமி, மாஸ்டர் சேகர், சுருளிராஜன் ஆகிய இந்திய நடிகர்களுடன் இலங்கை நடிகர்கள் இருவர் நடித்திருந்தனர். ஒருவர் லட்சுமியின் தங்கையாக நடித்த சிங்கள கவர்ச்சி நடிகை ஃபரீனா லை.
மற்றொருவர்- பாடகர், நடிகர், சமூக ஆர்வலர் என்ற பன்முக கலைஞர் விஜய குமாரதுங்க. நல்ல உயரமும் வசீகர புன்னகையும் கொண்டு எழுபதுகளில் அவர் இலங்கையின் முன்னனி நாயகனாக திகழ்ந்தார். அரசியல் கட்சி ஒன்றை தொடங்கி இலங்கையில் பல்வேறு பிரிவுகளிடையே ஒற்றுமையை கொண்டு வர முயற்சித்து கொண்டிருக்கையில் 1988ல் வெறியர்களால் தன் வீட்டு வாசலில் அவர் சுட்டுக்கொல்லப்பட்போது கதறியபடியே ஓடிவந்து அவரது உடலை தாங்கிப்பிடித்தவர் அவரது காதல் மனைவி சந்திரிகா- பின்னாளின் இலங்கையின் அதிபர்.
'நங்கூரம்' படக்கதை என்னமோ பாடாவதியான முக்கோண காதல் கதை தான். ஒரு நடுத்தர குடும்பத்தின் மூத்த பெண் ராதா ( லட்சுமி), அவளை ஒரு மனதாக காதலிக்கும் அடுத்த வீட்டு வாலிபன் ஆனந்தா ( விஜய குமாரதுங்க), இந்தியாவிலிருந்து அங்கு ஒரு தொழிற்சாலை கட்டுவதற்காக வரும் வினோத் (முத்துராமன்). ராதா வினோதை நேசிக்கிறாள் என்பதை அறிந்து புத்த பிட்சுவாக துறவறம் பூணுகிறான் ஆனந்தா.
'நங்கூரம்' தோல்வி படமாக அமைந்தாலும் அதன் பாடல்கள் அற்புதமானவை. இந்தியாவை சேர்ந்த V. குமாரும் இலங்கையை சேர்ந்த கேமதாஸாவும் இணைந்து பாடல்களுக்கு இசையமைத்தார்கள் என்று அறிவிப்புடன் இசைத்தட்டும் படமும் வெளிவந்தன . ஆனால் குமார் சாரின் மனைவி திருமதி ஸ்வர்ணாவிடம் இதை பற்றி கேட்டபோது பாடல்களுக்கு குமார் மட்டும் தான் இசையமைத்தார் என்று கூறினார். பாடல்களை கேட்கும் போது இது உண்மையாக இருக்குமென்றே தோன்றுகிறது- ஒவ்வொன்றிலும் பிரத்யேகமான குமாரின் செழுமையான மெலடி பாணி பளிச்சிடுகிறது.
சாலையில் சந்தித்து ராதாவும் ஆனந்தாவும் பேசிக்கொள்கிறார்கள், சிரிக்கிறார்கள்... பிறகு அவள் அங்கிருந்து செல்கிறாள். அவள் மேல் உள்ள காதலை அவளிடம் தெரிவிக்க அவன் ஏனோ தயங்குகிறான். அது வெட்கத்தினாலா, அல்லது தனது காதல் நிராகரிக்கப்படுமோ என்ற அச்சத்தினாலா? மென்மையான அவனது மனதில் தடாலடியாக தன் காதலை வெளிப்படுத்த தைரியம் இல்லை... ஏக்கம் நிறைந்த பெருமூச்சாக ஒலிக்கிறது அவனது பாடல்....
'சொல்லாத சொல்லுக்கு விலையேதுமில்லை...' என்று முன்பு எழுதிய கவியரசர் இங்கே இப்படி எழுதுகிறார்....
//கோடி வார்த்தைகளை
சேர்த்து வைத்து கொண்ட உள்ளம்...
ஓடி ஓடி அது பாய்ந்து செல்லுகின்ற வெள்ளம்...
நினைக்கிறேன் சொல்ல மொழியில்லை
எனக்குத்தான் என்ன நாணமோ
நீயும் மௌன ராகம் நானும் மௌன கீதம்
சொன்னால் ஏற்றுக்கொள்வாய்...
என்னால் முடியவில்லை....//
இந்த பரிதவிப்பை எவ்வளவு அழகாக படம்பிடிக்கிறது குமாரின் மெட்டு! The hesitation, the procrastination, the suffering is so beautifully brought out in the slow paced charanam lines, punctuated with pregnant pauses....
SPBயின் குரல் இந்த கையறுநிலையை காய்ச்சலுடன் சுமந்து வருகிறது. சுவர்ணாவின் ஹம்மிங் அணல் மேல் மெழுகு...
இந்த பாடல் அந்த காலகட்டத்தில் இலங்கை வானொலியிலும் விவித் பாரதியிலும் ஒலித்தது... பிறகு காலத்தின் மணலில் புதைந்த போனது....
நேற்று V. குமாரின் நினைவு நாள். அவர் விட்டுச்சென்ற இதுபோன்ற பொக்கிஷங்களை நாம் மீட்டெடுத்து கொண்டாட இது ஒரு காரணமாக அமையட்டுமே....
- Saravanan Natarajan
No comments:
Post a Comment