Tiruchendurai Ramamurthy Sankar writes:
சூப்பர் ஸ்டார்
ஹிந்தி சினிமாவில் வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர்போல் பிடரி வரைக்கும் தலைமுடி வளர்த்து அங்கும் இங்கும் கல்யாணத்தில் அலைந்துகொண்டிருந்த ஒரு கல்லூரி மாணவனை, " என்னடா பாகவதர் க்ராப்? " என்று கேட்ட பெண்மணிக்கு 30-35 வயது இருக்கும். நிச்சயம் பாகவதர் மறைந்த 1959க்குக் குறைந்தபட்சம் 25 வருடங்களுக்குப் பிறகு பிறந்தவர்.
பாகவதர் பற்றி எல்லாரும் எழுதியாகிவிட்டது. தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார். (இரண்டாவது சூப்பர் ஸ்டாரான எம் ஜி ஆரே பாகவதர் கிராப் வைத்திருந்தார்) . பாகவதரையும் , பாபநாசம் சிவனையும் விடுத்துத் தமிழ் சினிமா இசையைச் சொன்னால் அதற்கு உயிர் கிடையாது.
இந்தப் பாடலைப் பற்றிச் சொல்வதற்கு முக்கிய காரணம் , ஒரு modern contemporary டூயட்டிற்குத் தேவையான அனைத்து லட்சணங்களும் கொண்ட தமிழ் சினிமாவின் முதல் டூயட் என்று திரு நீலகண்டர் (1939) ல் வந்த இந்த டூயட்டைச் சொல்லலாம். ( சகுந்தலை (1940) படத்தில் ஜி என் பி - எம் எஸ் பாடிய " பிரேமையில்( தேஷ்) " ஒரு வருடம் பின்னால் வந்தது! இல்லையென்றால் அந்தப் பாடல் !)
எம்.கே.டியுடன் மிஸ். பாப்பா லக்ஷ்மிகாந்தம் பாடிய இந்த டூயட் பின்னால் வந்த அனைத்து டூயட் பாடல்களுக்கும் தேவையான structureஐக் கொடுத்தது என்றால் மிகையாகாது. ஆணி அடித்த காமெரா, லவலேசமும் இல்லாத முகபாவங்கள் என்று எதிர்மறை விஷயங்கள் இருந்தாலும், சினிமாவிற்கான perfect மத்யமாவதி , சுண்டி இழுக்கும் ஆரம்ப இசை. படத்திற்கு பின்னணி இசை ஆர்.சுதர்சனம். ஆனால் பாடல்களும் இசையும் பாபநாசம் சிவன்.
எல்லாருக்கும் தெரிந்த திரு நீலகண்டரின் கதை. பாகவதரின் சுமார் நடிப்பை படுதா போட்டு மறைக்கும் அளவிற்கு அற்புதமான மற்ற பாடல்கள்.
1. மறைவாய் புதைத்த ( தர்பார்)
2. ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் ( கமாஸ்)
3. சராசரங்கள் ( மோகனம்)
4. தீன கருணாகரனே ( யமன் கல்யாணி)
இந்தப் பாடல் மற்ற இசையமைப்பாளர்களையும் பாதித்திருக்க வேண்டும்.
1. முழு நிலவின் ( பால்குடம் - MSV - P.சுசீலா)
2. வேனில் கால ( ராணி - MSV - SPB/வாணி)
3. மதன மோக ( இன்று போய் நாளை வா- இளையராஜா- மலேஷியா வாசுதேவன்/ஷைலஜா)
குறிப்பாக இளையராஜா மனதில் , படத்தில் வரும் அந்த சிச்சுவேஷனுக்கு தோன்றிய கான்செப்ட்டிற்குப் பின் MKTயின் இந்தப் பாடல் இருந்திருக்கும். ஷைலஜாவின் கர்ண கடூரக் குரலை மன்னித்துவிட்டால், பாகவதருக்கு இளையராஜாவின் tribute என்றே சொல்லலாம்.
வால்துளி!
2016ல் கலிஃபோர்னியாவில் டைப்ரைட்டிங் இன்ஸ்ட்டியூட் திறந்தாற்போல், காலம் கடந்து, 1972ல் பாகவதரின் க்ளோனாகத் திகழமுற்பட்ட டி.ஆர்.மஹாலிங்கம் , திரு நீலகண்டர் படத்தை மீண்டும் எடுத்தார். சௌகார் ஜானகி ஜோடியாக, சினிமா கபாலியான RS மனோகர் சிவனாகவும், சி.என்.பாண்டுரங்கனின் இசையில். படத்த்லிருந்து ரேடியோவில் ஒலித்தது " பந்த பாசக் காட்டுக்குள்ளே" மட்டுமே. ஆனால் டி.ஆர்.மஹாலிங்கத்தின் குரலில் உன்னழைகைக் காண பாட்டு ஒலித்திருந்தால் " நானன்றி யார் ( மாலையிட்ட மங்கை - TRM / கோமளா) " பாடலுக்கு இணையான அற்புதமான பாடலாக அமைந்திருக்கும்.
https://www.facebook.com/groups/1018417744856618/permalink/1276743822357341/
No comments:
Post a Comment