Sridhar Trafco writes:
கடந்த பத்து நாட்களாக இந்தப்பாடலை முழுக்க முனுமுனுத்து வருகிறேன். ஆபிஸ், கார் பயணம், மாலை நடைபயிற்சி என எல்லா நேரமும் இப்பாடல் ரீங்காரமிடுகிறது.
சென்ற வாரம் நண்பர் Kumaraswamy Sundar வானம்பாடி படத்திலிருந்து 'தூக்கனாங்குருவிக்கூடு ' பாடல் பற்றிய பதிவைப்போட்டவுடன் நானும் அதே படத்திலிருந்து இப்பாடலைப் பற்றியும் எழுதலாமென யோசித்துக் கொண்டிருந்தேன்.
என்ன விசேஷம் இந்தப்பாடலில்? இது ஒரு கவாலி பாடல். வானம்பாடி படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் எல்.ஆர். ஈஸ்வரி பாடியது, கண்ணதாசன் பாடல் வரிகளில். பாடலுக்கு நடனம் ஜோதிலட்சுமி.
பாடல்: 'யாரடி வந்தார் என்னடி சொன்னார் ஏனடி இந்த உல்லாசம்'
பொதுவாக கவாலி பாடல்கள் ஹிந்திப்படங்களில் தான் நாம் அதிகம் பார்க்கலாம். கவாலியின் பிறப்பு பாரசீகத்தில். பின் பாகிஸ்தான், இராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் பரவியது. இந்தியாவில் அந்த காலத்தில் லக்னௌ, அலகாபாத், டெல்லி, அலிகார் போன்ற இடங்களில் கவாலி மிகவும் பிரபலமடைந்தது. பாகிஸா என்ற ஹிந்திப்படத்தில் நடிகை மீனா குமாரி கவாலிப்பாடலுக்கு ஆடுவார். பின் ரேகா, மும்தாஜ், ஹேமாமாலினி, ஸ்மிதா பாட்டில் என வரிசையாக....
அவ்வப்போது தமிழ்ப்படங்களில் கவாலிப்பாடல்கள் எட்டிப்பார்ப்பதுண்டு. எம். எஸ்.வி அவர்கள் நிறைய கவாலி பாடல்களுக்கு இசையமைத்திருப்பது நமக்குத்தெரியும்.
மேலே நான் குறிப்பிட்ட ஈஸ்வரி பாடும் 'யாரடி வந்தார்' பாடலுக்கு மூன்று சிறப்புக்கள்:
1. பிரமிக்க வைக்கும் அற்புத நடனம் ஆடும் ஜோதிலட்சுமி.
2.கிரங்க வைக்கும் கண்ணதாசனின் பாடல் வரிகள்.
3. மகாதேவனின் அட்டகாசமான இசையும் ஈஸ்வரியின் குரலும்.
முதல் மார்க் ஜோதிலட்சுமிக்குத்தான். ஜோதிலட்சுமி என்றாலே நினைவுக்கு வருவது ஜிகுஜிகு கண்ணாடித்துணியில் புசுபுசுவென ஒரு பாவாடை , ஏதாவது நைட் க்ளப்பில் காலை அகட்டி அவர் ஆட, பின்னால் வால் மாதிரி ஒரு வஸ்திரம் தொங்கும். அந்தப்பக்கம் செம்பம்டை முடியுடன் பின்னந்தலையில் பெரிய வட்ட வடிவத்தொப்பி தொங்க, தொங்குமீசை, கௌபாய் உடை, பெரிய மொந்தையில் கள், வாயில் சுருட்டுடன் மேஜர் சுந்தர்ராஜனோ அசோகனோ என யாராவது வில்லன்கள் ஜோதிலட்சுமியின் ஆடலை ரசிக்க, படத்துக்கு கர்ணன் மாதிரி காமிராமேன் இருந்தால் போதும்..ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. எல்லா கோணங்களிலும் ரசிகர்களை தலையையும் உடலையும் சாய்த்து பார்க்கும்படி காட்சியை எடுத்துவிடுவார்.
ஆனால் இப்பாடல் காட்சி முற்றிலும் வித்தியாசமானது. பொதுவாக ஐட்டம் சாங்ஸுக்கு நிறைய ஆடிய ஜோதிலட்சுமி இக்கவாலிப்பாடலுக்கு அற்புதமாக ஆடியிருப்பார். இவ்வளவு அழகாக ஜோதிலட்சுமி ஆடி நான் பார்த்ததில்லை.
பாடல் ஆரம்பமாகும் முன், பல்லவி, அனுபல்லவிக்கு முன் இசைக்கு அவர் ஒயிலாக சுற்றி ஆடி, அழகான அபிநயத்துடன் பல்லவி ஆரம்பமாகும் இடம் அசத்தல்..
'யாரடி வந்தார் என்னடி சொன்னார்?
ஏனடி இந்த உல்லாசம்.. 'என்ற பல்லவியை
நாம் எப்படி ரசிக்கிறோமோ அதே மாதிரி ஓ.ஏ.கே.தேவரும் முகபாவங்களுடன் ரசிப்பதை இயக்குநர் அழகாக காட்டியிருப்பார்.
அடுத்து அனு பல்லவி..
'காலடி மீதில் ஆறடிக் கூந்தல்
மோதுவதென்னடி சந்தோஷம்'
வரிகளுக்கு அவர் ஒயிலாக தன் ஜடையை மெல்ல சுழற்றி சுழற்றி ஆடி, அடுத்து ஓரிரண்டு சின்ன குதியல்களோலோடு மறுபடியும் 'யாரடி வந்தார்' என ஆரம்பிக்கும் அவரது நடனம் மிகவும் authoritative ஆக இருக்கும்.
சத்தியமாக நயன்தாராவிற்கோ, ஹன்சிகா மோட்டா வானிக்கோ அந்த steps வராது என அடித்துச்சொல்லலாம்.
சரனத்திற்கு முன் இசைக்கு டி.ஆர். ராமச்சந்திரன் தபலா மற்றும் முத்துராமன் ஹார்மோனியம் வாசிப்பது போல நடிப்பார்கள். டி.ஆர்.ஆர் பாடலுக்கேற்றார்போல விரல்களால் தபலாவை அழகாக வருட, முத்துராமன் கொஞ்சம் சொதப்பியிருப்பார். வலது கையில் ஹார்மோனியம் வாசிப்பதையே முத்துவால் திறம்பட செய்திருக்க முடியாது. இந்த லட்சணத்தில் இடது கையில் ஹார்மோனியம் வாசிப்பது போல அவரது நடிப்பு நல்ல காமெடி.
யாரடி வந்தார் என்னடி சொன்னார்?
ஏனடி இந்த உல்லாசம்? (2)
காலடி மீதில் ஆறடிக் கூந்தல்
மோதுவதென்னடி சந்தோஷம்? (2)
யாரடி வந்தார் என்னடி சொன்னார்?
ஏனடி இந்த உல்லாசம்?
பல்லவி முடிந்து சரணத்திற்கு முன் 'ஆறடி கூந்தலை அள்ளி முடித்து' பாடும்போது ஜோதிலட்சுமியின் stepsஐ கவனிக்கவும். ஒரே டேக்கில் அந்த காட்சி எடுத்திருப்பார்கள். தற்போது வரும் படங்களில் இதுபோல் ஒரே டேக்கில் அசினுக்கோ அவர் கசினுக்கோ நிச்சயம் ஆட வராது.
ஆறடிக்கூந்தலை அள்ளி முடித்து
ஓரடி ஈரடி மெல்ல எடுத்து(2)
பாரடி வந்து பக்கத்திலே - காதல்
காவடி தூக்கும் கண்களிரண்டை
வேலடி போலடி ஓடி வராமல்(2)
ஏனடி நின்றாய் வெட்கத்திலே?
யாரடி வந்தார்....
நில்லடி நில்லடி கண்ணடியோ
என்னடி என்னடி சொல்லடியோ (2)
முன்னடி பின்னடி போடடியோ - இங்கு
அன்றொரு நாளடி வந்தவள் யாரடி
என்பதைக் கேளடி உண்மையைக்கூறடி(2) என் பெயர் கேட்டுச் சொல்லடியோ!
யாரடி வந்தார்....
கண்ணதாசன் பாடல் வரிகள்.. சொல்லவே வேண்டாம்..அற்புதம்
யாரடி, ஆறடி, ஓரடி, காலடி, ஏனடி, பாரடி, காவடி, வேலடி, நில்லடி, கண்ணடி, என்னடி, சொல்லடி, பின்னடி, முன்னடி, நாளடி, கேளடி, கூறடி, சொல்லடி.....அம்மாடி!!!
கே.வி. மகாதேவன் பாடல் இசையைப்பற்றி சுந்தர் அவர்கள் (தூக்கனாங்குருவிக்கூடு பாடல் பற்றிய பதிவில்) ஏற்கனவே எழுதிவிட்டார். கவாலிப்பாடல் இசையை அழகாக அமைத்திருக்கிறார். சரணத்திற்கு முன் வடநாட்டு சாரங்கி இசையை புகுத்தியிருப்பார். அதற்கு ஒத்துப்போவதாக தபலா இசையும்...
இக்கட்டுரையை எழுதி வைத்துவிட்டு எப்போது பதிவிடலாமென யோசித்து காத்திருந்தேன்.
இன்று இரத்தப்புற்றுநோயால் ஜோதிலட்சுமி மறைந்த செய்தி கேட்டதும் இவரது முதல் பாடலான 'கட்டோடு குழலாட ஆட ஆட' பாடலும் வானம்பாடி படத்தின் இந்தப்பாடலும் தான் நினைவுக்கு வந்தது.
http://www.thehindu.com/features/cinema/actor-jyothilakshmi-passes-away/article8963639.ece
ஆழ்ந்த இரங்கல்கள்.
பாடல் காட்சியில் ஓ.ஏ.கே.தேவர் ரசித்தது போலவே வரிக்கு வரி ரசித்துப்பார்க்கலாம்.. இதோ..
https://youtu.be/Z12Xa2R_BmE
(சீதாபதி ஶ்ரீதர்)
https://www.facebook.com/groups/1018417744856618/permalink/1293398640691859/
No comments:
Post a Comment