Sridhar Trafco writes:
முழுநீள நகைச்சுவை மற்றும் அருமையான பாடல்களுக்காகவே இப்படத்தை பார்க்கலாம்.
டைட்டில் இல்லாமல் இப்படத்தை பார்ப்பவர்கள் இது நிச்சயம் பாலச்சந்தர்-வி.குமார் கூட்டணிப்படம் என நினைப்பார்கள். 90களில் பிரம்மச்சாரிகளான நாங்கள் நாலைந்து நண்பர்கள் பம்பாய் செம்பூர் அறையில் தங்கியிருந்தபோது வார இறுதிகளில் 'டெக்' எடுத்து தமிழ் படங்கள் பார்ப்போம். அதில் அதிகமுறை பார்த்த படம் 'சோப்பு சீப்பு கண்ணாடி'.
ஆரம்பத்திலிருந்து கடைசி வரை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் காட்சிகள் கொண்ட முழு நீள நகைச்சுவைப்படம். திருமலை-மகாலிங்கம் இயக்கத்தில் 1969.. 70 வாக்கில் வந்த இப்படத்தில் நாகேஷ், விஜய நிர்மலா, சகஸ்ரநாமம், சி.கே.சரசுவதி, ஏ.கருணாநிதி, வீரப்பன், உசிலைமணி, ஐ.எஸ்.ஆர் நடித்திருக்கிறார்கள்.
கதை என்ன?
பணக்கார குடும்பத்தில் பிறந்த நாகேஷ், வீட்டில் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதால், வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு டிக்கெட் இல்லாமல் ரயில் ஏறுகிறார். அதே ரயிலில் டிக்கெட் இல்லாமல் அவருடன் மாட்டிக்கொள்ளும் வீரப்பன் அவரது நண்பனாகிறார். உசிலை மணியின் 'குரங்கு' மார்க் டாய்லெட்ஸ் கம்பெனியில் நாகேஷ் சேல்ஸ்மேனாகவும் வீரப்பன் டிரைவராகவும் சேர்த்து கடைகளுக்கு சப்ளை செய்வார்கள்.
பணக்காரர் சகஸ்ரநாமம் வீட்டில் நாகேஷ் நுழைய, சமையல்காரன் ஏ.கருணாநிதி வீட்டுக்கதவை பூட்டிக்கொண்டு வெளியே சென்றுவிட, நாகேஷும் சகஸ்ரநாமத்தின் ஒரே மகள் வி.நிர்மலாவும் வீட்டினுள்ளே தனியாக மாட்டிக்கொள்ள, பயத்தால் மிரண்ட வி.நிர்மலா திடீரென நாகேஷை கண்டதும் முதலில் மயக்கமடைந்தாலும் பிறகு காதல் மயக்கமுறுகிறாள். வெளியே எல்லோரும் நாகேஷை தேடுகிறார்கள்.
சில திருடர்கள் நாகேஷிடம் பணம் இருப்பதாக நினைத்துக்கொண்டு அந்த வீட்டினுள்ளே நுழைகிறார்கள். படம் படு சுவாரசியமாக செல்கிறது. கடைசியில் திருடர்கள் பிடிபட்டு, நாகேஷ் வீட்டில் பார்த்த பெண் வி.நிர்மலா தான் எனத்தெரிய, அவர்களது திருமணத்துடன் படம் சுபமடைகிறது.
படத்தில் கதை என்று பார்த்தால் ஒன்றுமே இல்லையென்றாலும் படம் முழுக்க நகைச்சுவை.. அதிலும் 'தகர டப்பா தலையா...' போன்ற கவுண்டமணி, சந்தானம் ஸ்டைல் காமெடி இல்லாமல் இயல்பான நகைச்சுவை. பணக்காரர் வீட்டு சமையல்காரராக வரும் ஏ.கருணாநிதி இப்படத்தில் பட்டையை கிளப்புவார். நாகேஷுக்கே சவால் விடும்படி ஒரு படி மேலே இவரது நகைச்சுவை.
ரயில் சீன் இப்படத்தில் முக்கிய நகைச்சுவைப்பகுதி.. ரயில்களில் எப்போதுமே கூட்டம் இருப்பதாக சலித்துக்கொண்டு பிரயாணிகளுக்கு மத்தியில் தனக்குத்தெரிந்த ஆங்கிலத்தில் அலட்டிக்கொண்டு பேசும் டிக்கெட் இல்லாத நாகேஷ் ஒரு கிராமத்து பிரயாணியை சீண்டுகிறார்:
நாகேஷ்: 'இங்கிலீஷ் தெரியும் உங்களுக்கு?'
பிரயாணி: 'தெரியாதுங்களே!'
நாகேஷ்: திஸ் வில் நெவர் கம் டு ய க்ளோஸ் ஐ டெல் யூ.. ய செட் ஆஃப் இடியட்ஸ் டிராவல்லிங் இன் தேர்ட் க்ளாஸ் இற்ரெலவன்ட்..இற்ரெகுலர்.. அன்ட் இற்ரெஸ்பான்சிபிள்..'
மற்றொரு பிரயாணி: 'அட! அவருக்குத்தான் இங்கிலீஷ் தெரியாதுங்கறாருய்யா!'
நாகேஷ்: 'அதனால தான் அவருகிட்டே பேசறேன்!'
பிறகு மாட்டிக்கொள்ளும் நாகேஷை டீடீயார் பிடித்துச்செல்லும்போது சீட்டுக்கடியில் இருக்கும் வீரப்பனையும் டீடியார் பார்த்து விட,
டீடீஆர்: 'யாருப்பா அது? வெளிய வா'
சீட்டுக்கடியிலிருந்து வீரப்பன்: 'ஹி.. ஹி.. வீட்டுக்கு தெரியாமெ வந்துட்டேன்'
நாகேஷ்: வீட்டுக்கு தெரியாமெ வந்து பிரயோஜனமில்லப்பா.. டீடீயாருக்கு தெரியாம வரனும்..வா வெளிய..'
டீடீஆர்: 'எங்கேர்ந்துரா வற்ரே'?
வீரப்பன்: 'பெஞ்சுக்கடியில இருந்து சார்'.
குரங்கு மார்க் டாய்லெட்ஸ் கம்பெனி முதலாளி உசிலைமணியின் இன்டர்வியூ சீன்...
உசிலை: 'உனக்கு என்ன தெரியும்?'
வீரப்பன்: 'எனக்கு டிரைவிங் தெரியும் சார்'
உசிலை (நாகேஷை பார்த்து): 'உனக்கு'?
நாகேஷ்: 'அவனுக்கு டிரைவிங் தெரியும்கறது எனக்கு தெரியும் சார்'
டி.எம்.எஸ்சின் 'வாங்கிப்போடு சோப்பு சீப்பு கண்ணாடி (டைட்டில் பாடல்) சிறு வயதில் நான் ரேடியோவில் அதிகம் கேட்டது கிடையாது. அப்போது நாங்கள் ஈரோட்டில் இருந்தோம். நான் இரண்டாம் வகுப்பு. 'யாதும் ஊரடா எல்லாம் உறவடா' பாடல்.. டி.எம்.எஸ் மற்றும் ஏ.எல்.ராகவன் சேர்ந்து பாடும் பாடல் ஆரம்பத்தின் விசில் மற்றும் பாங்கூஸ் ஒலி பாடலுக்கு கூடுதல் சிறப்பு.
அடுத்து தனியாக வீட்டில் இருப்பதாக நினைத்து (நாகேஷ் இருப்பது தெரியாமல்) விஜய நிர்மலா (பி.சுசிலா) பாடும் 'நிச்சயம் நானே நேச்சுரல் பியூட்டி' செம்ம பெப்பி சாங். அதிலும் அட்டகாசமாக பாங்கூஸ் வாத்தியம்.
இந்த பாங்கூஸ், அக்கார்டியன் மற்றும் வயலின் மூன்றும் மெல்லிசை மன்னர் டி.கே.ஆருக்கு மிகவும் பிடித்த வாத்தியங்கள் போலும். 'நாடகமே இந்த உலகம்' மற்றும் 'ஏ ஃபார் ஆப்பிள்' (சாது மிரண்டால்), 'போதுமோ இந்த இடம்' (நான்) ..'மலரைப்போன்ற பருவமே'... 'எந்த எந்த நெஞ்சுக்குள்ளே'..மற்றும் 'பயணம் எங்கே' (மதராஸ் டு பாண்டிச்சேரி).. 'விழியால் காதல் கடிதம்' (தேன் மழை)..
எல்லா பாடல்களிலும் பாங்கூஸ் வாத்தியக்கருவியை பயன்படுத்தியிருப்பார் டி.கே.ராமமூர்த்தி அவர்கள்.
இப்படத்தில் 'தூக்கம் கண்ணிலே.. ஏக்கம் பெண்ணிலே' பாடலும் ' நிச்சயம் நானே நேச்சுரல் ப்யூட்டி' இரண்டுமே சுசிலா அவர்களின் வெற்றிப்பாடல்கள் வரிசையில்..
'நிச்சயம் நானே நேச்சுரல் பியூட்டி
நினைத்ததை செய்வேன் தட்ஸ் மை டுயூட்டி
விழிகளினாலே கதை பல சொல்வேன்
இதழ்களினாலே இன்சுவை தருவேன்'
பாடலின் ஆரம்பத்தில் கிடார், பாங்கூஸ் இசை அருமை.. சரணத்திற்கு முன்னும் நடுவிலும் பியானோ, அக்கார்டியன், கிடார் இசை.. பாடல் காட்சியில் நாகேஷின் சேட்டைகள், வி.நிர்மலாவின் நடனமும் நளினமான அசைவுகளும்.. எல்லாமே பிரமாதம்.
பாடலின் பல்லவி, அனுபல்லவியை உற்று கவனித்தால் கிட்டத்தட்ட 'நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்' (சாந்தி) பாடல் போலவே இருக்கும்.
கேளுங்கள் இதோ...
https://youtu.be/flFXKuv6GoI
(சீதாபதி ஶ்ரீதர்)
Discussion at:
https://www.facebook.com/groups/1018417744856618/permalink/1312813718750351/
No comments:
Post a Comment