Tiruchendurai Ramamurthy Sankar writes:
போன மாதம் பல்லவன் எக்ஸ்பிரஸ்ஸிற்க்காக ஶ்ரீரங்கம் ஸ்டேஷனில் நின்று கொண்டிருந்தேன். பக்கத்தில் இருக்கும் சிறிய காளி கோயிலிருந்து ஸ்ருதி , இசை, குரல், தாளம் எதுவுமில்லாமல் " தீமிதி, தீச்சட்டி" என்ற வார்த்தைகள் திரும்பத்திரும்ப ஒலிக்க யாரோ பாட்டு என்ற பெயரில் கீபோர்ட் மேல் ஏறி நின்று கொண்டு, தெய்வ நிந்தனை செய்துகொண்டிருந்தார்கள்.
சென்னையில் ஒரு ஆடியோ சிடி கடையில் பார்த்த பக்திப் பாடல்களின் விற்காத சி.டி.களில் இசைக்கோ பக்திக்கோ லவலேசம் சம்பந்தம் இல்லாமல் பட்டுப் புடவைப் பெண்டிரும், பட்டை விபூதி ஆண்களும் தென்பட்டார்கள். கடைக்காரர் " என்ன சார் செய்யிறது? 4-5 வருசமா விக்கல! எடுத்துட்டும் போமாட்டேன்றாங்க! சாமி படம் இருக்கிறதால் தூக்கிப் போடவும் மனசில்ல! எடத்த அடச்சுகிட்டு! யாராச்சும் பக்தி கேசட் ( சிடி) கொண்டாந்தா இப்பல்லாம் எடுக்கிறதில்ல. 10000 இருந்தா எந்தக் கழுதையும் சி.டி போட்டு கழுத்தறுக்கிறாங்க! சபரி மலை சீசனில் இன்னும் கொடுமை!" என்றார்.
சற்றே பின்னோக்கிச் சென்றால்......
LR ஈஸ்வரியின் கற்பூர நாயகியுடன் தான் ஆடி வெள்ளிக்கிழமைகள் அப்போதெல்லாம் தொடங்கின. ஜீயபுரம் நடேசா தியேட்டரில் சீர்காழியின் "விநாயகனே" போட்டவுடன் தான் படம் துவங்கும், கடவுள் மறுப்பு கலைஞர் வசனத் திரைப்படம் உட்பட!
விவரம் தெரிந்து நடு 80கள் வரை பக்திப்பாடல்கள் சினிமா ,கர்நாடக சங்கீதப் பாடல்களுக்கு இணையாக இருந்தன. ஆடிக்கிருத்திகைக்கு அழகென்ற சொல்லுக்கு முருகா பாட்டு போட்டபின் தான் " டிரொய்ங்ங்.......பரமேஸ்வரா! உலகைக்காக்கும் பரம்பொருளே" என்று திருவிளையாடல் ஒலிச்சித்திரம் துவங்கும். எத்தனை பேர் வந்தாலும் ஓம்காரத்துடன் கூடிய டி.எம்.எஸ்ஸின் முருகன் பாடல்கள் இல்லாது எந்தக் கலை நிகழ்ச்சியும் இருக்காது.
வீரமணியின் " இருமுடி தாங்கி" பாடல் , ( பாடல்-இசை வீரமணி-சோமு) இன்றும், சபரி மலை பக்தர்களின் நெஞ்சில் நீங்காத பாடல்.
SPB யின் திருத்தணிகை வாழும் முருகா , ஏழு மலை வாசா போன்ற இனிமையான பாடல்கள் இன்று எங்கே?
நடு 80களில் மெதுவாக இந்தப் பாடல்களின் இடம் காலியாகிவிட்டது. கவிஞர்கள் எழுதிய வியர்வையின் ராஜசுகம், மேகம்- ராகம், ராசா-ரோசா, பாரு-கூறுவிலும் இசையமைப்பாளர்களும் இந்த ஜானரை மறந்து போனார்கள். யாராவது 80 களிலிருந்து இன்றுவரை, எழுதி இசையமைக்கப் பட்டு, பிரபலமான தனிப்பட்ட பக்திப் பாடல்களை நினைவு கூர முடியுமா? ( திரைப்படப் பாடல்களிலேயும் 2 பாட்டுகள் மட்டுமே தேறும் - இளையராஜாவின் ஜனனி, சந்திரபோஸின் பொய்யின்றி) . பாண்டிச்சேரி அன்னை மேல் கங்கை அமரன் பாடிய பாடலைச் சொல்பவர்களுக்கு நரகத்தில் 100% இட ஒதுக்கீடு உண்டு. ( கங்கை அமரனின் திறமைக்கு அந்தப் பாடல் ஒரு திருஷ்டிப்பொட்டு) .
உளுந்தூர்பேட்டை ஷண்முகம், நெல்லை அருள்மணி, பூவை செங்குட்டுவன் போன்ற கவிஞர்கள் பக்திப்பாடல்கள் ஜானரில் குறிப்பிடத்தக்கவர்கள். அவர்களுக்கு சரியான அங்கீகாரம் அரசிடமிருந்து கிடைத்ததா? தெரியவில்லை. பக்திப்பாடல்களில் டி.எம்.எஸ் தொட்ட சிகரங்கள் வேறு யாரும் தொடவில்லை. இலங்கை வானொலியும், இலங்கைத் தமிழர்களும் மட்டுமே இன்னும் இவற்றையெல்லாம் போற்றிப் பாதுகாக்கின்றார்கள்.
டி.எம்.சௌந்தரராஜன்
இவர் இசையமைத்துப் பாடிய வாலியின் அழகென்ற சொல்லுக்கு, மண்ணானாலும், பச்சைக் கலை மயில், கற்பனை என்றாலும், உள்ளம் உருகுதைய்யா ( பாடல் - ஆ.ண்டவன் பிச்சை) இன்னும் கேட்க இனிமையாக இருக்கிறது. அவரது கற்பக வல்லி நின், யாழ்பாணம் வீரமணி ஐயர் எழுதி இசையமைத்து டி.எம்.எஸ் இசைக்கோர்வை செய்து பாடியது. அதற்கு இணையான பாடல் இன்றுவரை வரவில்லை. எம்.எஸ்.வியின் கிருஷ்ணகானம் ( பாடல்கள்- கண்ணதாசன்) இசைத்தட்டிலும் ( சரஸ்வதி ஸ்டோர்ஸ்) டி.எம்.எஸ்சின் " புல்லாங்குழல் கொடுத்த" பாடலே சிகரம்.
சீர்காழி கோவிந்தராஜன்
"ற" வைய மெகா/மகாவல்லினமாக அழுத்திப் பாடினாலும் வினாயகனே & நீ அல்லால் தெய்வம் ( இசை : DB ராமசந்திரன்). DBR ஜி.இராமநாதனின் உதவியாளராகவும் இருந்தவர். திறமையானவர். சீர்காழியின் மற்ற பாடல்கள்.....ஆவி குடியிருக்கும், சின்னஞ்சிறு பெண் போலே ( பாடல் : உளுந்தூர்பேட்டை ஷண்முகம்) பழனி மலை முருகா, நீல மயில் மீது போன்ற பாடல்கள் இன்றும் பிரபலம்.
பி.சுசீலா
டி.எம்.எஸ்ஸைத் தொடர்ந்து அதிகமான பக்திப்பாடல்கள் பாடியவர் பி.சுசீலா. தவமிருந்தாலும் ( இசை HMV ரகு) , மாணிக்க வீணை, தாமரைப் பூவில், திருவிளக்கை, ரக்ஷ ரக்ஷ ஜகன் மாதா. தவமிருந்தாலும் ( த்வஜாவந்தி) , மாணிக்க வீணை ( மோகனம்), தாமரைப் பூவில் ( தோடி) பாடல்கள் அந்தந்த ராகங்களுக்கு ரெடி ரெக்கனர் போன்றவை. எளிமையான வரிகள் " வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாள் எங்கள் உள்ளக் கோவிலிலே குடியிருப்பாள்". சர்ச்சில் சொல்வதுபோல் All the great things are , simple!
மற்றவர்கள்
சூலமங்கலம் சகோதரிகளின் , சேவல் கூவும், குன்னக்குடியின் திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தாய், எழுதி எழுதி பழகி வந்தேன் ( இரு பாடல்களும் திரைப்படங்களில் கந்தன் கருணை / குமாஸ்தாவின் மகள் பிரபலமான பின் பயன்படுத்தப் பட்டவை). ஆடுகின்றானடி தில்லையிலே பாடல் ஏடு தந்தானடி தில்லையிலே என்று ராஜராஜ சோழன் படத்தில் பயன்படுத்தப்பட்டது. சென்ற மாதம், சூலமங்கலம் ராஜலக்ஷ்மிக்கு நண்பர் சரவணன் தனது அற்புதமான அஞ்சலியைப் பதிவு செய்திருந்தார்.
பெங்களூர் ரமணி அம்மாள் பாடிய வேலவா, பாசி படர்ந்த மலை. தமிழ் சினிமாவின் பிந்தைய சாதனை அவரது குன்றத்திலே குமரனுக்கு ( தெய்வம்) பாட்டைச் சிதைத்தது. KBS இன் பாடல்களையே கேவலப்படுத்திய கோடம்பாக்க மாக்களுக்கு , ரமணி அம்மாள் எம்மாத்திரம்?
சபரி மலை பக்தர்கள் ஏசுதாஸின் மலையாளப் பாடல்களான என் மனம் பொன்னம்பலம், காசி ராமேஸ்வர பாண்டி மலையாளம், கங்கையாறு பிறக்கும், பாடல்களை இனிமையாக நினைவு கூர்வார்கள்.
கிறித்தவ பக்திப் பாடலான எம்.எஸ்.வியின் குழலும் யாழும் , கிறிஸ்மஸ் , ஈஸ்டர் தினங்களில் முதல் பாடலாக இலங்கை வானொலியில் ஒலிக்கும். திருச்சி வானொலியில் காலை 6- 6.30 பக்திமாலையிலும் இந்தப்பாடல் அடிக்கடி இடம் பெறும். ஒரு முறை புனித அந்தோணியார் படப் பாடலான " மண்ணுலகில் இன்று" ( வாணி / தஞ்சை வாணன் / எம்.எஸ்.வி) பாட்டையே பக்தி மாலையில் ஒலிபரப்பினார்கள். ( அந்த நிகழ்ச்சியில் திரைப்படப் பாடல்கள் வரக்கூடாது என்பது வழக்கம்)
இஸ்லாம் பக்திப்பாடல்களில் நாகூர் அனீபாவின் இறைவனிடம் கையேந்துங்கள், மதினா நகருக்கு போன்றவை அடிக்கடி ஒலி பரப்பப்பட்டு மக்கள் மனதில் இடம் பெற்றிருந்தன.
இன்று இதை வெற்றிகரமாகச் செய்ய எந்த இசையமைப்பாளர்/ பாடகருக்கோ ஞானமும் , தைரியமும் இருக்கிறதா? அந்தப் பாடல்களில் இசை, வார்த்தைகள் தாண்டி தென்படுபவை பாடகர்/கவிஞர்/ இசையமைப்பாளர் இவர்களின் மனதொருமித்த உழைப்பின் சங்கமம். ஹாரிஸ் ஜெயராஜ் பழைய , சராகமான பாடலான ஏசு பிறந்தாரேவை , பார்த்த முதல் நாள் ஆக்கியதும், தேவா கந்த சஷ்டிக்கவசத்தை கேவலப்படுத்தியதும் மட்டுமே பின்னாள் சாதனைகள்.
( நான் குறிப்பிட்டுள்ள பாடல்கள் தவிர இன்னும் பல பிரபல பாடல்கள் உள. அந்தப்பாடல்களை எழுதிய கவிஞர்கள் பெயரையும், இசையமைப்பாளர்கள் பெயரையும் தொகுத்து இங்கு பதிவு செய்ய முயற்சிக்கிறேன்)
Discussion at:
https://www.facebook.com/groups/1018417744856618/permalink/1336385333059856/
No comments:
Post a Comment