dhool

dhool
Click on the above image and Join the discussion in our Facebook group

Friday, July 28, 2017

The Chandra Bose chronicles -Part 5

Tiruchendurai Ramamurthy Sankar writes:

The Chandra Bose chronicles -Part 5

சந்திரபோஸ் சந்திப்பு (2006)

கராமா ( துபாய்) சங்கீதாவில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது திடீரென அவரைப் பார்த்தேன். பேச முயற்சி செய்யும்முன் போய்விட்டார். சரவணனிடம் சொன்னபோது .....எப்படியாவது மீட் பண்ணிருங்க. செலிப்ரிடி மீட்...தூள்ல ( தூள்.காம்) எழுதுங்க என்றார். ( பழைய தமிழ்ப் படங்களில் பெயர் போடும்போது வரும் " மற்றும் பலர்" கூட யாரென்று தெரிந்தவர் சரவணன்.!)

நான் இருந்தது அடுத்த கட்டிடம். என் வீடு இருக்கும் கட்டிடத்தில் பீமாஸ் ரெஸ்டாரெண்ட வைத்திருந்தவர் அடுத்த நாள் என் ஆஃபீஸிற்கு வாடகை கொடுக்க வந்திருந்தார். ( என் கம்பெனியின் கட்டிடம் அது) . அவரிடம் பேச்சு வாக்கில் சொன்னபோது தன்னால் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யமுடியும் என்றார். சந்திரபோஸ் ஒப்பந்தங்களை மேற்பார்வயிடும் விளம்பரக் கம்பெனி பணியாளர் நம்ம கடையில் தினம் சாப்பிடுகிறார். நான் சொல்லிடறேங்க என்றார்.


சந்திப்பன்று பீமாஸில் ஒரு மூலை எங்களுக்கு ஒழித்துக் கொடுத்தார்.
முதல் கேள்வி வழக்கம் போல. "ஏண்டி முத்தம்மா. " எவ்வளவு சந்தோஷமான விஷயம். எதுக்கு மறச்சன்னு திட்னாருங்க. பொறாமையே இல்லாத மனுஷன்" என்றார் எம் எஸ் வி பற்றி. இன்று யோசிக்கும்போது, அந்தப் பாட்டைத் தன்னுடைய அடையாளமாகக் கேட்டதற்கு 100 படங்கள் செய்த போஸும் சுளிக்கவில்லை.

" எனக்கு முதல் படம் பண்ணும்போது சின்ன வயசுதான். ஆனா ரெக்கார்டிங்கு உள்ள போனபோது எல்லா மியூசியன்ஸும் எழுந்திருச்சு நின்னபோது இந்த வேலையோட இம்பார்டன்ஸ் தெரிஞ்சிது. பெரியவங்க எல்லாம் எழுந்து நின்னபோது கொஞ்சம் பயமா இருந்தது. ஆனா என்னுடைய திறமையில நம்பிக்கை இருந்தது. 72 மேளகர்த்தாவும் பாடங்க. எல்லா இன்ஸ்ட்ருமெண்ட்டும் வாசிப்பேங்க"

தான் போட்ட டியூனுக்கு டம்மி வார்த்தைகளே பாடலின் பல்லவியானதைச் சொன்னபோது குழந்தை போல் சந்தோஷப்பட்டார்.

பாட்டு முடிக்கணும். என்னுடைய வரி ரொம்ப கொடுமை..." வாய்க்கா வரப்புக்குள்ள வயசுப் புள்ள பதுங்கி ஒதுங்கி ஓடுது" என்று சொல்லி பெரிதாகச் சிரித்தார்.

தரையில் வாழும் மீன்கள் ( மழைக்கால) , பார்வையின் மறுபக்கம் ( சந்தோஷ நேரங்கள்), அந்த இந்திர லோகமே ( பொண்ணு பிடிச்சிருக்கு)/ என்றெல்லாம் பேசும்போது " உங்களுக்கு நிறைய பாட்டெல்லாம் தெரிஞ்சிருக்கு" என்று அதிசயமாகப் பார்த்தார். ( சரவணன் கூட இல்லாததால் பாராட்டை நைசாக ஏற்றுக்கொண்டு விட்டேன்!)

வி.சி.குகநாதனை நன்றி மறக்காமல் குறிப்பிட்டார். ஏவி எம் பற்றியும்.
வம்புக்கு அலையும் நான் " யாருங்க அந்த ராஜ் சீதாராமன்?" (வெள்ளை மனம் ). என்று கேட்டேன். குறுகிய காலத்தில் இளையராஜா, நரசிம்மன், சந்திரபோஸ், பப்பி லஹரி என்று எல்லாருடைய இசையிலும் பாப்புலர் பாடல்களை பாடிவிட்டு மின்னல் போல காணாமல் போனவர். சந்திரபோஸ் " ரொம்ப தெரியாதுங்க. யாரோ இன்கம் டாக்ஸ் ஆஃபீசர் பையன்னு சொல்லி கூட்டி வந்தாங்க. பாடச்சொன்னேன்" என்று அப்பாவியாகச் சொன்னார்.
பேச்சு , சேஷாத்ரியின் கமறல் குரலொடு வரும் வண்ணச்சுடர் " ராம்-ரஹீம்" நாடக இசை , போஸஸ்-தேவா என்று வந்தவுடன் சற்று தடை பட்டது. சாப்பிட்டோம்.

கத்தார், துபாயில் உள்ளூர் குழுக்களுக்கு இசை அரேஜ்மெண்ட் வேலை செய்வதற்காக 3 -3 மாசம் வந்து இருப்பேன். லண்டனில் இதே போன்ற வாய்ப்புகள் வேறொரு தமிழ் இசையமைப்பாளர் புகுந்து திசை திருப்பியதைச் சொல்லி வருந்தினார். ஆனால் உடனே நான் " கொலுசே கொலுசே" " சந்தோஷம் காணாத" என்று பாட்டுகளை சொல்ல ஆரம்பித்ததும் பழையபடி சிரித்து பேச ஆரம்பித்தார்.

பெரிய பேனர், டைரக்டர் படங்கள் என்றவுடன் , ரஜினி ஏ.வி.எம்மோட யாருங்க பெரிசு ?/என்றார். அதே போல் " பொய்யின்றி" பாட்டு இல்லாத ஐயப்பன் பூஜை உண்டா? " பொண்ணு புடிச்சிருக்கு இன்னும் பெரிதாகப் பேசப்படவில்லை என்ற வருத்தமும் இருந்தது.

எஸ்.பி.பிக்கு " யாரோ மன்மதன்"( ராஜாத்தி ரோஜாக்கிளி) பாட்டு ஒண்ணு போதுங்க. அவரே எனக்குப் பிடிச்ச பாட்டுன்னு சொல்லியிருக்காரு.
ஜெயச்சந்திரனை அதிகம் ஏன் பயன்படுத்தவில்லை என்றதும் அப்படியா என்றார் :)

ஆல் இந்தியா ரேடியோவிற்காக " இரு கண்ணில் மீனாட்சியோ" ( ஏமாற்றாதே ஏமாறாதே) பாடலை கீபோர்டில் வாசித்து அதை அவர்கள் நிகழ்ச்சிகளுக்கு இடையில் பயன்படுத்தியது என்று தொடர்ந்தது.
உச்சத்தில் இருந்து, பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து, சினிமாவின் வானிட்டி முற்றிலும் இல்லாமல் தன் தோல்விகளையும் பற்றி ரசிகனிடம் பேசிய ஒருவரைச் சந்த்தித்தது மறக்கமுடியாதது. தன்னுடைய 30 வருடத்துப் பாடல்களை 6000 கிமி தொலைவில் , எதிர்பாராத இடத்தில், யாரோ நினைவில் வைத்துள்ளார்கள் என்ற கலைஞனின் சந்தோஷம் அவர் கண்ணில் இருந்தது.

******
இந்தப் பேட்டியைப் பற்றி நான் மறக்க விரும்புவது அந்த விளம்பரக் கம்பெனி தமிழ்க்கார முழு மூடர் கொடுத்த எரிச்சல்கள். சினிமா, இசை , நாஸ்டால்ஜியா என்ற எந்தவிதமான டிஸ்ட்ராக்‌ஷனும் இல்லாமல் இதில் தனக்கு எதாவது சில்லறை உண்டா என்று தேவாங்கு போல் பார்த்துக் கொண்டு , நடுவில் உளறிக் கொட்டினார். கலைஞர்களை பார்க்கும்போது ப்ரோக்கர்களை அழைத்துப் போகாதீர்கள்.

Discussion:
https://www.facebook.com/groups/1018417744856618/permalink/1674540615910991/

No comments:

Post a Comment