dhool

dhool
Click on the above image and Join the discussion in our Facebook group

Wednesday, September 25, 2024

SPB Remembrance 2024

 

🎵நெஞ்சிலிட்ட கோலமெல்லாம் அழிவதில்லை🙏


இந்த ஒரு நாள் ஒவ்வொரு வருடமும் வராமல் போனால் என்ன என்று தோன்றும் அளவுக்கு ஒரு வெறுமை, ஒரு இயலாமை இதயத்தை கனமாக பற்றிக்கொள்கிது... 


நாள் முழுதும் வேலையில் மூழ்கியிருந்தாலும், அந்த வேதனை வாட்டிக்கொண்டே தான் இருக்கிறது. பாழான நாளிதென்று பார்த்தவர்கள் கூறவில்லை.


யோசித்துப்பார்த்தால் அவர் மறைவுக்கு முன் கடைசி 10 வருடங்களுக்கு மேல் SPBக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு தமிழ் சினிமாவில் பெரிய வாய்ப்புகள் இல்லை. அவர் மறையாமல் இருந்திருந்தாலும் அவருக்கு புதிய பாடல்கள் பாடும் வாய்ப்புகள் கிடைத்திருக்க போவதில்லை. அவர் ஏற்கனவே எழுபதுகளிலும் எண்பதுகளிலும் பாடிய அருமையான பாடல்கள்- அந்த விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள் நம்மிடம் பத்திரமாக இருக்கின்றன. தினமும் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறோம். அவரை நேரில் சில நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கிறேனே தவிர சந்தித்து ஆறஅமர பேசியதில்லை. அவரின் பாடல்களை அவரிடம் சிலாகித்து கரங்களை பற்றி நன்றி கூறியதில்லை. பிறகு ஏன் இந்த பெரும் சோகம்? என்னில் ஒரு பாகத்தை இழந்தது போல் ஒரு தவிப்பு?


விடை கிடைத்தது- நான் miss செய்வது SPBயெனும் பாடகரை அல்ல, SPBயெனும் மனிதரை! சந்திக்காத ஒரு மனிதரின் மறைவு ஒரு பேரிழப்பாகுவது SPBயின் கதையில் மட்டுமே சாத்தியம். அதற்கு காரணம்- வேறு எந்த கலைஞருக்கும் இல்லாத ஒரு visibility SPBக்கு இருந்தது. He was present everyday, everywhere! With a pleasant, casual tone, remarkable recall, reverence towards all artistes, childlike simplicity  and fantastic sense of humour, we could not but be drawn to him! Irresistible!


அவரின் தொலைக்காட்சி பேட்டிகளில் நினைவுகூர்ந்த சுவாரஸ்யமாக தகவல்கள், மேடை கச்சேரிகளின் அவர் செய்த spontaneous improvisations, பாட்டு போட்டிகளில் நடுவரகாக அமர்ந்து  போட்டியாளர்கள் பாடும்போது சிரித்து, ரசித்து,  தட்டிக்கொடுத்து, உச்சி முகர்ந்து உற்சாகப் படுத்தி.. அவர்கள் செய்த பிழைகளைக்கூட மென்மையாக எடுத்துக்காட்டி, அந்த பாடல்களில் நாம் உணராத சின்னச்சின்ன நுணுக்கங்களை அழகாக பாடி காண்பித்து...இப்படி ஒவ்வொரு நாளும் அவருடனே மிக இனிமையாக கழிந்தது. அதுவும் Social media வந்த பிறகு இவையெல்லாம் நாம் மீண்டும் மீண்டும் ரசிக்க கிடைத்தது. 'Simply SPB' என்ற அவரது youtube சேனல் லாக்டவுன் காலத்தில் பெரும் ஆறுதலாக இருந்தது. இதிலெல்லாம் முன்னின்று நம் கவனத்தை ஈர்த்தது அவரின் தன்னடக்கம். For a genius of his stature, his humility was actually absurd, yet so so endearing! சக பாடக- பாடகியர், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள், வாத்திய கலைஞர்கள்- எல்லோரிடமும் அவருக்கு பாகுபாபடின்றி மரியாதையும் நேசமும் இருந்தது. 


வேறு பாடகர்கள் தங்களை பாட அழைத்த  இசையமைப்பாளர்களை இம்சித்த, தரக்குறைவாக பேசிய, பாட மறுத்த உதாரணங்கள் பல உண்டு. ஆனால் SPB ஒருத்தரிடமும் பகைமை பாராட்டியதில்லை, ஏளனம் செய்ததில்லை, சிறுமைப் படுத்தியதில்லை. பல பெரிய படங்களுக்கு இசையமைத்த இசைஞானி இளையராஜாவாக இருந்தாலும், ஒரு சின்ன படத்துக்கு (கௌரி மனோகரி) இசையமைத்த இனியவனாக இருந்தாலும், SPBயின் மெனக்கெடல், ஒத்துழைப்பு, ஈடுபாடு, பாடல் ந‌ன்றாக வரவேண்டும் என்ற அக்கறை எல்லாமே  நூறு சதவீதமாகவே இருந்தது. This was a Man!


அந்த வகையில் அவ்வளவாக பிரபலமடையாத இசையமைப்பாளர்களின் இசையில் SPB பாடிய எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் சில:


1.படம் 'நீ சிரித்தால் நான் சிரிப்பேன்'

இசையமைப்பாளர்- ஷியாம் - இவரை அதிக பிரபலம் அடையாதவர் என்று சொல்ல மனம் ஒப்பவில்லை. ஆனால் முன்பு அவரை பற்றி எழுதிய போது இங்கு பலருக்கு ஷியாமை தெரிந்திருக்கவில்லை... அதனால் மீண்டும் அவரை நினைவுக்கொள்ள இந்த அழகான பாடல் 🎵💖


https://youtu.be/LLePYBP_I0U?feature=shared


2. படம் 'அன்னப்பறவை'. (1980)

இசை: R. ராமானுஜம். இவர் ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் சில படங்களுக்கு இசையமைத்தவரும் அதன் பின்னர் 'எக்கோ' கம்பெனியை அமெரிக்காவில் நடத்தியவருமான R. பார்தசாரதியின் இளைய சகோதரர்.  வாய்ப்புகள் சரிவர கிடைக்காமல் மறைந்துப்போன பெரும் மேதை.

இந்த மனதை வருடும் மெலடியை கேட்டுப்பாருங்கள், ராமானுஜத்தின் மேதாவிலாசங்கள் புரியும்... 🎵💖


https://youtu.be/KIm0bjr_E1U?feature=shared


3. படம் 'பல்லவி இல்லாத பாடல்' (1980- படம் வெளிவரவில்லை)

இசையமைப்பாளர்: N.S.தியாகராஜன் ( மிகவும் பிரபலமான 'மலர்களின் ராஜா' (வள்ளி தெய்வானை/1973), 'தந்தைக்கு ஒரு பிறவி (சமர்ப்பணம்/ 1974) போன்ற பாடல்களுக்கு இசையமைத்தது இவர் தான். அதற்கு பிறகு வாய்ப்புகள் சரிவர அமையவில்லை.


ஒரு பார்வையற்றவனின் குமுறலை, புறக்கணிப்பின் வேதனையை அர்த்தமுள்ள வரிகளில் கொட்டியிருக்கிறார் பாடலாசிரியர் பட்டுக்கோட்டை தண்டாயுதபாணி. அந்த பார்வையற்ற தெருப்பாடகன் பாடும் சூழலுக்கேற்ப ஹார்மோனியக் கட்டைளையே பிரதான வாத்தியத் துணையாய் பொருத்தமாக அமைத்திருக்கிறார் தியாகராஜன். உருகுகிறார்,  உருக்குகிறார் SPB 🎵💖


https://youtu.be/rVRcGOAanf0?feature=shared


4. படம்: 'காற்றுக்கென்ன வேலி' (1982)

இசையமைப்பாளர்: சிவாஜி ராஜா. இவரைப் பற்றி நீண்டு பதிவு பல வருடங்களுக்கு முன் எழுதியிருக்கிறேன். 2003 வாக்கில் என் அத்தையின் ஷெனாய் நகர் வீட்டின் மாடியில் 'சிவாஜி ராஜா' என்று ஒருவர் குடிவந்திருக்கிறார். சங்கீத வகுப்புகள் எடுத்துக்கொண்டிருக்கிறார். சில திரைப்படங்களுக்குக்கூட இசையமைத்ததாக சொல்கிறார் என்று என் அத்தை சொன்னவுடன் ஓடோடி சென்று அவரை சந்தித்தேன். எனக்கு மிகவும் பிடித்த சில பாடல்களை உருவாக்கியவர் ஆயிற்றே! தன்னை திரையுலமே மறந்த போன நிலையில் எப்பொழுதோ அவர் இசையமைத்த பாடல்களை எல்லாம் நான் பாராட்டியதை கேட்டு அவர் கண்களும் உள்ளமும் நிறைந்தன...


காணாமல் போன தன் காதலியை தேடி அலைகிறான் இந்த கதாநாயகன். தனிமை, தவிப்பு, இயலாமை, இழப்பு, சோகம், கோவமென்று உணர்ச்சிக்குவியலாய் SPBயும் தேடித்திரிகிறார்... நம்மையும் அந்த தேடலில் இழுத்து விடுகிறார்! சிவாஜி ராஜாவின் அக்கார்டியன்- அக்காரவடிசல் 🎵💖


https://youtu.be/h2UhWVH9tMk?feature=shared


5. படம்: தணியாத தாகம் (1982)

இசை: A.A. ராஜ். இவர் 'ஒரு தலை ராகம்' படத்தின் இசையமைப்பில் T.ராஜேந்தருடன் இணைந்து பணிபுரிந்தவர். பெரும் மேதை. இவரைப்பற்றியும் முன்பு எழுதியிருக்கிறேன். வெகு சில படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு பெற்றார். பல தெலுங்கு இசையமைப்பாளர்களுக்கு உதவியாளராகவே இவர் காலம் சென்றது. 2008ல் இவர் மறைந்த போதும் யாரும் கண்டுக்கொள்ளவில்லை. செய்தி அறிந்து என் கண்கள் குளமாயின-  உரிய அங்கீகாரம் கிடைக்காமலேயே, அவரது இசைத்தாகம் தணியாமலேயே விடைப்பெற்ற அந்த கலைஞரை எண்ணி...


பாடலை கேட்டுப்பாருங்கள். நாயகன் பிரிந்து போன தன் காதலியுடன் மீண்டும் சேர்த்து விட இறைவனை வேண்டுகிறான்... SPBயுடன் சேர்ந்து ராஜின் சித்தாரும் கெஞ்சுகிறது!🎵💖


https://youtu.be/EhsLcbyQSZY?feature=shared


6. படம்: சரிகமப (1983- படம் வெளிவரவில்லை)

இசையமைப்பாளர்: ஸ்ரீகுமார். யாரிந்த ஸ்ரீகுமார், இந்த படத்தில் நடித்தவர்கள் யார் என்று எதுவுமே தெரியாமலேயே இலங்கை வானொலியில் ஞாயிறுதோறும் நேயர்கள் வாக்களிக்கும் பாடல் வரிசையில் பல வாரங்கள் முதல் இடத்தை தக்க வைத்துக்கொண்ட பாடல். காரணம்- SPB, of course!🎵💖


https://youtu.be/PkC8WgEQnIk?feature=shared


7. படம்: ஹேமாவின் காதலர்கள் (1985)

இசையமைப்பாளர்: ரவீந்திரன். ஆம், மலையாளத்தில் இசை ராஜ்ஜியம் நடத்திய அதே ரவீந்திரன் தான். 'ஹேமாவின் காதலர்கள்' புகழ்பெற்ற மலையாள இயக்குனர் T.V. சந்திரன் இயக்கிய இரண்டாவது படம். தன் முதல் படம் 'கிருஷ்ண குட்டி'  1981ல் வெளிவந்தவுடன் சந்திரன் ஆரம்பித்த படம் 'ஹேமாவின் காதலர்கள்'. பல வருடங்களாக தயாரிப்பில் இருந்து காலதாமதமாக 1985ல் வெளிவந்தது. 


இந்த பாடல் 1981-1982 வாக்கில் பதிவாகி இருக்கும். அப்பொழுது முன்னுக்கு வந்துக்கொண்டிருந்த ரவீந்திரனின் இசையில் SPB பாடிய அற்புதமான பாடல். ஒரு நதி வளைந்து திரிந்து சலசலவென ஓடுவது போல் சரணத்தை எதிர்பாரா ரம்மியமான திருப்பங்களுடன் எப்படி வடிவமைத்திருக்கிறார் ரவீந்திரன்! 💖🎵


https://youtu.be/8rTKcPy_P4U?feature=shared


8. படம்: ராஜா நீ வாழ்க (1986)

இசையமைப்பாளர்: K.ரவி. பழம்பெரும் இயக்குனர்  C.V. ராஜேந்திரன் இயக்கத்தில் எண்பதுகளின் டாப் ஜோடி பிரபு- அம்பிகா நடித்த இந்த படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு இந்த ரவிக்கு எப்படி கிடைத்து? இந்த படத்தின் எல்லா பாடல்களையும் இயற்றி இசையமைத்திருக்கிறார் இந்த ரவி.


தன் மனைவி கருவுற்றிருக்கிறாள் என்ற மகிழ்ச்சியில் கணவன் பாடும் அழகான பாடல். சரணத்தின் வித்தியாசமான வடிவமைப்பு, நடை மாற்றங்கள் வியக்கவைக்கின்றன. இந்த ரவியின் இசைவெளியில் தான் எத்தனை சௌர்தர்யமான பாதைகள் இருந்திருக்கின்றன! 🎵💖


https://youtu.be/p21gFv8kd2E?feature=shared


9. படம்: ஓடங்கள் (1986)

இசையமைப்பாளர்கள்: சம்பத்-செல்வம். நடிகர் 'குலதெய்வம்' ராஜகோபாலின் மகன்கள். திறமையானவர்கள். முறையாக சங்கீதம் பயின்றவர்கள். ( 'குலதெய்வம்' ராஜகோபாலே ஒரு தேர்ந்த வில்லுப்பாட்டுக்காரர்) ஓடங்களுக்கு பிறகு மேலும் சில படங்களுக்கு இசையமைத்தார்கள். இப்பொழுது சற்று சிரமமான நிலையில் இருப்பதால் SPB Trustலிருந்து மாதாமாதம் உதவித்தொகை அனுப்பப்படுவதாக கேள்விப்பட்டேன்.


இளமையின் துள்ளலும் காதலின் உற்சாகமும் பொங்கி ததும்பும் பாடலிது...SPBயின் கேலியும் கிண்டலும் கெஞ்சலும் கொஞ்சலும் அந்த இளம் இசையமைப்பாளர்களின் பாட்டை பட்டை தீட்டிய வைரமாய் ஜொலிக்க வைக்கிறது🎵💖


https://youtu.be/vtNsNkzzscs?feature=shared


10. படம்: நினைவோ ஒரு பறவை (1986- படம் வெளிவரவில்லை)

இசையமைப்பாளர்: ஜெர்ரி அமல்தேவ். மலையாளத்தில் பல அழகான பாடல்கள் தந்தவர்.


இந்த பாடலை நான் முணுமுணுக்காத நாளே இல்லை. துபாயில் ஒரு நண்பரின் வீட்டில் ஜெர்ரி அமல்தேவை சந்திக்க நேர்ந்தபோது இந்த ஒரு பாடலுக்காக அவர் கரங்களை பிடித்து என் கண்களில் ஒற்றிக்கொண்டேன். அவரும் நெகிழ்ச்சியில் என்னை ஆறத்தழுவிக்கொண்டார்! எல்லாம் அந்த விஷம்மக்கார SPB விரித்த வலை!🎵💖


https://youtu.be/eOHjRa8Y1Cg?feature=shared


அழுகின்ற உள்ளங்களே...

வாழ்க வாழ்கவே…🎵🙏


- Saravanan Natarajan

No comments:

Post a Comment