Tiruchendurai Ramamurthy Sankar writes:
Rajinikanth- The Journey to Superstardom - Part 2
தூள். காமில், வழக்கமாக அரிதான பாட்டு பற்றிதான் எழுதவேண்டும் என்பது சரவணனின் அவா! என்னுடைய வேண்டுகோளுக்கிணங்கி ....இம்முறை எல்லாருக்கும் தெரிந்த பாடல் , படங்களின் ஆராய்ச்சியில் :). 12 ம் தேதி பிறந்த நாள் கொண்டாடப் போகும் ரஜினியைப் பற்றி perspective எழுதலாம் என்ற முடிவில்......மொட்டையாக எனக்குப் பிடித்த பாடல்கள் என்று யூடியூப் லிங்க் கொடுப்பது சுலபம். அப்படி இல்லாமல் சற்று வித்தியாசமாக, அவர் வளர்ந்த விதம் பற்றி எழுதலாமே என்ற முயற்சி.
**************************
இரட்டை வேடம் .... என்னைப் போல இன்னொருவர் , என்ற கற்பனைதான், முதல் சயன்ஸ் ஃபிக்ஷன். அலெக்ஸாண்டர் டூமாவின் The vicomte of Bragelonne / The d'Artagnan Romances தான் இந்த இரட்டை வேடக் கதைகளின் முன்னோடி. எம்.கே ராதா ( அபூர்வ சகோதரர்கள்) , பி.யூ.சின்னப்பா ( உத்தமபுத்திரன்) , பிறகு சிவாஜி, எம்.ஜி.ஆர் , ரஜினி, கமல், சரத்குமார், அஜித்( வாலி) , பிரஷாந்த் ( ஜீன்ஸ்) , விஜய் ( அழகிய தமிழ் மகன்) , சூர்யா ( பேர்ழகன், வா.ஆ, 24) கார்த்தி( சிறுத்தை), சிம்பு, தனுஷ் ....அவ்வளவு ஏன் ? பல படிகள் இறங்கி ....டி.ராஜேந்தர் ( உறவைக் காத்த கிளி) ....இன்னும் ஒரிரு படிகள்.. ராமன் பரசுராமன் என்று சிவகுமார் வரை இரட்டை வேடம் போட்டிருக்கிறார்கள்.
கமல் இரட்டை வேடம் போடுவது ...நமக்கு சினிமாவிலும் பழகிய ஒன்று. 2,4 தொடங்கி பத்து வேடம் வரை போட்டிருக்கிறார்,.......... சினிமாவிலும்.
ஒவ்வொரு நடிகரும் தன் திறமையைக் காட்ட இரு வேட படங்கள் உதவும் என்று நம்புகிறார். டி.ராஜேந்தர் ஒரு வேடத்தில் வேட்டி+ கோடு போட்ட சட்டை, மறு வேடத்தில் பாண்ட்+ கட்டம் போட்ட சட்டை என்ற அளவில் உழைத்திருந்தார்.
இதன் சிறிய வேரியேஷன் இரண்டு குணாதிசயங்கள் கொண்ட வெவ்வேறு ஆட்களாக ஒரே நடிகர் வருவது...RL Stevenson நின் Jekyll and Hyde முன்னோடியாகத் தொடங்கி ஜெமினியின் நான் அவனில்லை, சிவாஜியின் எங்கள் தங்கராஜா, விக்ரமின் அந்நியன் , பிரபுதேவா, என்று அதல பாதாளத்தில் ஜோதிகா வரை வந்தாயிற்று. சுஜாதாவின் கணேஷ் - வசந்தே அவரது இரு பர்சனாலிட்டிகள். Superman, Spider-Man , ம் இதுதான் புஷ்பா தங்கதுரையின் வெங்கட்- குங்கட்டும் இதுதான் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
இந்த இரண்டு வேடங்களும் ஒரு குறுகிய காலத்திற்குள் வந்து ஒரு நடிகரை உச்சத்தில் கொண்டு வைத்தது என்றால் அது ரஜினிதான். பைரவி, தர்மயுத்தம் என்றெல்லாம் வந்தாலும் ரஜினியை மற்ற சிவகுமார், விஜயகுமார், ஜெய்கணேஷ் போன்ற அரைத்த மாவு நடிகர்களிடமிருந்து பிரித்து ஒரு முழு நட்சத்திரமாக்கிய 2 படங்கள், பில்லா மற்றும் தில்லுமுல்லு.
இரண்டுமே ஹிந்திப் படங்களின் ரீமேக் என்றாலும் ரஜினிக்குள் இருந்த ஸ்டாரையும், இயல்பான நகைச்சுவை நடிகரையும் வெளியில் கொண்டு வந்த முக்கியமான படங்கள் இவை.
***************************
பில்லா ( 26-1-1980)


ஜாதகத்தில் பூர்வ ஜென்ம புண்யஸ்தானம் நன்றாக இருக்கவேண்டும். ரஜினிக்கு அது இருக்கிறது என்றாலும் ஒரு அசால்ட்டான ஸ்டைலில் படத்தைத் தாங்கியிருப்பார். படத்திற்கு துக்ளக் விமர்சனத்தில் " எதாவது ஒரு காட்சியில் பில்லா போலீசிடமே காரைக் கேட்டு வாங்கித் தப்பிக்கும் காட்சி மட்டும்தான் இல்லை" என்று ராவியிருந்தார்கள். அபத்தமான காட்சிகளைக் கூட தன்னுடைய திரைத்தோற்றத்தால் மறக்கடிக்கவைக்கும் திறமை அவரிடத்தில் இருக்கிறது என்று அவருக்கே புரியவைத்த படம். படத்தில் " மை நேம் இஸ் பில்லா" ஒரு ரகளையான பாட்டு. கல்யாண்ஜி- ஆனந்த்ஜி எனக்குப் பிடித்த இசையமைப்பாளர்கள் என்றாலும் " மே ஹூ டான்" மரண மொக்கை. " பான் பனாரஸ்வாலா" ( வெத்தலைய போட்டேண்டி) ஒரு கல்ட் பாடல் . கிஷோரின் அராஜகத் திறமையை வெளிப்படுத்தும் பாடல்.
இந்தப் படத்தைத் தெலுங்கில் என்.டி.ஆர் செய்திருப்பார். ( யுகந்தர்) அந்தப் பாடலைப் பற்றிய என்னுடைய பதிவு. நான் எழுதிய 70களின் இளையராஜா பாடல் வரிசையில்...
யுகந்தர் (30-11-1979)
https://m.facebook.com/groups/1018417744856618?view=permalink&id=1399863666712022
ரஜினி, அமிதாப், NTR மூவரையும் பார்க்கும்போது இளம் வயது ரஜினிக்கு துணை நின்றாலும் மற்ற இருவரையும் அலட்சியமாக வீழ்த்தியிருப்பார். brass , SPB , கண்ணதாசனோடு MSVவியின் அட்டகாசம். ( ஜெமினி சினிமா என்ற பத்திரிகை அப்போது தொடங்கினார்கள். அதற்கான விளம்பரத்தில் இந்தப் பாடலின் டியூன் கம்போசிங்கைக் காட்டுவார்கள்) . நான் சொல்வது சரியா என்பதை 3 பாடல்களையும் பார்த்து முடிவு செய்துகொள்ளலாம்.
.
https://youtu.be/IfZ1N3Rz-G8
https://youtu.be/moUY-bqH25w
********************

1970 களில் சென்னையில் மேடை நாடகங்கள் பிரபலமானவை. தனிக்குடித்தனம் போன்ற, சற்றே பிராமண பாஷை அபத்தங்கள் இருந்தாலும் மௌலி,க்ரேசி மோகன், விசு போன்றவர்கள் வளர வாய்ப்பளித்தது மேடைநாடகங்கள். அவ்வாறு வந்த ஒரு நாடகம் " கேஷுவல் லீவ்" ( யார் ஆசிரியர் என்று தெரியவில்லை) . ஆபீசுக்கு லீவு போட்டு கிரிக்கெட் மாட்ச் செல்லும் ஒருவன் மாட்டிக்கொண்டதும் அது தன்னுடைய தம்பி என்று ஆபீசரை நம்பவைக்கும் கதை. இதே போல் ஒரு கதை ரிஷிகேஷ் முகர்ஜிக்கும் சில வருடங்கள் கழித்துத் தோன்றியபோது அவர் அதை ஒரு அற்புதமான படமாகக் கொடுத்தார். கோமல் சுவாமிநாதனின் கதை மலையாளத்திற்குப் போய் பின் தமிழில் குமாரவிஜயம் படமாகியதும் நம் வரலாறு.
உத்பல் தத் , தீனா பதக் இருவரின் நடிப்பும் அமோல் பலேகரின் நடுத்தரக் குடும்ப இளைஞன் முகபாவங்களும் படத்தை மறக்கமுடியாததாக்கின. பாலசந்தர் அதை தமிழில் எடுத்தபோது கமல் இல்லாமல் ரஜினியை வைத்து எடுத்தது பெரிய அதிசயம். விசு, தேங்காய், சௌகார், நாகேஷ் எல்லாரும் போட்டி போட்டுச் செய்திருந்தாலும் பொறுப்பான அண்ணன், பொறுக்கித் தம்பியாகவும் ரஜினி dazzled. அழகான அதிர்ஷடமற்ற மாதவி..ஹ்ம்ம்! அழகில் பிந்தியா கோஸ்வாமிக்கு , முந்திய கோஸ்வாமி மாதவி , இருந்தும் :(
இந்தப் படம் ரஜினி, தேங்காய் இருவருக்குமே அவர்கள் திரைப்பட வாழ்க்கையில் மிக முக்கியமான படம். இண்டர்வியூ காட்சி ஒரு laugh riot. அமோல் பலேகர் ....சாரி! அவரது நடிப்பு எல்லைகள் மிகக் குறைவு. சோட்டி டி பாத், சித்சோர் என்றெல்லாம் வந்து போயிருக்கிறார்.....இருந்தாலும் ரஜினிக்கு அருகில் கூட வரமுடியாது.
இதே நேரத்தில் (1982) , ஏறத்தாழ, இதே கதையை எஸ்.எஸ்.ஆர் , கதாநாயகனாக நடித்து "இரட்டை மனிதன்" என்ற பெயரில் வெளியானது. " நீ தொட மறந்த" என்று தொடங்கும் பாடலின் லிங்க் கொடுத்தால் என் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.
ரஜினியின் இயல்பான , குறும்பான பார்வையுடன் மறுபடி கண்ணதாசன்-SPB-MSV கூட்டணியில் .
https://youtu.be/J5CbqHxMLd0
**************************
இன்று அந்த entertainer ஐக் காணவில்லை. கருத்து கந்தசாமிகளிடமும், ஜாதியை முன் வைத்து வியாபாரம் செய்யும் ஒரு விபரீதக் கோட்பாட்டுக் கூட்டத்தில் சிக்கியிருக்கும் ஒரு திக்குத் தெரியாத முதியவர் மட்டும் அந்த சக்கர வியூகத்தில் மாட்டி இருப்பது தெரிகிறது. இல்லாத மேடையொன்றில் எழுதாத நாடகத்தை நடித்துக்கொண்டிருக்கிறார்.
இருந்தாலும் , என் சிறு வயது நினைவுகளுக்காக....
இனீயெ பிறெந்த நாள்ள்ல் வாழ்ள்த்துக்கள் ரஜினி!
Discussion at
https://www.facebook.com/groups/1018417744856618/permalink/1813915191973532/
No comments:
Post a Comment