dhool

dhool
Click on the above image and Join the discussion in our Facebook group

Wednesday, April 12, 2017

SOLLA VALLAAYO KILIYE - KAVARI MAAN

Tiruchendurai Ramamurthy Sankar writes:

The Kings Treasuries - Part 19

சொல்ல வல்லாயோ கிளியே

1954 ல் டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில் , முதன் முறையாகவும், கடைசி முறையாகவும், சிவாஜியும் எம்ஜியாரும் சேர்ந்து நடித்து கே.வி.மஹாதேவன் இசையில் வெளிவந்த படம் கூண்டுக்கிளி. நண்பனுடைய மனைவி மேல் ஆசை கொள்ளும் ஜீவா எனும் எதிர்மறைப் பாத்திரத்தில் சிவாஜி. பெரிய தோல்விப்படம். படத்தில் டி.வி.ரத்தினம் , கதாநாயகி BS சரோஜாவிற்காகப் பாடியது சொல்ல வல்லாயோ கிளியே எனும் பாரதியார் பாடல். சிவாஜியின் கனவுப்பாடலாகவே பாதிக்குமேல்.கே.வி.எம் ராகமாலிகையில் செதுக்கிய பாடல்.
---------------------------------------

பாரதியார் பாரதிதாசன் பாடல்களுக்கு இசையமைப்பது இசையமைப்பாளர்களுக்கு பெருமை தரும் விஷயம். ஏனெனில் அதற்கான மெட்டுகளை அவர்கள் எழுதப்பட்ட பாடலுக்குப் போடவேண்டும். அதுநாள் வரை இந்த ஃபயர் எக்சாமினேஷனை இளையராஜா செய்யவில்லை. முதன் முதலில் அவர் செய்தது எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் சிவாஜி , கல்கத்தா விஸ்வநாதன், பிரமீளா, எஸ்.வரலக்‌ஷ்மி, ஸ்ரீதேவி, மாஸ்டர் சேகர் நடித்த கவரிமான்( 1979) படத்தில். இந்தப் படத்தில் சிவாஜிக்கு கிட்டத்தட்ட ரோல் ரிவர்சல். துரோகம் செய்த மனைவி பிரமீளாவைக் கொலை செய்யும் ஐ ஏ எஸ் அதிகாரியாக சிவாஜி. மகளாக ஸ்ரீதேவி. பஹுதாரி ராகத்தில் ஏசுதாஸ் பாடும் ப்ரோவ பாரமா, ( தியாகராஜ க்ருதி) வகுளாபரணத்தில் எஸ்.பி.பியின் பூப்போலே உன் புன்னகையை ( பஞ்சு அருணாசலம்) இரண்டும் மிகப் பிரபலம். ராஜாவின் முதல் பாரதியார் பாட்டு எஸ்.வரலக்‌ஷ்மி பாடும் சொல்ல வல்லாயோ. ( பாரதியார்- கிளி விடு தூது) அவர் கச்சேரி செய்வதுபோல் காட்சியமைப்பு.
----------------------------------------

எஸ்.வரலக்‌ஷ்மியின் சிங்காரக் கண்ணே ( வீரபாண்டிய கட்டபொம்மன்- ஜி.ராமநாதன்) , தென்றல் வந்து ( சிவகங்கை சீமை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி) இரண்டும் காருண்ய ரசத்தின் மிகச்சிறந்த 5 பாடல்களில் இடம் பெறும். ஆனால் வெள்ளி மலை மன்னவாவில் ஆரம்பித்த அவரது டெரிஃபிலின் தந்த ஊக்கக் குரலில் ஆஸ்த்மாவைத் தொடும் பாடல்கள் , மங்கலம் காப்பாய் ( தாய்- எம் எஸ் வி) , இந்த பச்சைக் கிளி ( நீதிக்குத் தலைவணங்கு- எம்.எஸ்.வி) , ஏடு தந்தானடி ( ரா.ரா.சோழன் - குன்னக்குடி வைத்யநாதன்) கேட்கப்படும் போது நமக்கே மூச்சு வாங்கியது.

பல்லவியை சுருட்டி ராகத்தில் ஆரம்பிக்கும் ராஜா, சரணத்தில் அடானாவிற்கு சென்று பின் சற்றே பாதுகாப்பாக தன் ஷண்முகப் பிரியா கோட்டைக்குள் இருந்துவிடுகிறார். ஏராளமான ஸ்வர பிரஸ்தாரங்களுடன் நின்று விடுகிறது. இளையராஜா ரசிகன் இல்லாத எனக்கு அவர் ரசிகர்களான நண்பர்களுடன் அன்றைய காலத்தில் சண்டை போட பெரும் வாய்ப்புக் கொடுத்தது! ( சங்கர்-கணேஷின் பாரதிதாசன் பாடலான சித்திரச்சோலைகளே ( நான் ஏன் பிறந்தேன்) , கங்கை அமரனின் " சுட்டும் விழி ( பாரதியார்- மலர்களே மலருங்கள்- சுசீலா) இதைவிட பெட்டர் என்று இன்றும் சொல்வேன்!) ஆனால் இன்று சற்றே விரிந்த தொடுவானத்தில் , நடுத்தர வயதில், இது மட்டும் ஒரு இசை அமைப்பாளரின் திறமைக்குச் சான்றாய் இருக்கமுடியாது என்று புரிகிறது.

கர்நாடக இசைக்குள் முழுமையாக இறங்கி ஒரு உயரமான பெஞ்ச் மார்க்கை அவர் ஏற்படுத்திய படம் கவரிமான்.

https://youtu.be/abaUMBWWwZw



Discussion at:
https://www.facebook.com/groups/1018417744856618/permalink/1509545369077184/

No comments:

Post a Comment