மென்குரலோனின் முத்துச்சரங்கள்
நேற்று P.B.ஸ்ரீனிவாஸின் பிறந்த நாள். அவரை பற்றி இன்னும் என்ன எழுதுவது! அவரை சந்தித்த ஒவ்வொரு முறையும் எனக்கேற்பட்ட சுவாரஸ்யமான அனுபவங்கள், நினைவுக்கூறிய பாடல்களென பல பதவிவுகள் எழுதிவிட்டேன்.
அவரின் பாடல்களை இன்று மட்டுமல்ல, அடிக்கடி நினைத்து பார்ப்பதுண்டு. பல வருடங்கள் பாடிக்கொண்டிருந்தாலும் தமிழை பொருத்தவரை அவரது பொற்காலம் என்னவோ 1961- 66க்கு உள்பட 5-6 வருடங்கள் தான். ஆனால், அந்த குறுகிய காலத்தில், முக்கியமாக மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்- ராமமூர்த்தி இசையில் PBS பாடிய பாடல்கள் அத்தனையும் தமிழ் திரையிசையின் பொக்கிஷங்கள். அவற்றிலிருந்து நான்கு பாடல்களை உங்கள் கவனதுக்கு கொண்டு வர ஆசைப்படுகிறேன்....
முதல் பாடல் மட்டும் இன்றைய பதவில். வரும் நாட்களில் மற்ற மூன்றையும் ஒவ்வொன்றாக கொண்டாடலாம்.
முதலில் ஒரு சோலோ பாடல். 'காலங்களில் அவள் வசந்தம்', 'சின்னச்சின்ன கண்ணனுக்கு', 'நேற்றுவரை நீ யாரோ', 'கண்களே கண்களே', 'நிலவுக்கு என் மேல்', 'மயக்கமா கலக்கமா', 'மனிதன் என்பவன்', "மௌனமே பார்வையாய்' 'நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்' 'பூ வரையும் பூங்கொடியே', 'மாடி மேலே மாடி கட்டி', 'உங்கள் பொன்னான கைகள்', 'நிலவே என்னிடம் நெருங்காதே' .... இப்படி விஸ்வநாதன்- ராமமூர்த்தி/ அல்லது தனித்து விஸ்வநாதன் இசையில் PBS பாடிய வகை- வகையான சோலோ பாடல்கள் தசாப்தங்கள் கடந்து, தலைமுறைகள் கடந்து இன்றும் வானொலிகளிலும் டிவி பாடல் போட்டிகளிலும் அமர்களமாய் வலம் வருகின்றன....
'தென்றல் வீசும்' என்றொரு படம். கல்யாண்குமார், கிருஷ்ணகுமாரி நடிப்பில் 1962ல் வெளிவந்தது. இயக்கியவர் பெரியவர் B.S. ரங்கா. ( கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ் மொழிகளில் பல படங்கள் இயக்கியவர். இவரது வீடு எங்கள் எதிர் தெருவில் தான் இருக்கிறது. அவர் மறைந்து பல வருடங்களாகியும் இன்றும் 'B.S.Ranga' என்ற பெயர் பலகை அந்த பங்களாவின் வெளியே கம்பீரமாக காட்சி அளிக்கிறது)
'தென்றல் வீசும்' படத்தில் விஸ்வநாதன்- ராமமூர்த்தி இசையில் 10 பாடல்கள். அவற்றில் ஒரே ஒரு பாடலைத்தான் PBSஸுக்கு கொடுத்தார்கள். ஒரு பாடல் தான்- ஆனால் எப்பேர்பட்ட பாடல்! எனக்கு மிகவும் பிடித்த கவிஞர் மாயவநாதன் எழுதியது.
//அழகான மலரே அறிவான பொருளே
தெளிவான தெளிவே செஞ்சாந்து மணமே
உன் கண்ணில் என்னை நான் கண்டு கொண்டேன்
என் கண்ணில் மகளே நீ கண்டதென்ன...
விளையாடும் காலோ கவிபாடும் நாவோ
செண்டாடும் கொடியோ நின்றாடும் ஒளியோ
அவள் தந்த பாடல் நான் பாடுகின்றேன்
என் பாடல் போலே உன் பாடல் வேண்டாம்.....//
மனைவியை இழந்த ஒரு ஆண் அழுதுக்கொண்டிருக்கும் தன் சிறு மகளை சமாதானப்படுத்தி உறங்கச்செய்ய பாடும் தாலாட்டாக இருக்கலாம். ( படம் பார்த்ததில்லை). தென்றலாய் வீசுகிறது வசீகரிக்கும் PBSஸின் குரல். இழையிழையாய் இதம், மயிலிறகால் வருடும் மாயம்.....
No comments:
Post a Comment