On the merry-go-round

நேற்று 'சப்தபதி' என்ற பழைய பெங்காலி படத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். 'மஹாநாயக்' உத்தம் குமார்- 'மஹாநாயிகா' சுசித்ரா சென் நடிப்பில் 1961ல் வெளிவந்த படம். அற்புதமான கதை, அருமையான நடிப்பு.
இரண்டாம் உலகப்போரின் பிண்ணனியில் ஒரு வங்காள இளைஞனுக்கும் ஒரு ஆங்கிலோ இந்திய பெண்ணினுக்குமிடைய மலரும் காதல், பிரிவு, மீண்டும் சந்திப்பது என்று அழகாய் செல்லும் திரைக்கதை. பல இடங்களில் நம் 'ரத்தத்திலகம்' படத்தை நினைவூட்டியது.
இரண்டு படங்களிலும் கல்லூரி மாணவர்களாக அறிமுகமாகிறார்கள் நாயகனும் நாயகியும். இரண்டிலும் மோதலில் தொடங்கி காதலில் விழுகிறார்கள்.
இரண்டிலும் ஷேக்ஸ்பியரின் 'Othello' நாடகம் இடம்பெறுகிறது. ஆச்சரியம் என்னவென்றால் முழுக்கமுழுக்க ஆங்கிலத்தில் அரங்கேறும் இந்த நாடகத்திற்காக சப்தபதியில் உத்தம் குமாருக்கும் சுசித்ராவுக்கும் டப்பிங் பேசிய அதே உத்பல் தத்தும் ஜெனிஃபர் கெண்டலும் தான் ரத்ததிலகத்தில் சிவாஜிக்கும் சாவித்திரிக்கும் டப்பிங் பேசியிருக்கிறார்கள்!
உத்பல் தத் ( தில்லுமுல்லுவின் ஹிந்தி மூலமான கோல்மாலில் தேங்காய் ஸ்ரீனிவாசன் தமிழில் நடித்த பாத்திரத்தில் கலக்கியவர்) ஒரு மகா கலைஞன். நாற்பதுகளிலும் ஐம்பதுகளிலும் தனது "Little Theatre Group" மூலம் ஷேக்ஸ்பியரின் பல ஆங்கில நாடங்களை அரங்கேற்றியவர்.
ஆங்கில பெண்ணான ஜெனிஃபர் கெண்டல் தன் பெற்றோர் நடத்தி வந்த "Shakespeareana Company" என்ற நாடகக்குழுவோடு உலகமெங்கும் சென்று நடித்துக்கொண்டிருந்தார். கல்கத்தாவில் The Tempest நாடகத்தில் நடிக்க வந்த போது ஹிந்தி நடிகர் சஷி கபூரை சந்தித்து, காதலித்து, மணந்துக்கொண்டார். ஜெனிஃபரும் ஒர் மிகத்திறமையான நடிகை. சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப்பெற்றவர்.
இதோ ரத்தத்திலகத்தில் அந்த 'Othello' நாடகம். உத்பல் தத்தும் ஜெனிஃபரும் எவ்வளவு உணர்ச்சிகரமாக பேசியிருக்கிறார்கள்! சொந்த குரல் இல்லாவிட்டாலும் ஒத்தெல்லோவாகவும் டெஸ்டெமோனாவாகவும் சிவாஜியும் சாவித்திரியும் இந்த ஆங்கில நாடகத்தில் எப்படி நடித்திருக்கிறார்கள் பாருங்கள்! முகபாவங்களும் உடல் மொழியும்....அடடா...அடடா...
இன்னொரு ஆச்சரியம்- சப்தபதியில் ஹேமந்த குமார் இசையில் பாடலாசிரியர் கவுரிபிரசாத் மஜூம்தார் எழுதிய ஒரு ஆங்கில பாடல் இடம்பெற்றிருந்தது. திரையில் சுசித்ரா சென் பாடி நடனமாடுவதாக மயமாக்கப்பட்ட இந்த பாடலை சூசி மில்லர் என்ற ஆங்கில பாடிகியை கல்கத்தாவுக்கு வரவழைத்து பாடவைத்திருந்தார்கள். பாடல் இதோ:
ரத்தத்திலகத்திலும் அதே சூசி மில்லரின் குரலில் அதே பாடல் இடம்பெற்றது!
ஆனால்.... ரத்தத்திலகம் டைட்டிலில் சூசி மில்லரின் பெயர் இடம்பெறவில்லை!
No comments:
Post a Comment