'பொன்னொன்று கண்டேன் பெண் அங்கு இல்லை' பாடல் பதிவானப்பின் அதை ரசித்து கேட்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசன், PBS பாடிய வரிகள் தனக்கு வாய்த்திருக்கலாமே என்று சொன்னாராம். இதை நான் TMSசை அவர் குறைத்து எடைபோட்டதகாக நினைக்கவில்லை... PBS இன் குரல் ஜாலம் அப்படிப்பட்டது.
ஒரு முறை நான் பட்டியலிட்டப்போது சிவாஜி கணேசனுக்கு TMSசை தவிர 23 பாடகர்கள் பாடியிருக்கிறார்கள் என தெரிய வந்தது. ஆனால் நடிகர் திலகமென்றாலே நம் நினைவில் உடனே வருபவர் TMS தானே.... அத்தகைய ஈடில்லா கூட்டணி அது.
சரி, PBSசுக்கு வருவோம். துபாயில் இருந்த காலகட்டத்தில் ஒவ்வொரு முறை விடுமுறைக்காக சென்னை வரும்போதும் அவரை சந்தித்து பேசும் வாய்ப்புகள் எனக்கு அமைந்தது நான் பெற்ற பெறும் பேறு. அவருடன் எனக்கு உண்டான கடைசி சந்திப்பில், 'நடிகர் திலகத்துக்கு நீங்கள் ஏன் ஓரிரு பாடல்கள் தவிர அதிகம் பாடவில்லை?' என்று கேட்டேன்... 'சிவாஜிக்கு TMS தான் பொருத்தமானவர்!' என்று புன்னகைத்தவாரே பதிலளித்தார்.
நானும் விடாமல் 'ஏன், 'கண்டேனே உன்னைக் கண்ணாலே' (நான் சொல்லும் ரகசியம்), 'எங்கும் சொந்தமில்லை' (புனர்ஜென்மம்) போன்ற பாடல்களில் சிவாஜிக்கு உங்கள் குரல் அழகாக பொருந்துவதாக எனக்கு படுகிறதே?' என்று கேட்டேன்.
கண்ணாடிக்கு பின்னால் அவர் கண்கள் ஆச்சரியத்தில் விரிவது தெரிந்தது. சிரித்துக்கொண்டே சொன்னார் 'உங்களுக்கு படலாம்... இத்தனை வருடங்களுக்கு பிறகு அப்பாடல்களை நினைவூட்டியதற்கு நன்றி!.... ராமநாதனுக்கும் சலபதி ராவுக்கும் சிவாஜி சாருக்கு என்னையும் பாட வைத்து பார்ப்பதற்கு மனமிருந்தது. அதற்கு பிறகு அத்தகைய வாய்ப்புகள் அமையவில்லை... '
சற்று நேரம் அவர் சொன்னதை அசை போட்டுக் கொண்டிருந்தேன். பின்பு வேறு பாடல்களைப் பற்றியெல்லாம் பேசிவிட்டு நான் அவரிடம் விடைபெற எழுந்தபோது PBS அவருடைய குறும்பான புன்னகையுடன் சொன்னார் 'சிவாஜி கணேசனுக்கு இன்னுமொரு பாடல் பாடியிருக்கிறேனே... அடுத்த முறை வரும்போது கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்க்கலாம்!'
துபாய் திரும்பியதும் சிவாஜிக்கு PBS பாடிய மற்றுமோர் பாடலை என் இசை சேகரிப்புகளில் தேடினேன். இணையத்தளங்களில் தேடினேன். எங்கும் கிடைக்கவில்லை.
ஒரு வெள்ளிக்கிழமை மாலை சுதாகர் என்ற தெலுங்கு நண்பர் எங்களை அவர் வீட்டிற்கு அழைத்திருந்தார். அவருடைய தாயார் அப்பொழுது இந்தியாவிலிருந்து வந்திருந்தார். இரவு விருந்தின் போது சுதாகரின் தாயார் பக்கத்தில் அமர்ந்திருந்திருந்தேன். அவர் பார்த்துக்கொண்டிருந்த ஜெமினி தொலைக்காட்சியில் பழைய தெலுங்கு பாடல்கள் வந்துக்கொண்டிருந்தன... அப்பொழுது திடீரென்று இந்தப்பாடல் வந்தது... நான் உணவையும் மறந்து, ஆச்சரியத்தில் உறைந்து போனேன்....
PBSசின் கேள்விக்கு நான் சற்றும் எதிர்பாராத விடை கிடைத்து விட்டது. ஆனால் PBS எதிர்ப்பார்த்த விடை இது தானா என்று சரிபார்க்க அடுத்த முறை சென்னை வந்தபோது அந்த மென்குரலோன் இவ்வுலகை விட்டு விடைபெற்றிருந்தார்....
-Saravanan Natarajan
https://www.facebook.com/share/p/16xupwcQ8g/
No comments:
Post a Comment