dhool

dhool
Click on the above image and Join the discussion in our Facebook group

Tuesday, September 1, 2026

Sushila Janaki

இசையரசி எந்நாளும் நீயே 🙏

https://youtu.be/-MIb_Fyxk3Q?si=sRwYmM1A5voEp0CX

P.B. ஸ்ரீனிவாஸ் சாரிடம் ஒரு முறை பேசிக்கொண்டிருந்த போது 'சுசீலாம்மா- ஜானகியம்மா ரெண்டு பேரையோடையும் எல்லா பாஷையிலும் நிறைய பாடியிருக்கீங்க....' என்று முடிப்பதற்குள் PBS சொன்னார்- 'ஒருவர் சரஸ்வதியின் கையிலிருக்கும் வீணை... மற்றொருவர் கிருஷ்ணரின் உதட்டில் இருக்கும் புல்லாங்குழல்...'

ஆஹா... என்ன அழகான, பொருத்தமான metaphors! 

இரண்டு நாட்களுக்கு முன் சுசீலாம்மாவை அவரது வீட்டில் சந்தித்தபோது அவரிடம் PBS இப்படி சொன்னதை நினைவுகூர்ந்தேன். அப்போது அவர் சொன்னார் ' அந்த வீணை நான் தான்... அந்த கிருஷ்ணர் புல்லாங்குழல் ஜானகி- தெய்வீகமாவும் ஒலிக்கும், குறும்பாக சிரிக்கும், காதலாக கொஞ்சும், சோகமாக அழும்... அது ஜானகி... அந்த மாதிரி திறமை.. variety... feelings...வேற யார் குரல்லயும் வராது....'

ஜானகியம்மா காலமான செய்தி அறிந்தவுடன் சுசீலாம்மா உடைந்துப்போய்விட்டாராம். 'போயிட்டாளே போயிட்டாளே...' என்று குமுறியிருக்கிறார். அவர் வெளியிட்ட இரங்கல் பதிவுகளில் ( ஆங்கிலம், தமிழ், தெலுங்கு) ஜானகி  என்ற பெண் மேல் அவருக்கு இருந்த பாசம், ஜானகி என்ற பாடகியின் திறமை மேல் இருந்த வியப்பு....இதெல்லாம் கண்ணீர் துளிகளாய் வெளிப்பட்டன....

'அந்த காலத்தில் மெட்ராஸில் (திரையிசையில்) இரண்டு பெரும் தூண்கள் இருந்தன... அதில் ஒன்று சரிந்துவிட்டது...' என்று ஆரம்பித்தார். ஆம், உண்மை தானே! அந்த காலத்தில் அனைத்து தென்னிந்திய மொழி படப்பாடல்களும் சென்னை ஸ்டூடியோக்களில் தானே பதிவாகின. சுசீலாம்மாவும் ஜானகியம்மாவும் நான்கு மொழிகளிலும் கோலோச்சியவர்கள். என் தெலுங்கு நண்பன் வினெய் சொல்வான்- அந்த காலத்து பாடர்களை பற்றி பேசும் போது அவன் வீட்டு பெரியவர்கள் 'சுசீலா-ஜானகி' என்று சேர்த்தே சொல்வார்களாம். 

'ஜானகிக்கு நிகரே இல்லை... குரலைக்கொண்டு எத்தனை வகையான ஜாலம்!! குரலை எப்படியெல்லாம் மாற்றி பாடுவார்- கதாபாத்திரங்களுக்கு ஏற்றபடி, பாடல் சூழலுக்கேற்ப உணர்ச்சிகளை அற்புதமாய் பிரதிபலிக்கும் திறன்- அவரை போல பாடகி இனிமேல் நமக்கு கிடைக் மாட்டார்...   சரஸ்வதி தேவி தன்னருகிலேயே ஜானகி இருக்க வேண்டுமென்று ஜானகியை அழைத்துக்கொண்டுவிட்டார்... எனதன்புள்ள ஜானகி... நீ என்றென்றும் எங்கள் இதயங்களில் நிலைத்து நிற்பாய்...' என்று தனது அஞ்சலியை முடித்தார் சுசீலாம்மா.  

மேலும் தனது P.சுசீலா டிரஸ்ட் மூலம் விருதுகள் வழங்க தொடங்கியபோது முதல் விருதை ஜானகிக்கு கொடுத்ததை நினைவுகூர்ந்து ' என் வாழ்க்கையில் நான் செய்த நல்ல காரியம் அது!' என்றார்- எப்பேர்ப்பட்ட வார்த்தைகள்!

நடுவில் இன்னொன்றையும் கூறினார்- 'என்னைப்பற்றி ஜானகியிடம் போய் தவறாய் பேசியவர்கள், என்னிடம் வந்து ஜானகியை பற்றி தவறாய் பேசியவர்கள், எழுதியவர்கள்... உங்களுக்கெல்லாம் இப்போது சந்தோஷமா?' என்று வெடித்தார் சுசீலாம்மா.

உண்மைதான். 2001ல் நான் tfmpage போன்ற தளங்களுக்குள் நுழைந்தபோது மிகவும் அதிர்ச்சியளித்தது இந்த விஷயம் தான். சுசீலாம்மா- ஜானகியம்மா ரசிகர்களிடையே அப்படி ஒரு சண்டை! இதில் மிகவும் வேதனை அளித்தது- அவர்கள் அவிழ்த்துவிட்ட பொய்கள், உபயோகித்த கீழ்த்தரமான வார்த்தைகள், நியாயமற்ற ஒப்பீடுகள, ஆதாரமற்ற விமர்சனங்கள்.... நான் சமாதானமாக ஏதாவது எழுதினாலும் என் மேல் பாய்ந்தார்கள்... நான் நினைத்துக்கொண்டதுண்டு... ஜானகியை மட்டம்தட்டி தான் சுசீலாவை உயர்த்த வேண்டுமா... Suseelamma is unquestionably great on her own merit!

இந்த சச்சரவுகள் சுசீலாம்மா- ஜானகியம்மா காதுகளுக்கும் நிச்சயம் எட்டியிருக்கும். வேதனை அடைந்திருப்பார்கள். நிஜமாகவே  இருவருக்குள் ஒரு சின்ன மனக்கசப்பு கூட இருந்ததில்லை. There was an endearing mutual respect and admiration between them. 

'வெண்ணிற ஆடை' (1965) படத்தில் சுசீலாம்மாவுக்கு பல அருமையான பாடல்கள். ஒரே ஒரு பாடலை ('சித்திரமே நில்லடி' ) ஜானகி பாடியிருப்பார். ஆனால் பட டைட்டிலில் பிண்ணனி பாடியவர்கள் பட்டியலில் ஜானகி பெயர் இடம்பெற்றிருக்காது.

இருபது வருடங்களுக்கு பிறகு வந்த 'காக்கி சட்டை' படத்தில் ஜானகிக்கு மூன்று பாடல்கள். சுசீலாவுக்கு ஒன்று. பட டைட்டிலில் ஜானகியின் பெயருக்கு கீழே சுசீலாவின் பெயர் இடம்பெற்றிருந்தது. இதை நான் ஒரு முறை ஜானகியம்மாவிடம் சுட்டி காட்டியபோது அதிர்ச்சியடைந்தார். 'அப்படியா போட்டாங்க! ரொம்ப தப்பு. சுசீலா எனக்கு சீனியர். அவங்க பேரு தான் முதல்ல வந்திருக்கனும்!' என்றார். 

2006. நான் துபாயிலிருத்து விடுமுறைக்கு சென்னைக்கு வந்திருந்தபோது இங்கே 'சாதக பறவைகள்' குழுவினர் சுசீலாம்மா- ஜானகியம்மாவை வைத்து 'Melody Queens' என்ற மேடை நிகழ்ச்சியை நேரு ஸ்டேடியத்தில் நடத்தப்போவதாக நகரம் எங்கும் சுவரொட்டிகளை கண்டேன். நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும், டிக்கெட் கிடைக்குமா என்று யோசித்துக்கொண்டிருந்த போதே முரளி அண்ணாவிடமிருந்து அழைப்பு. எனக்காக டிக்கெட் எடுத்துவைத்திருந்தார்!

ஆஹா... அந்த நிகழ்ச்சி மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. பார்வையாளர்கள் வரிசையில் PBS, SPB, மலேசியா வாசுதேவன் அமர்ந்திருந்தனர். சுசீலாம்மாவும் ஜானகியம்மாவும் ஒருத்தரை ஒருத்தர் புகழ்ந்து பேசியது, ஜானகியம்மா சுசீலாம்மாவின் கன்னத்தில் ஆசையாக முத்தமிட்டது, சுசீலாம்மா ஜானகியம்மாவை வாரி அணைத்துக்கொண்டது... கண்கொள்ளா காட்சிகளாக நினைவில் நிற்கின்றன.

'செந்தூரப்பூவே' ஜானகியம்மாவுக்கு தேசிய விருது வாங்கித்தந்த பாடல். அதன் தெலுங்கு வடிவமான 'சிரிமல்லெப்பூவா' பாட்டையும் ஜானகியே பாடியிருந்தார். அன்று அந்த மேடையில் ஜானகியம்மா தெலுங்கு வடிவத்தையும் சுசீலாம்மா தமிழ் வடிவத்தையும் பாடினார்கள். கடைசியில் அந்த இரு குரல்களும் 'செந்தூரப்பூவே' என்று ஒன்றாக ஒலித்த போது பரவசத்தில் பலர் எழுந்து நின்று கைத்தட்டினோம். 

https://youtu.be/FPgHx5WItgE?si=bbYaRPigt2HJ8g4L

'தேடினேன் வந்தது' பாடலை சுசீலாம்மா பாடி முடித்ததும், ஜானகியம்மா ஓடி வந்து செய்த குறும்பான செயல்:

https://youtu.be/aLwhM34uMkM?si=q1ehsct-LVHgHgYb

'அனுபவம் புதுமை'- உண்மையாகவே புதுமையான அனுபவமாய் அமைந்தது- ஜானகியம்மா பாடுவதை PBS சிரிப்புடன் ரசிக்கிறார்:

https://youtu.be/szKXhBbIC9o?si=rfD3PDshWGWjjdWr

சுசீலாம்மா என்னிடம் ஜானகியம்மாவை பற்றி மேலும் சொன்னது- 'ஜானகி மெட்ராஸுக்கு வந்து சினிமால பாடறதுக்கு முன்னாடியே அவங்கள பத்தி கேள்விபட்டிருக்கேன்... அப்போ நான் சினிமால பாட ஆரம்பிச்சாச்சு. ஜானகி ஆந்திரால அப்பப்போ ஸ்டேஜ்ல பாடிக்கிட்டிருந்தாங்க. அப்படி ஒரு programmeல நான் 'தெனாலி ராமக்கிருஷ்ணா' படத்தில பாடின ஜெயதேவரின் அஷ்டபதி 'சந்தன சர்ச்சித்த' பாடலை ஜானகி பாடியிருக்காங்க. அந்த கச்சேரிக்கு என் அப்பா போயிருக்கிறார். அவர் ஜானகி பாடினத ரொம்ப ரசிச்சு அங்கேயே அவங்கள பாராட்டி பேசியிருக்கார். அப்புறம் இங்க வந்து எங்கிட்டே "ஜானகின்னு ஒரு பொண்ணு.... ரொம்ப நல்லா பாடறா"'ன்னு சொன்னார். 

கொஞ்ச நாள்ல ஜானகியும் மெட்ராஸுக்கு வந்து என்ன மாதிரியே AVMல ஸ்டாஃப் ஆர்ட்டிஸ்டா சேர்ந்தாங்க. அப்போலேந்து நல்லா பழகினோம். 

சிங்காரவேலனே தேவா! அந்த பாட்ட வேற யாராலயும் பாடியிருக்க முடியாது. அவ்வளவு கஷ்டமான ஸ்ருதி... அவங்க எவ்வளவு ஈஸியா பாடிட்டாங்க. அப்பப்பா! 

என் அப்பாக்கூட எங்கிட்ட 'சிங்காரவேலனே தேவா" ரெக்கார்ட் வாங்கி தாம்மா'ன்னு கேட்டார்..."

என்று அந்த காலத்து நினைவுகளில் மூழ்கிய சுசீலாம்மா தொடர்ந்தார்... 'நிறைய பாட்டு ஜானகி தமிழ்ல பாடினா, நான் அத தெலுங்கில பாடினேன்....  அந்த பாட்டெல்லாம் நான் எப்படி பாடினேன்னு தெரியல... ஆனா ஜானகி என்னை பார்க்கும்போது 'ரொம்ப நல்லா பாடியிருக்கீங்க!' ன்னு  பாராட்டுவாங்க.... அவங்களுக்கு ரொம்ப நல்ல மனசு...' என்றார். 

அப்படிப்பட்ட பாடல்கள் சிலவற்றை யோசித்து பார்த்தேன்...

'இந்த மன்றத்தில் ஓடி வரும்' பாடலை தமிழில் ஜானகி பாடினார். தெலுங்கில் சுசீலா பாடினார்.

https://youtu.be/eUQA0xLA7G8?si=GVHIsy9v6SrI6bii

https://youtu.be/1cwHrULI3_4?si=_Nv4m50dqAsmxVog

'இப்படியோர் தாலாட்டு பாடவா' பாடலை தமிழில் ஜானகி பாடினார். தெலுங்கில் சுசீலா. 

https://youtu.be/MlNHnm4L1js?si=02nUzYhzx_pCI_Fz

https://youtu.be/AWPIDPi6ZWc?si=gaEmcxTswjCjwHrz

'ப்ரியா' படம் ஒரே நேரத்தில் தமிழிலும் கன்னடத்திலும் தயாரானது. 'டார்லிங் டார்லிங் டார்லிங்' பாடலை தமிழில் சுசீலாவும் கன்னடத்தில் ஜானகியும் பாடினார்கள். 

https://youtu.be/OdDSdRJXUog?si=kY4xNupIunsehOW1

https://youtu.be/KXkRMzxOzBM?si=CJrT247bv9CkpqAD

60-70 களில் female duets என்றால் பெரும்பாலும் P. சுசீலா- L.R. ஈஸ்வரியை தான் பாட வைப்பார்கள். ஆனாலும் சுசீலா- ஜானகிக்கும் சில நல்ல டூயட் பாடல்கள் அமைந்தன. தெலுங்கில் இன்னும் நிறைய பாடல்கள் சேர்ந்து பாடியிருக்கிறார்கள். சுசீலா- ஜானகி இணைந்து பாடிய பாடல்களை ஒவ்வொன்றாக நினைவுப்படுத்தினேன். மற்றவர்கள் அவர்களுடன் சேர்ந்து பாடிய பாடல்களை தவிர்த்து, இவ்விருவர் மட்டுமே பாடிய பாடல்களில் எனக்கு ஞாபகம் வந்தவை:

1. C.N. பாண்டுரங்கன் இசையில் 'அரசகுமாரா புவனேந்திரனே' ( பூலோக ரம்பை- 1958)

பாடல் லிங்க் கிடைக்கவில்லை.

2. T.R. ராஜகோபாலன் இசையில் 'பணம் காசு படைச்சாலே' (கண் திறந்தது- 1959)

https://youtu.be/qQRLnYcG9-4?si=d8lo3bOd02QZJb_U

(Watch from 20.00 onwards)

3. G. ராமநாதன் இசையில் 'அன்னமே சொர்ணமே' ( தெய்வத்தின் தெய்வம்- 1962)

https://youtu.be/JhkYaDmS3U4?si=MfnAMLR1k9RKKH6p

4. MSV-TKR இசையில் 'என் கதைதான் உன் கதையும்' (பந்தபாசம்- 1962)

https://youtu.be/B435_uYwdYE?si=U89jRHfX1TgrC5OX

5. ஆநிநாராயண ராவ் இசையில் 'மங்கள மேடை' (மங்கையர் உள்ளம் மங்காத செல்வம்- 1962) 

https://youtu.be/Ryk80gBdb4w?si=RWgVZiFaFYtajh-o

6. MSV-TKR இசையில் 'குங்குமப்பொட்டு குலுங்குதடி' ( இது சத்தியம் -1963)

https://youtu.be/iYOQGte70Ok?si=qvaS1mV7BtdLSpjA

7. லக்ஷ்மிகாந்த்- பியாரேலால் இசையில் 'யார் அறிவாரோ ராணி நிலையை' ( மாயமணி -1964)1963ல் வெளிவந்த L-Pயின் முதல் படமான 'பாரஸ்மணி' யின் தமிழ் டப்பிங். ஹிந்தியில் லதாவும் கமல் பாரோட்டும் பாடியிருந்தார்கள்.

https://youtu.be/6kkYYUNCWxM?si=ukze2Eucv5MsLwUy

8. K.V. மகாதேவன் இசையில் 'அழகன் அழகன்' (தொழிலாளி-1964)

https://youtu.be/8ZpqHrkqEcE?si=ET8PudZsQwcH4sE_

9. T.R. பாப்பாவின் இசையில் 'கண்கள் இரண்டில் யாரடி வந்தார்' (காதல் படுத்தும் பாடு- 1966)

https://youtu.be/7OqYE6Ne_4s?si=uNt-wkwyIY2LhLdw

10. S. ராஜேஸ்வரராவ் இசையில் 'இருளிலும் ஒளி தரும்' (பக்த பிரகலாதா- 1967)

https://youtu.be/EfOYLsl2Nb4?si=Ela_73Kw1xi2pzoZ

11. கோதண்டபாணி இசையில் 'பூரமரத்து நிழலுமுண்டு' ( குழந்தை உள்ளம் -1969)

https://youtu.be/R96szoB9AX0?si=-kNfiyOPS2UiZzB3

12. K.V. மகாதேவன் இசையில் 'காலத்தை வென்றவன் நீ' ( அடிமைப்பெண்-1969)

https://youtu.be/Wvgdr8DwaF0?si=oJF10WCeXHBNmfS4

13. K.V. மகாதேவன் இசையில் 'மாத்தூரு ராமக்கா' (குலமா குணமா- 1971)

https://youtu.be/PZYFGNjogcU?si=H_ZPJdab3

14. MSV இசையில் 'பல்லவி என்று மன்னனும் கேட்க'  (சொல்லத்தான் நினைக்கிறேன்- 1973)

https://youtu.be/PZYFGNjogcU?si=H_ZPJdab3NhWVGp4

15. ஷியாம் இசையில் 'வேதனை காட்டில் அலைந்திடும் மான் நான்' (உணர்ச்சிகள்- 1976)

https://youtu.be/o80uU1PuKDY?si=KRvsnEY7yUjZ24r1

(Watch from 1.19.19 onwards)

என் பள்ளிக்கூட நண்பன் எழில்வேந்தனின் தந்தை கவிஞர் வேழவேந்தன் எழுதிய பாடல். அவன் வீட்டு மாடியில் ரெக்கார்ட் ப்ளேயரில் இந்த பாடலை முதல்முறை கேட்டேன். 

16. MSV இசையில் 'நிறைந்து வாழ்க' (பெருமைக்குரியவள்-1977)

https://youtu.be/atI1K-GkDdY?si=_4wPWXBjLz8ERoil

17. இளையராஜா இசையில் 'தேவதைகள் வாழ்த்துவது' (திருக்கல்யாணம்- 1978)

https://youtu.be/wuocGtSAL84?si=NNLi9ZEgSV9HyMYR

18. இளையராஜா இசையில் 'ஆத்தாடி ஆத்தா' (மாரியம்மன் திருவிழா)

https://youtu.be/92zGcoungIo?si=S03HHLJwZ5qUufTw

https://youtu.be/jY1QsKeqbGs?si=4xSQWbKgIwAXkTqR

19. சங்கர்- கணேஷ் இசையில் 'இளம் வயது வந்தால்' (கைப்பிடித்தவள் - 1978)

https://youtu.be/WnnfgtBQ5eo?si=oy3sdm7UisR-9bMH

20. இளையராஜா இசையில் 'ஜில் மாலிஷ் பூட் பாலிஷ்' (பட்டாக்கத்தி பைரவன் - 1979)

https://youtu.be/o0gCq2JVbqM?si=Vvt7p7cGDfvjVcTu

21. இளையராஜா இசையில் 'நெஞ்சுக்குள்ளே சிங்கக்குட்டி' ( பட்டாக்கத்தி பைரவன் - 1979)

https://youtu.be/sjZZwSkg9Rg?si=o329PL_RzpmW3Z6H

22. ஷியாம் இசையில் 'வெண்ணிலா வானில் நீந்தும் பொன்மாலை' ( நான் நன்றி சொல்வேன்- 1979)

https://youtu.be/sdBtAf4Kgjg?si=-ISB7-jwyYh5zohC

23. இளையராஜா இசையில் 'நீர் கொடுக்க பிறந்ததம்மா ஓடை' (பாலநாகம்மா- 1981)

https://youtu.be/0aJwAwP3Sec?si=MVaXDYoufMMT4RzV

24. கங்கை அமரன் இசையில் 'காலம்காலமாய் பெண்தானே' (கற்பூர தீபம்- 1985)

https://youtu.be/FgD3g74SNn0?si=B6Snu79VcG2K-1Of

25. உஷா கண்ணா இசையில் 'கண்களே காதல் செய்தாலே பாவம்' (தர்மம்- 1985) உஷா கண்ணா இசையமைத்த 'zindagi pyar ka geet hai' ஹிந்தி பாடலின் மெட்டு. 

https://youtu.be/zxCXfNjqZ10?si=DSiqrygJN_GlXbP_

ஜானகியம்மா சுசீலாம்மாவை மனதார பாராட்டி அடிக்கடி கேட்டிருக்கிறேன். அதுவும் விஸ்வநாதன்- ராமமூர்த்தி இசையில் சுசீலாம்மா பாடிய பல பாடல்களை சிலாகித்து பேசுவார். 'நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்', 'சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து', 'அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்,' 'என்னை எடுத்து தன்னை கொடுத்து' பாடல்களை, சுசீலாம்மா பாடிய நுணுக்கங்களை ரசித்து ரசித்து விவரிப்பார். நான் நினைத்துக்கொள்வேன்- அதே காலகட்டத்தில் தமிழில் ஜானிகம்மாவுக்கு comparatively குறைந்த அளவிலான பாடல்களே கிடைத்தன... ஆனாலும் அவர் என்றும் பொறாமைக்கோ காழ்ப்புணர்ச்சிக்கோ சற்றும் இடம் அளித்ததில்லை.  மாறாக சுசீலாம்மாவை ஒரு ரசிகையாக வியந்திருக்கிறார். 

நான் சில முறை ஜானகியம்மாவிடம் என் ஆதங்கத்தை தெரிவித்திருக்கிறேன்- 'விஸ்வநாதன்- ராமமூர்த்தி, அதுக்கப்புறம் MSV ம்யூசிக்ல உங்களுக்கு இன்னும் நிறைய பாட்டு கொடுத்திருக்கலாம்...' அதற்கு ஜானகியம்மா சொன்னார் 'ஆமா... சுசிலாக்கு தான் நிறைய கொடுத்தாங்க... ஆனா நீயே சொல்லு... அந்த பாட்டுக்கெல்லாம் சுசீலாவை தவிர வேற யாராவது சிங்கரை யோசிச்சிருக்க கூட முடியுமா?' 

- Saravanan Natarajan 

https://www.facebook.com/saravanan.natarajan.319/posts/pfbid0RPt76JZUPUYJyFpmnHnSPHSwKAdzCqAA67cFS5SgGocDixr3o33EemLG7eQLRMhel