Saravanan Natarajan writes:
The King's Treasuries- 4
நானே நெருப்பல்லவோ....
இந்தத் தொடரில் இன்று நான் தேர்வு செய்திருக்கும் பாடல்.... கண்ணதாசன் , சுசீலா, இளையராஜா என்ற மூன்று உன்னத கலைஞர்களின் கூட்டில் உருவான ஒரு மறந்துபோன பொக்கிஷம். தமிழ்த் திரையிசையின் முடிசூடா ராணியாக திகழ்ந்தவர் சுசீலா. தன் இனிய குரலால் கோடானு கோடி தமிழர்களின் நெஞ்சமெங்கும் நிறைந்தார், நிறைந்திருப்பார். நாளை இந்த வேளை தன் பிறந்தநாளை அவர் கொண்டாடுவார். அந்த இனிமையான கொண்டாட்டத்தை நாம் இன்றே தொடங்குவோம்...
வலுவான கதை, அற்புதமான நடிப்பு, செவிக்கு இதமான இசை - இது எல்லாம் இருந்தும் சில படங்கள் ஜெயிப்பதில்லை. 1978இல் வெளிவந்த 'மாரியம்மன் திருவிழா' என்ற படம் இதற்கு அத்தாட்சி. ஒரு பெரிய பண்ணை வீட்டில் திருமணம் செய்து கொண்டு போகிறாள் ஒரு பெண் (சுஜாதா). அங்கு தன் அன்பாலும் பண்பாலும் எல்லோர் மனதையும் கொள்ளை கொள்கிறாள்.
குறிப்பாக தன் கணவனின் தம்பியிடம் (சிவகுமார்) தாயைப்போல பரிவு காட்டுகிறாள். அந்த இளைஞனும் அவளது அன்புக்கு கட்டுண்டு அவளிடம் பெற்ற மகனைப்போல் உரிமை கொண்டாடுகிறான். இந்த உறவு அந்த வீட்டில் சிலருக்கு எரிச்சலூட்டுகிறது....நாளிடைவில் கேட்போர் பேச்சைக் கேட்டு அவளது கணவனே (டெல்லி கணேஷ்) அவளுக்கும் தன் தம்பிக்கும் உள்ள புனிதமான உறவை சந்தேகப்படுகிறான்...அவள் உடைந்து போகிறாள்...அந்த மூவரின் தவிப்பும், நெஞ்சை நெகிழவைக்கும் இறுதி கட்டங்களும் திரைக்கதையின் மிக அழகான தருணங்கள்...
சிறு வயதில் இந்தப் படத்தை தொலைக்காட்சியில் பார்த்த ஞாபகம் ..என் அபிமான நடிகை சுஜாதாவின் மிகைப்படுத்தாத, கண்ணியமான நடிப்பு என் மனதில் இன்றும் நிற்கிறது. Subtle and heartwarming performances in challenging roles were always her forte! இன்று இப்படத்தின் பிரதி எங்கும் கிடைப்பதில்லை... கோலாலம்பூரில் உள்ள கொலம்பியா ரெகார்டிங் சென்டரிலும் எனது தேடுதல் ஏமாற்றத்தையே அளித்தது.
இந்த படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் சிறு வயதில் கேட்ட உடனே என் மனதிலும் இடம் பிடித்து விட்டது..
அந்தப் பெண் தன் குழந்தையை உறங்க வைக்க ஒரு தாலாட்டு பாடுகிறாள்...அந்த இரவு வேளையில் அவள் பாடலில் எத்தனை அர்த்தங்கள்...தன் நெஞ்சின் குமுறல்களை அந்த தாலாட்டின் வரிகளுடன் இணைத்து தன் பக்க நியாயத்தை எடுத்துரைக்கிறாள்...இது போன்ற கட்டங்களில் கண்ணதாசன் இயக்குனரின் வேலையை எளிதாக்கிவிடுவார்...இந்தப் பாடலிலும் அவரின் வரிகளில் எத்தனை அழகுகள்...தாலாட்டினூடே அந்தப் பெண் தன் புனிதத்தை எவ்வளவு ஆணித்தரமாக பதிவு செய்கிறாள்!
தந்தைக்குத் தான் இந்த முந்தானை...
தந்தை கொடுத்தார் செந்தேனை
தாய் அறிந்தே வரும் பிள்ளையடா...
தாரம் தரம் கெட்டதில்லையடா
இளையராஜாவின் மெட்டில் இந்த வரிகள் எவ்வளவு சுகமாக அமர்கின்றன...பாடல் வரிகளை முன்னிறுத்தி மெல்லிய சோகக் கீற்றுகளை சுமந்து வரும் இடை இசையின் நேர்த்தி பாடலுக்கு எவ்வளவு மெருகு சேர்க்கிறது! சுசீலாவின் குரல் இனிமைகள் இந்தப் பட்டுப்பஞ்சணை மேல் தூவிய அன்னச்சிறகுகள் ...அவர் பாடலில் தான் எத்தனை புரிதல்...வேதனையின் விளிம்பில் ஒரு வியாஸம்...தாலாட்டுப்பாடலுக்கேற்ற கனிவு, காயப்பட்ட நெஞ்சின் குமுறல், பொய் களங்கத்தை எதிர்கொள்ளும் ஒரு பத்தினியின் கோபம்...அத்தனை உணர்ச்சிகளும் அளவிற்கேற்ப வெளிப்படுகின்றன. திரையிலோ சுஜாதா...சுசீலாவுக்கு சற்றும் சளைத்தவர் அல்ல...மடியில் தவழும் குழந்தையை நோக்கும் போது வாஞ்சையை வாரி வழங்கும் விழிகள், தனிமைப்படுத்தப்பட்ட தன் நிலையை எண்ணும் போதோ அதே விழிகளை சூழ்ந்திடும் வாட்டம், விரக்தியான புன்னகையை உதடுகளில் சுமந்து வலம் வரும் அந்தப் பாங்கு...அந்தப் பாத்திரத்தின் பரிதவிப்பை எவ்வளவு நளினமாக, நெஞ்சைத் தொடும் விதமாக உணர்த்துகிறார்...
"நெருப்பினையே அவள் சாட்சி வைத்தாள்" என்று சீதையைப் பற்றி பாடிவிட்டு, "நானே நெருப்பல்லவோ!" என்று முத்தாய்ப்பாக முடிக்கும் போது சுசீலாவின் குரலில் ஒலிக்கும் அந்த கம்பீரம்...ஆஹா....சுஜாதாவின் தீர்க்கமான பார்வையில் மிளிரும் அந்த தன்னம்பிக்கை...மின்னலென வந்து மறையும் அந்த நொடிப்பொழுதில் அங்கே கலை அற்புதமாக வாழ்ந்துகொண்டிருக்கிறது!
பி.கு: 2007இல் விடுமுறையில் சென்னை சென்றிருந்தபோது ஒரு திருமண வரவேற்பில் சுஜாதாவை சந்திக்க நேர்ந்தது. மகன் மற்றும் மகளுடன் வந்திருந்த அவர் அடக்கமாக ஒரு மூலையில் அமர்ந்திருந்தார். திரையில் பார்ப்பதை விட இன்னும் அழகாக இருந்தார். The years had been kind to her….She had aged gracefully. மிகுந்த சங்கோஜத்துடன் அவரிடம் சென்று 'நான் உங்கள் தீவிர ரசிகன்' என்று என்னை அறிமுகம் செய்து கொண்டேன். ஒரு அன்பான புன்சிரிப்போடு என்னைத் தன்னருகில் அமரச் செய்தார், தன் மகனையும் மகளையும் அறிமுகம் செய்து வைத்தார். அவரின் படங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது நான் இந்த 'மாரியம்மன் திருவிழா' படத்தில் அவரின் நடிப்பை புகழ்ந்தேன். அந்த அழகான கண்கள் ஆச்சிரியத்தில் விரிந்தன. பின்பு கலகலவென நகைத்துவிட்டு சுஜாதா கூறினார்- "மாரியம்மன் திருவிழா படத்தை நீங்களும் நானும் தான் ஞாபகம் வைத்திருக்கிறோம்!"
இன்று சுஜாதாவும் இல்லை...
https://www.youtube.com/watch?v=q4oeYOBffNM
Discussion at:
https://www.facebook.com/groups/1018417744856618/permalink/1384248878273501/
No comments:
Post a Comment