dhool

dhool
Click on the above image and Join the discussion in our Facebook group

Sunday, November 27, 2016

YUGANDHAR The Kings's Treasuries - 6

Tiruchendurai Ramamurthy Sankar writes:

The Kings's Treasuries - 6
மீகோசமே நேனொச்சானு ( உங்களுக்காகவே நான் வந்தேன்! )
1979ல் தமிழில் இளையராஜா ஒரு முழுமையான இசையமைப்பாளராக நிலை நின்றாகிவிட்டது. எம்.எஸ்.விக்கு இருந்த ஒரே போட்டியாளர் அவர்தான். சங்கர்-கணேஷ் அதிக படங்களுக்கு வேலை செய்துகொண்டிருந்தாலும் , நண்பர் சரவணன் வார்த்தையில் சொல்வதென்றால் சாந்தி, ஆனந்த், அபிராமி தியேட்டர்களில் ராஜா, எம்.எஸ்.வி படங்கள் ஓடினால், பாரகன், ஓடியன், சித்ரா தியேட்டரில் சங்கர்-கணேஷ் படங்கள்.

அதே நேரத்தில் ராஜாவின் பிரபலமான படங்கள் ( இளமை ஊஞ்சலாடுகிறது, அன்னை ஓர் ஆலயம் போன்றவை) மொழிமாற்றப் படமாகி ஆந்திராவில் பிரபலமடைந்து கொண்டிருந்தன. துரதிர்ஷடவசமாக 16 வயதினிலே ம்இசையமைப்பாளர் சக்கரவர்த்தி பெயரில் வந்தது . ( கிழக்கே போகும் ரயில் / தூர்ப்பு வெள்ளின ரயிலு படத்திற்கு இசை SPB) ராஜா முதன் முதலில் இசையமைத்த முதல் நேரடி தெலுங்குப்படம் சந்திரமோகனின் (1979) பஞ்ச பூதாலு. ஆனால் அதே 1979ல் கே.எஸ்.ஆர்.தாஸின் இயக்கத்தில் NT ராமாராவ் நடித்து வந்த யுகந்தர் ( ஹிந்தி : Don தமிழ் : பில்லா (1980 ஜனவரி 26) ) முதல் ஸ்டார் படம். அந்தப்படத்தில் போட்ட "நா பருவம் நீ கோசம்" ( ஜெயமாலினி டான்ஸ்) தமிழில் ராம் லக்‌ஷ்மணில் "வாலிபமே வா வா "ஆகியது. கமர்ஷியல் மற்றும் NTR அழுத்தத்தினால் கல்யாண்ஜி-ஆனந்த்ஜியின் ஹிந்தி டியூனான பான் பனாரஸ் வாலா பாடலை அப்படியே தெலுங்கியிருப்பார். அந்தப் பாட்டை காப்பிஅடிக்கும் அளவிற்கு ராஜா போன்ற திறமையாளருக்கு வேறு காரணங்கள் இருந்திருக்க முடியாது.

பின்னாளில் வெங்கடேஷ் ( ப்ரேமா,கூலி நம்பர் 1) சிரஞ்சீவி ( ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி) , மணிரத்னம் ( கீதாஞ்சலி) , கே.விஸ்வநாத் ( பல படங்கள்) படங்களுக்கு அவர் இசையமைத்திருந்தாலும் தெலுங்குப் படங்களின் அப்போதைய அடையாளமான NTR க்கு அவர் இசையமைத்த ஒரே படம் யுகந்தர்.

"நா பேரே யுகந்தர்" பாடல் தமிழில் மை நேம் இஸ் பில்லாவிற்கான பாட்டு. இந்தப் பாடல் NTR க்கு ஒரு புது இமேஜ் கொடுத்தது என்று சொன்னால் மிகையாகாது. சக்கரவர்த்தியின் டிங் சக் டிங் சக் இசையிலிருந்து அவருக்கு விடுதலை கொடுத்த முதல் படம், முதல் sophisticated பாடல். ( இதைப் புரிந்துகொள்ள டிரைவர் ராமுடு, வேட்டகாடு, ஆட்டகாடு போன்ற 1979 படங்களைப் பார்த்தல் நலம்! ) இன்றைய பாஷையில் சொன்னால் NTR செம குத்து குத்தியிருப்பார். .......மறைக்க போடவேண்டிய பாண்ட்டை, நெஞ்சை மறைக்கப் போட்டுக் கொண்டு சால பாக கொட்டேசிய ஸ்டெப்புலு...... 40 இஞ்ச் பெல்பாட்டம், வெள்ளை பெல்ட்லு மற்றும் ஷூவுலு! நடுவில் எல்விஸ் ஸ்டைலுடன்! எனக்கு இன்றும் உற்சாகமளிக்கும் பாடல்களில் ஒன்று. என்னை 80களின் ஏலூருவிற்கு அழைத்துச் செல்லும் பாடல் ( என் தந்தை ஏலூருவின் அருகில் உள்ள குக்கிராமத்தில் கிளையைத் திறந்த மானேஜராக ஒரு தேசிய வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்தார். நாங்கள் விடுமுறைக்கு போய் முழு நேரம் சினிமா பார்ப்போம்)

ஹீரோவின் சிக்னேச்சராக வரும் இந்த டியூன் மற்றும் அரேஞ்மெண்ட்டில் ராஜா அபார நம்பிக்கை வைத்திருக்கவேண்டும். இந்தப் படத்திற்குப் பிறகும் ( பேய் ஹிட்!) அவருக்கு அங்கீகாரம் கிடைக்காததும் அவரை பாதித்திருக்கவேண்டும். இந்தப் பாடலின் தாக்கத்தை கீழ்க்காணும் அவரது மற்ற பாடல்களில் தாராளமாகக் காணலாம், முக்கியமாக ரிதம், brass section.

போய்யா போய்யா ( தர்மயுத்தம்)
ஆகாயம் மேலே ( நான் வாழவைப்பேன்)
வருது வருது ( தூங்காதே தம்பி தூங்காதே)
நூறு வருஷம் ( பணக்காரன்)
ஆசை நூறு வகை ( அடுத்த வாரிசு)
வச்சுக்கவா ஒன்ன மட்டும் ( நல்லவனுக்கு நல்லவன்)
கஸ்தூரி மான் ( சங்கர்லால் / கங்கை அமரன்)
வால்துகள்:
பில்லா 2007ல் அஜித் நடித்துத் தமிழில் வந்தபோது எம்.எஸ்.வியின் மை நேம் இஸ் பில்லா டியூனே பயன்படுத்தப்பட்டது. தெலுங்கில் பிரபாஸ் அதே வேடத்தைச் செய்தபோது யுகந்தர் பாடல்கள் பயன்படுத்தப்படவில்லை. படமும் யுகந்தராக வராமல் பில்லாவாகவே வந்தது. யுவன் யுகந்தர் படத்தின் "தாசேதா தாகேதா " பாடலை 2007 பில்லாவில் டூயட்டாகப் பயன்படுத்தியிருக்கலாம்.

ஆரம்பகால ராஜா! ஆனந்தங்கா சூடண்டி!

No comments:

Post a Comment