பூனையும் புறாவும் 😃
'மியாவ் மியாவ் பூனைக்குட்டி' பாடலை கேட்கும் போதும் பார்க்கும் போதும் எனக்கு எப்பவும் எழும் கேள்வி " இது சவுகார் ஜானகி பாடுவதாக அமைந்த பாடல் தானே... பிறகு இதை M.S. ராஜேஸ்வரி ஏன் மழலைக்குரலில் பாடுகிறார்?"
https://youtu.be/B6eIOCBwizw?si=Aox4gTkRyuU7F_hY
M.S. ராஜேஸ்வரி குழந்தை குரலில் பல பாடல்கள் பாடியிருக்கிறார்- ஆனால் அப்பாடல்களில் திரையில் தோன்றி நடிப்பவர்கள் சிறுவர்/சிறுமிகளாக இருப்பார்கள். உதாரணம்- குட்டி பத்மினிக்காக அவர் பாடிய "கோழி ஒரு கூட்டிலே'.
ஆனால் வயது வந்த நடிகைகளுக்கு பாடும் போது தன் இயல்பான குரலில் அழகாக பாடியக்கூடியவயர் தானே ராஜேஸ்வரி! பண்டரிபாய்க்காக அவர் பாடிய 'புது பெண்ணின் மனதை தொட்டுப்போனவரே', குமாரி கமலாவுக்காக அவர் பாடிய 'ஓ ரசிக்கும் சீமானே', வைஜெயந்திமாலாவுக்காக அவர் பாடிய 'சொன்ன சொல்லை மறந்திடலாமோ' போன்ற பாடல்களை எவ்வளவு நன்றாக பாடியிருந்தார்! ஏன் பல வருடங்கள் கழித்து 'நாயகன்' படத்தில் 'நான் சிரித்தால் தீபாவளி' பாடலை எவ்வளவு அருமையாய் பாடினார்!
இந்த 'மியாவ் மியாவ்' பாடல் சவுகார் ஜானகி மேல் படமாக போகிறது என்று ராஜேஸ்வரிக்கு யாரும் சொல்லவில்லையா? யாரும் சொல்லவில்லை என்றாலும் 'அத்தான் மனது வெல்லக்கட்டி' போன்ற வரிகளை பார்த்தவுடனாவது இது ஒரு குழந்தை பாடல் அல்ல என்று தோன்றியிருக்குமே! அஞ்சலி தேவிக்காக ராஜேஸ்வரி பாடிய 'சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா', சவுகார் ஜானகிக்காக பாடிய 'படித்தினால் அறிவு பெற்றோர்' பாடல்களிலும் எனக்கு இதே குறை தோன்றும். எல்லாம் அழகான, பிரபலம் அடைந்த பாடல்கள் தான். ஆனால் ஏன் தனது இயல்பான குரலில் பாடாமல் மழலை குரலில் பாடினார் ராஜேஸ்வரி என்று இன்றுவரைக்கும் புரியாத புதிராக இருக்கிறது. மூன்று பாடல்களுக்கும் இசையைத்த K.V. மகாதேவனோ அவரது உதவியாளர் புகழேந்தியோ இதை எப்படி அனுமதித்தார்கள்! சரி, அந்தகாலத்து ரசிகர்களுக்கு இந்த சந்தேகம் வரவில்லையா?
'மியாவ் மியாவ்' பாடல் இடம்பெற்ற 'குமுதம்' 1961ல் வெளிவந்தது. இதே கதையை பீம்சிங் இயக்கத்தில் AVM நிறுவனம் ஹிந்தியில் 'Pooja Ke Phool' என்ற பெயரில் 1964ல் வெளியிட்டது. இதில் அந்த பார்வையற்ற பெண் வேடத்தில் நடித்தவர் நிம்மி. K.V. மகாதேவன் அமைத்த அதே மெட்டை மதன் மோகன் இரவல் வாங்கி 'Meow Meow Meri Sakhi' என்ற பாடலை வடிவமைத்தார். பாடலை இனிமையாக லதா மங்கேஷ்கர் பாடினார்.
https://youtu.be/9nKnhNvEFns?si=hcVrx8xoqzz7TZPi
இதற்கிடையில் 1962ல் இதே கதை 'மஞ்சி மனசுலு' என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு 1962ல் வெளிவந்தது. அந்த கதாபாத்திரத்தில் தெலுங்கிலும் சவுகார் ஜானகியே நடித்தார். K.V. மகாதேவன் இசையில் அதே மெட்டு. ஒரே மாற்றம்- பூனை புறாவாக மாறியது!
பாடலை பாடியவர்- S.ஜானகி!
https://youtu.be/9EkMup6bn1I?si=o6Zf3ytlXFkP3niW
- Saravanan Natarajan
No comments:
Post a Comment