dhool

dhool
Click on the above image and Join the discussion in our Facebook group

Friday, October 16, 2026

Idhayam - Pazhani

 🎵இதயம் இருக்கின்றதே... 

தம்பி... இதயம் இருக்கின்றதே....🎵


உயிருக்கு உயிராய் பழகிய அண்ணன்- தம்பிகளிடையே விரிசல் ஏற்படுகிறது...அண்ணன் எத்தகைய இடஞ்சல்கள் வந்தபோதும் கிராமத்திலேயே இருந்து விவசாயத்தை தொடர்ந்து செய்ய வேண்டுமென ஆசை படுகிறான்... அவன் சொல்படியே நடக்கும் அருமை தம்பிகள் சிரமங்கள் பல வந்தபோதும்  சகித்து கொண்டு சந்தோஷமாக ஒற்றுமையாக இருக்கிறார்கள். ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு மேலும் கஷ்டப்பட இஷ்டமில்லாமல் அண்ணனின் வார்த்தையை மீறி அவனை விட்டு, கிராமத்தை விட்டு பிழைப்புத் தேடி பட்டணம் செல்கிறார்கள்... அங்கு வேலைக்காக அலைகிறார்கள்...


ஊரில் அண்ணன் பிரிந்த சென்ற தம்பிகளை மறந்து தன் வேலையில் கவனம் செலுத்த முயல்கிறான்... தன் வார்த்தையை மீறி சென்றவர்களை பற்றி தனக்கேன் அக்கறை என்று அவர்களை வெறுக்க முயல்கிறான்... ஆனால் அவன் எண்ணமெல்லாம் அவர்கள் எப்படி இருக்கிறார்களோ, எந்த கஷ்டத்துக்கும் ஆளாகாமல் நலமாக இருக்கவேண்டுமே என்று தம்பிகளை சுற்றியே வருகிறது...


'பழனி' படத்தில் வரும் இந்த கட்டதிற்காகத்தான் கவியரசர் இந்த பாடலை எழுதினார்...


https://youtu.be/TgYtzTPGKHs?feature=shared


ஆனால் ஒரு படக்கதையின் கட்டதிற்காக எழுதிய பாடல் வாழ்க்கையின் வட்டதிற்குள்ளும் எப்படி அழகாக பொருந்துகிறது...இப்படித்தானே நாம் எல்லோரும்... விவாகரத்து ஆனப்பிறகும் மாஜி கணவன் ராமராஜன் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது முகம் சுளிக்காமல் அவரை இரவு- பகலாய் கவனித்துக்கொண்ட நளினியை நாம் கண்டு வியந்திருக்கிறோம்.... வருடக்கணக்காக தங்களை காண வராத பிள்ளையின் பிறந்த நாளில் ஒவ்வொரு ஆண்டும் கோயிலுக்கு சென்று அவன் பெயரில் அர்ச்சனை செய்யும் பெற்றோரை பார்த்திருக்கிறேன்... திருமணமான சில வருடங்களிலேயே இறந்துவிட்ட தன் ஆசை மனைவியின் நினைவிலேயே இன்னும் தனியாக வாழ்ந்துக்கொண்டிருக்கும் ஒரு நண்பனை நான் அறிவேன்... தினமும் குடித்துவிட்டு ஊரில் வம்பிழுத்து குடும்பத்துக்கு தலைகுனிவு ஏற்படுத்தும் உதவாக்கரை தகப்பனின் செலவுக்காக மாதாமாதம் தவறாமல் பணம் அனுப்பும் மகனையும் பார்த்திருக்கிறேன்...

ஏன்...ஏதோ கருத்து வேறுபாட்டினால் பிரிந்த நண்பர்கள் கூட அவர்கள் ஒன்றாய் இருந்த நாட்களை மறக்க முடிகிறதா... ... முற்றிப்போன புற்றுநோயின் வலி தாங்கமுடியாமல் துடிக்கும் கணவன் (அவன் இறந்தபிறகு தான் தனிமையில் வாழவேண்டும் என்பதை அறிந்தும்) மேலும் கஷ்டப்படாமல் விரைவில் அமைதியாக இறக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார் ஒரு மூதாட்டி, இதயம் இல்லாததால் அல்ல...


ஒரு முக்கியமான exam result வந்திருந்த நாள் நான் வழக்கம் போல் அரவிந்தை அழைத்து வர சென்றிருந்த போது பள்ளியின் வாசலில் வாடிய முகத்துடன் நின்றிருந்தான்... மார்க் குறைந்திருக்ககூடுமென்று அவனுக்கு ஆறுதல் சொல்ல அவனை நெருங்கிய போது பக்கத்தில் நின்றிருந்த அவனது நண்பன் ஒருவன் மலர்ந்த முகத்துடன் ' Uncle, Arvind got the highest mark in the class, I am so happy!' என்று கூக்குரலிட்டான். அவனை தட்டிக்கொடுத்து விட்டு நான் சந்தோஷமாக அரவிந்தோடு காரை நோக்கி நடக்ககையில் அரவிந்த் அதே நண்பனை குறிப்பிட்டு ' Appa, he has got very less marks.... how can I be happy?' என்றான் கம்மிய குரலில்....


இதயம் இருக்கின்றதே... இந்த பாழாய்ப்போன இதயம் இருக்கின்றனதே....❤️‍🩹


#கவியரசர் நினைவுநாள்


#songpostsfromme 


- Saravanan Natarajan

https://www.facebook.com/share/p/1HXMvUcA4A

No comments:

Post a Comment