dhool

dhool
Click on the above image and Join the discussion in our Facebook group

Wednesday, October 14, 2026

Neela vanna kanna vaada - Ravu Balasaraswathy

 'தெலுங்கு ரசிகர்கள் சிலர் எப்பவாவது வருவதுண்டு, ஆனால் இத்தனை ஆண்டுகளில் அம்மாவை பார்க்க வந்த ஒரே தமிழ் ரசிகர் நீங்களாகத்தான் இருக்கும்...' என்றார் அவர் மகன் (அவருக்கே 75 வயாதிறதாம்) மகிழ்ச்சியாக....


🎵'நீல வண்ண கண்ணா வாடா...

நீயொரு முத்தம் தாடா...' 🎵


எத்தனை தசாப்தங்கள் கடந்தாலும் 1955யில் வந்த இந்த தாலாட்டு பாடல் தனது வசீகரத்தை இழக்காமல் இன்று புதிதாய் பூத்த மலர் போல் ஜொலிக்கிறது. எத்தனை தலைமுறை  தாய்மார்கள் இந்த பாடலை பாடியவாறே தங்கள் குழந்தையை கொஞ்சி மகிழ்ந்திருப்பார்கள்! பூந்தென்றலாய் நம் செவிகளில் புகுந்து மயிலிறகாய் நம் இதயத்தை வருடிக்கொடுக்கும் அந்த மிருதுவான குரலுக்கு சொந்தக்காரர்- தென்னக சினிமாவின் பழம்பெரும் பாடகி (1943ல் பிண்ணனி பாடத்தொடங்கினார்) ராவு பாலசரஸ்வதி தேவி.


94 வயதாகும் அவர் தன் மகனுடன் ஐதராபாத்தில் வசிக்கிறார் என்று தெரிந்ததிலிருந்து அந்த கானக்குயிலை ஒருமுறையேனும் சந்திக்க முடியாதா... தமிழ் சினிமாவில் அவர் பாடிய அருமையான பாடல்கள்... அந்த பொக்கிஷங்களுக்காக  அவரின் கரங்களை பற்றி நன்றிக்கூற முடியாதா என்று ஏங்கியதுண்டு...


அந்த கனவை நனவாக்கியவர் dhool குழுமத்தில் அறிமுகமாகி என்னிடம் அன்பு பாராட்டும் திருமதி லக்ஷ்மிப்ரியா Lakshmi Priya Pakanati . பாலசரஸ்வதி அவர்களின் குடும்பதிற்கு மிக நெருக்கமானவர். கடந்த ஃபிப்ரவரியில் வாணிம்மாவின் அகால மரணத்திற்கு பிறகு லக்ஷ்மிப்ரியா என்னை ஓர் மாலை அலைபேசியில் அழைத்து சொன்னார், 'சரவணன், நீ அடிக்கடி ஐதராபாத் வருகிறாயே... பாலசரஸ்வதியம்மா இங்கு தான் இருக்கிறார்... 90 வயதுக்கு மேல் ஆகிறது... நினைவு மங்கலாக தான் இருக்கிறது, உடல் நலமும் ஒரு நாள் போல் ஒரு நாள் இல்லை... அவரை பற்றியும் அவரின் பாடல்கள் பற்றியும் நீ dhoolல்  எழுதியது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது.... அவரை விரைவில் நீ சந்திக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்....' இதைக் கேட்டு உணர்ச்சிப்பெருக்கில் வார்த்தைகள் வராமல் குமுறினேன்... என்ன ஒரு அக்கறை, பாசம்!


அவர் முயற்சித்தும் கடந்து ஓ‌ரிரு முறை நான் ஐதராபாத்தில் இருந்த போது தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த சந்திப்பு நிகழவில்லை. இந்த முறை லக்ஷ்மிப்ரியாவின் விடாமுற்சி பலன் அளித்தது. 'பாலசரஸ்வதி மிகவும் weak ஆக இருக்கிறாராம்... ஆனாலும் நாம் அவரை சந்திக்கலாம்...'  என்றுக்கூறி அவரே தன் காரில் என்னை கூட்டிச்சென்றார். லக்ஷ்மிப்ரியா இருப்பது ஒரு பக்கம், நான் இருப்பது வேறு பக்கம், பாலசரஸ்வதி வசிப்பது இன்னொரு மூலையில்.... போக்குவரத்து நெரிசலில் அங்கு சென்றடைய ஒன்றரை மணிநேரம் ஆயிற்று.


எளிமையான அடுக்குமாடி குடியிருப்பு. மூன்றாவது தளத்தில் அவர்களின் வீடு. வாசலில் பாலசரஸ்வதியின் மகனும் மருமகளும் எங்களை அன்புடன் வரவேற்றார்கள். வரவேற்பறையில் சாய்வாக அமர்ந்திருந்த பாலசரஸ்வதியம்மாவை கண்டதும் உணர்ச்சிவசப்பட்டு என் கண்கள் குளமாகின... என்னை அம்மாவின் பக்கத்தில் அமரச்செய்தார் அவரின் மகனார்.


என்னை பார்த்து வாஞ்சையுடன் புன்னகைத்தார் பாலசரஸாவதியம்மா. 'நான் மெட்ராஸிலிருந்து வந்திருக்கிறேன், என் பேரு சரவணன்... உங்க பாட்டெல்லாம் ரொம்ப பிடிக்கும் அம்மா' என்றதும் ஆச்சரியமாக என்னை உற்று நோக்கினார்... என் கைகளை தன் கைகளில் கோர்த்துக்கொண்டார்... சரளமான தமிழில் 'என் பாட்டை கேட்டிருக்கியா ராஜா?' என்று ஆர்வமாய் வினவினார். 


உடனே அவர் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த 'மல்லிகைப்பூ ஜாதி ரோஜா' பாடலின் சில வரிகளை பாடினேன்... என் கையை இன்னும் இறுக்க பற்றி, தலையை ஆட்டி ரசித்து கேட்டவர், 'அம்மா வாங்குவீர்...ஐயா வாங்குவீர்' என்ற வரிகளில் என்னுடன் உற்சாகமாக இணைந்து பாடினார்....'அதனு பாக பாடதாடு, காதா?' என்று தன் மகனிடம் சந்தோஷமாக சொன்னார்.


https://youtu.be/Q7UH0rJu-fQ


எனக்கு நினைவில் வந்த அவரின் பாடல்களை ஒவ்வொன்றாக என் அலைபேசியில் ஒலிக்கச்செய்தேன்.... மகிழ்ச்சியோடு கேட்டு ரசித்தார்... சில வரிகளை கூடவே பாடினார்... அற்புதமான சங்கதிகள் சன்னமாக வந்து விழுந்தன.... "செல்வமே என் ஜீவனே" என்று "சிங்காரப்புன்னகை கண்ணாரக் கண்டாலே" பாடலின் இடையில் பாலசரஸ்வதி நூழையும் அந்த தருணத்தை நான் சிலாகித்ததை சந்தோஷமாக ரசித்தார். 


https://youtu.be/W5r9SqwwkAU?si=9bybonkXKVNwpLhF


https://youtu.be/dlSO2VJvlJA?si=zA8Ni2exac4vvzd0


https://youtu.be/ki5lXLj1WrQ?si=1Q5x_7FMuticsUpz


https://youtu.be/M3M399Ar6f0?si=soQUqQsj8T5hfObY


https://youtu.be/95qkgTiiYX4


https://youtu.be/fd_brv2BZgM


https://youtu.be/BBvC45aQ8T8?si=N1NInUQQDFz80XU5


https://youtu.be/BplqS8IegYc?si=KNZ7o623uP3SuxRi


https://youtu.be/PjKdKsB3DR8?si=idvlca9ShcLZ6zl5


திரைப்பாடல் இல்லாமல் தனிப்பாடலாய் இவர் பாடி இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்ட இந்த பக்தி பாடலை ஒலிக்கச்செய்த போது பரவசத்தோடு கேட்டு மகிழ்ந்தார்.


https://youtu.be/yMvbg0wL5Wo?si=tOX8UwJdHfGxhTvX


சில சமயங்களில் நகைச்சுவையாக எதையோ கூறிவிட்டு குறும்பு பொங்க சிரித்தார்.. சில சமயங்களில் ஏதோ பழைய நினைவுகளில் மூழ்கி, அவற்றை சொல்ல முடியாமல் தவித்தார், விம்மி அழுதார்.... 


தன் சிறு வயது நினைவுகள், HMVக்காக பாடியது,  படங்களில் நடித்தது, அற்புதமான பாடல்களை சுப்புராமன், G. ராமநாதன், தட்சினாமூர்த்தி, KVM, விஸ்வநாதன்- ராமமூர்த்தி போன்ற மேதைகளின் இசையில் சினிமாவில் பாடியது, கோலாங்கா மகாராஜாவை மணந்து மகாராணியாக மாளிகைகளில் வாழ்ந்தது, கயவர்களின் சூழ்ச்சியால் பலக்கோடி சொத்துக்களை இழந்து கஷ்டப்பட்டது... எதனை நினைத்தாரோ....


ஆனால் இப்பொழுது தன் மகன் மற்றும் மருமகளின் அரவணைப்பில் இளைப்பாருகிறார்.... நாங்கள் பாடியதும் பேசியதும் பெருமிதம் பொங்க பார்த்து கொண்டிருந்தார் அவரின் மகனார்.... அவர் மனைவி தட்டு நிறைய ஜிலேபி மற்றும் காரா சேவுடனும் தேநீருடனும் எங்களை அனுசரணையோடு கவனித்துக்கொண்டார்... நான் பாடல்களில் மெய்மறந்திருந்த போது பாலசரஸ்வதியம்மாவே எனக்கு ஜிலேபியை எடுத்துக்கொடுத்தார்...


மிகவும் பலவீனமாக தென்பட்டார் பாலசரஸ்வதி. ஞாபக சக்தி 10% தான் இருக்கிறதாம். யாரையும் பார்க்க அனுமதிக்காதபோதும் லக்ஷ்மிப்ரியா என்னைப்பற்றி எடுத்துக்கூறி எப்படியோ அனுமதி வாங்கிவிட்டார். என்ன தவம் செய்தேனோ🙏


அவர்கள் உண்டு ஓய்வெடுக்கும் நேரம் நெருங்க நாங்கள் விடைபெற எழுந்தோம்... பாலசரஸ்வதியம்மா பாடிய தெலுங்கு பாடல்கள் CD ஒன்றை அவர் மகனார் எனக்கு அன்புடன் பரிசளித்தார்..


பாலசரஸ்வதியம்மாவிடம் 'போய் வருகிறேன்' என்றேன்... கையைப்பிடித்து மீண்டும் தன்னருகில் அமரச்செய்தார்... உச்சி முகுர்ந்து முத்தமிட்டார்....

'கண்ணால் உன்னை கண்டால் போதும்...கவலை எல்லாம் பறந்து போகும்...நீல வண்ண கண்ணா வாடா... நீயோரு முத்தம் தாடா'  என்று சன்னமாக பாடி அணைத்துக்கொண்டார். எல்லோர் கண்களிலும் தாரைதாரையாக நீர்...


'நாளைக்கும் வருவியா?' என்றார் குழந்தையாக.... 'சீக்கிரம் வருகிறேன்' என்றேன் கம்மிய குரலில். லிஃப்ட் வரைக்கும் வந்த அவர் மகன் எனக்கு ஆறுதலாக தோளைத்தட்டி கூறினார் 'Don’t worry.... most probably by tomorrow she would have forgotten that you visited her.... she remembers very little now...and even that little is about the old times....'


உண்மை தான்.... சில சமயங்களில் மறதி தான் நிம்மதி. பாலசரஸ்வதியம்மாவின் நினைவில் நான் நிற்காமல் போனால் பரவாயில்லை. ஆனால் 'வானம்பாடி கானம் கேட்டு.. வசந்ககால தென்றல் காற்றில்.. தேன் மலர்கள் சிரித்த' அந்த ஒரு மணி நேரத்தின் ஒவ்வொரு விலைமதிப்பிலா நொடியையும் வாழ்நாள் வரை என் இதயத்தின் பீடத்தில் பத்திரமாக பூட்டி வைப்பேன்🙏


https://youtu.be/fDTdmarWU3g


- Saravanan Natarajan


https://www.facebook.com/share/v/14tKbMyqndS/

No comments:

Post a Comment