கேதாரம்!
'ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண எனு மனவே...' நேற்று காலை கேசவபெருமாள் கோயில் பிரகாரத்தை சுற்றி வருகையில் இந்த பாடல் ஒலித்தது. 'யாகம், தவம், விரதம் போன்ற கடினமான வழிப்பாட்டு முறைகளை விட சிறந்தது நாராயணனின் பெயரை உச்சரிப்பது' என்ற புரந்தரதாசரின் பரவசமான வரிகளை MLVயின் ( அதுவும் அவரது பிறந்தநாளில்) மதுரமான குரலில் கேட்டபோது அப்படியே மெய்மறந்து ஆண்டாள் சந்நிதியின் முன் இருக்கும் மண்டபத்தில் சற்று நேரம் அமர்ந்திருந்தேன்.
கேதாரம்! அமர்க்களமான ராகம். மங்களகரமான ராகம். வீடு திரும்பும்போது பாம்பே ஜெயஸ்ரீ குரலில் 'ஆனந்த நடன பிரகாசம்' கேட்டுக்கொண்டு வந்தேன். L. வைத்தியநாதன் இசையமைத்த 'பஞ்சபூதம்' தொகுப்பிலிருந்து முத்துசாமி தீக்ஷிதரின் இந்த கேதாரம்... ஜெயஸ்ரீயின் கணீர் குரலில் நிதானமாக வந்து விழும் சங்கதிகளுடன் ஒரு சலசலக்கும் நதிபோன்ற நகர்ந்து செல்லும் கேதாரம். ஈஸ்வரனின் சிறப்புகளை அழகாக பட்டியலிடும் பாடலில் 'கேதாரடி க்ஷேத்ராதாரம்' வரியில் ராக முத்திரை எவ்வளவு சூட்சுமமாக வெளிபடுகிறது!
பிறகென்ன... நாள்முழுதும் கேதாரத்தையே வாய் முணுமுணுத்துக்கொண்டிருந்தது. MDR தனது ஆழமான bass குரலில் ரசித்து ரசித்து பாடிய 'பஜனா சேயவே ஓ மனசா ப்ரணதார்த்தி ஹருணி' இழையிழையாய் மனதை பிண்ணிப்போட்டது. நெடுநூரி கிருஷ்ணமூர்த்த குரலில் 'ராமா நீபை தனக்கு' தன்னை எப்படி மறக்கலாம் என்று முறையிட்டது.
மதியம் ஒரு வேலையாக திருவான்மியூர் சென்றுவிட்டு திரும்புபோது மாலையாகிவிட்டிருந்தது. அடையாறு பாலத்திலிருந்து பார்த்தால் அஸ்தமிக்கும் சூரியன் தனது நிறங்களை வானமெங்கும் பரவவிட்டிருந்தான். அந்த ஆரஞ்சு நிறத்தை வானத்திலிருந்து அடையாறும் பெற்றுக்கொண்டு ரம்மியமாக ஜொலித்தது.
'ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்...."
வரிகள் தன்னிச்சையாக உதடுகளில் வந்து ஒட்டிக்கொண்டன. ஆஹா.... கேதாரம்!
ஒரு பரப்பரப்பான நகரித்திலும் மாலைகள் அழகாக இருக்கலாகெமன இந்த 'பொன்மாலைப் பொழுது' பாடல் எவ்வளவு இயல்பாக உணர்த்துகிறது! நகரத்திலும் சூரியன் வண்ணங்களைத் தூவி விடைபெறும், மேல்வானம் சிவக்கும், கூடு திரும்பும் பறவைகள் ஒலி கேட்கும், இலைகள் அசையும், தென்றல் வீசும், குழந்தைகள் குதூகலமாக விளையாடும், காதலர்கள் ரகசியமாக சந்திப்பார்கள், மனம் இனம்புரியாத சந்தோஷத்தில் ஆர்ப்பரிக்கும்....
பாடலின் தொடக்கத்திலேயே வரும் புல்லாங்குழல் இசை, மாலையின் மெல்லிய தென்றல் காற்றைப்போல செவியை வருடிச்செல்கிறது.... கிட்டாரும் வயலின்களையும் கொண்டு இளையராஜா என்ன ஒரு மாயாஜாலத்தை செய்திருக்கிறார்! என்ன ஒரு மனதை மயக்கும் விந்தை!
வீட்டுக்கு வந்தும் மீண்டும் ஒரு முறை பாடலை கேட்டேன்.... மீண்டு வர வெகு நேரமாயிற்று.... I was lost in a trance....
https://youtu.be/Jc3l43V4naU?si=rkBph8VY5L9QNTb7
1980ல் வந்த இந்த 'நிழல்கள்' படப்பாடலுக்கு முன், ஏன் இளையராஜாவுக்கு முன் கேதாரத்தில் எந்த திரைப்பட பாடலும் வரவில்லையா என்று யோசிக்க ஆரம்பித்தேன்.
மிகுந்த யோசனைக்கு பிறகு ஒரே ஒரு பாடல் ஞாபகம் வந்தது. 1941ல் வெளிவந்த 'சாவித்திரி' படத்தில் சாந்தா ஆப்தே பாடிய 'ஆடுவோம் வாருங்கள் பாங்கியரே'... பாபநாசம் சிவன் இயற்றி, துறையூர் ராஜகோபால சர்மா மெட்டமைத்து, கமல் தாஸ் குப்தா வாத்தியங்கள் ஒருங்கிணைத்த பாடல். அழகான கேதாரம்!
https://youtu.be/gIBoEzXQQJ8?si=9xVDhWeHpuVREmRz
மெல்லிசை மன்னரின் ஒரு பாடல் கூட கேதாரத்தில் வரவில்லையே என்று யோசித்தேன். சரி, MSV பெரும்பாலும் ஒரு ராகத்தில் ஒரு பாடல் அமையவேண்டுமென்று முயற்சித்தில்லை. பாடல் சூழலுக்கேற்ப அவர் மனதில் மெட்டுக்கள் அலையலையாக வந்து குவியும்... சில சமயம் அவற்றை சில ராகங்களுக்குள் நாம் தான் பொறுத்தி பார்கிறோம்...
ஆனாலும் இளையராஜாவின் 'இதுவொரு பொன்மால பொழுது' பாடலுக்கு முன் கேதாரத்தில் எந்த MSV பாடலும் அமையவில்லையா?
சட்டென்று 'வந்தனம் வந்தனம் வந்தனம்' என்று துள்ளிக்கொண்டே L.R.ஈஸ்வரி மனதில் வந்தமர்ந்தார்! ஆமாம் 1978ல் நாகேஷ் கதாநாயகனாக நடித்து வெளிவந்த 'அதிர்ஷ்டக்காரன்' படத்தில் ஒரு நாட்டியநாடக பாடலின் சில வரிகள் கேதாரத்தில் அமைந்தன, தற்செயலாக!
https://youtu.be/OG4vmzjP9xY?si=OONTulDmWFCeKuej
(29.42லிருந்து பார்க்கவும்)
அதற்கு பிறகும் மெல்லிசை மன்னரின் ஒரு பாடல் கேதாரத்தை ஆதாரமாய் கொண்டு வந்ததே என்று ஒரு உறுத்தல்... நினைவில் அகப்படாமல் தவியாய் தவித்தேன்... இரவு எங்கள் தெருவில் சிறிது நேரம் நடைபயிற்சி செய்துகொண்டிருக்கும் போது திடீரென்று இந்த பாடல் ஞாபகம் வந்தது.... ஆஹா... எவ்வளவு அழகான வார்ப்பு! பிரமாதமான வாத்திய அமைப்புகள்.... TMSசின் கம்பீரம்.... வாணியின் வசீகரம்... 1981ல் வெளிவந்த 'மாடி வீட்டு ஏழை' படத்தின் 'முத்தமிழ் சொந்தங்கள்' 💖
கேதாரம்!
https://youtu.be/r7KFsghIhOM?si=-IsMGR6XVEq675ZH
இதற்கு சில வருடங்களுக்கு பிறகு பட்டித்தொட்டியெங்கும் ஒலித்த இளையராஜாவின் கேதாரம் தான் உங்கள் எல்லோருக்கும் தெரியுமே! என்ன, ஞாபகம் வரவில்லையா? மேலே உள்ள மெல்லிசை மன்னரின் 'முத்தமிழ் சொந்தங்கள்' பாடலின் சரணத்தில் முதல் நான்கு வரி ஒவ்வொன்றுக்கும் பிறகு வரும் வயலின் Bitடை மீண்டும் கேட்டுப்பாருங்கள்! செண்டை முழங்க, தோழியர் சூழ, அந்த சுந்நரனும் சுந்நரியும் எட்டிப்பார்கிறார்களா?
https://youtu.be/5R3_k3hJLfk?si=RibGJaqNE51HIqJ5
கேதாரம்!
- Saravanan Natarajan
No comments:
Post a Comment