பாட்டொன்று கேட்டேன்... 🙏
பாடகி ஜமுனாராணி நேற்று பெங்களூரில் காலமானார். திருமணம் செய்து கொள்ளாமல் தனியே வாழ்ந்து வந்த அவர் சில வருடங்களுக்கு முன் சென்னையிலிருந்து பெங்களூருக்கு குடிபெயர்ந்தார். அங்கு தனது உறவினர்களுடன் வாழ்ந்து வந்தார். ஜானகியம்மா மறைந்த சில நாட்களிலேயே ஜமுனாராணியும் விடைப்பெற்றிப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது 😔
ஜமுனாராணி! 'இரு கோடுகள்' படத்தின் 'புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்' பாடலில் 'புன்னகை மன்னன்... பூவிழி கண்ணன்' என்று பாடிவிட்டு சுசீலா தவிப்புடன் தடுமாறும் போது கோவமும் ஆற்றாமையும் ஒருங்கே சேர ஓங்கி 'ருக்மணிக்காக..' என்று விருட்டென்று சொந்தம் கொண்டாடும் குரலுக்கு சொந்தக்காரர்.
https://youtu.be/BoVMpd_7nCw?si=lhtrqYt2NceAcmkz
சிறு வயதில் வானொலியிலும் ஒளியும் ஒலியுமிலும் அடிக்கடி கேட்ட/ பார்த்த இந்த பாடல் தான் எனக்கு ஜமுனாராணியின் முதல் அறிமுகம். அப்போதெல்லாம் நினைத்துக்கொள்வேன் ஜமுனாராணி இந்த ஒரு பாடலை மட்டும் தான் பாடினாரென்று.
பிறகு 'பாசமலர்' படத்தை டீவியில் ஒரு ஞாயிறு மாலை பார்த்தேன். 'மலர்ந்தும் மலராத', 'மயங்குகிறாள் ஒரு மாது', 'யார் யார் யார் அவள் யாரோ', 'எங்களுக்கும் காலம் வரும்' என்று சுசீலாவின் கொடி உயர்ந்து பறந்த ஆல்பத்தில் L.R. ஈஸ்வரியின் 'வாராய் என் தோழி வாராயோ' பாடலையும் அடிக்கடி கேட்டிருந்த நிலையில் 'பாட்டொன்று கேட்டேன்' பாடலை அன்று தான் முதல் முறை கேட்டேன். அடடா, உண்மையில் பரவசமானேன்... வித்தியாசமான குரலினிமை, அதில் குளிர்ச்சியான சிறு நடுக்கம், பாடல் சூழலுக்கேற்ப கொஞ்சம் காதல், நிறைய நாணம்... An underrated jewel in the treasured album...
https://youtu.be/qxGn9eBhySo?feature=shared
இன்றும் கொண்டாப்படும் இந்த இரண்டு பாடல்களை கேளுங்கள்....
https://youtu.be/NK1YsGXnGWI?feature=shared
https://youtu.be/TediFBhHmH4?feature=shared
ஆமாம் 'குங்குமப்பூவே கொஞ்சும்புறாவே' என்று காதலுடன் குதிக்கும் சந்திரபாபுவுக்கு சரிசமமாக ' போக்கிரி போக்கிரி போக்கிரி ராஜ்ஜ்ஜா' என்று பதிலடி கொடுப்பதும், 'மாமா மாமா மாமா' என்று சொக்கவைப்பதும் ஜமுனாராணியே!
என் ரசனைகளும் தேடலும் விரிவடைந்த போது ஜமுராணி என்ற அற்புத பாடகியின் முழுவீச்சுகள் எனக்கு மெல்ல மெல்ல புலப்பட்டன. ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் எல்லா முன்னணி நடிகைகளுக்கும் பாடியிருக்கிறார். 'காமுகர் நெஞ்சில் நீதியில்லை' என்று சாவித்திரி கதறியது , 'துரையே... இளமை பாராய்' என்று பத்மினி மயக்கியது, அதே பத்மினி 'சித்திரத்தில் பெண் எழுதி' என்று புலம்பியது, 'காவிரித்தாயே காவிரித்தாயே' என்று அஞ்சலி தேவி உருகியது, 'அதிமதுரா அனுராகா' என்று சவுகார் ஜானகி காதலில் களித்தது, 'கண் பாடும் பொன்வண்ணமே' என்று தேவிகா பிரேம் நஸீரை பார்த்து புன்னகைத்தது, 'தாரா தாரா வந்தாரா' என்று M.N. ராஜம் ஆவலாக ஆர்ப்பரித்தது, 'சொல்லட்டுமா சொல்லட்டுமா' என்று ராஜசுலோச்சனா குறும்பாக கேலி செய்தது, 'நெஞ்சினிலே நினைவு முகம்' என்று ஷீலா விசும்பியது..... எல்லாம் ஜமுனாராணியின் குரலில் தானே!
எனக்கு மிகவும் பிடித்த ஜமுனாராணியின் சில பாடல்கள்:
விஸ்வநாதன்- ராமமூர்த்தி இசையில் ஒரு அந்திநேர படகு பாடல்... காதலில் விழுந்த ஒரு பெண்ணின் தவிப்புகளை எவ்வளவு அழகாக பாடுகிறார் ஜமுனாராணி...
https://youtu.be/ruJLBdcX5pw?feature=shared
அதேப்போல்... இதுவும் காதலில் கட்டுண்ட ஒரு பெண்.... ஆஹா... இதில் ஜமுனாராணியின் குரலில் இனிமை சற்று கூடுதலாக தோன்றும்...
https://youtu.be/aRUMbFTIUOc?feature=shared
காதலில் தடங்கல் வரும்போது இந்த துன்பம் தீராதோ என்று ஏக்கமாய் பாடும் ஜமுனாராணி...
https://youtu.be/FEfaHMptNeI?feature=shared
MGR படங்களிலும் பாடியிருக்கிறார். இதோ 'மன்னாதி மன்னன்' படத்தில் காதல் முக்கோணத்தில் முதல் கோணமாக ஜமுனாராணி....
https://youtu.be/QJAQUkt8j98?feature=shared
இலங்கை வானொலியின் மந்தமாருதம் நிகழ்ச்சியில் தவறாமல் இடம்பெற்ற பாடல்-
https://youtu.be/TqEjQzhCw9c?feature=shared
நடிகர் திலகம்- புன்னகை அரசி நடித்த 'செல்வம்' படத்தின் இந்த பாடலை கேட்டுப்பாருங்கள்.... ஜமுனாராணிக்கு ஏன் இன்னும் அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற கேள்வி மனதில் எழும்....
https://youtu.be/hyLXwmeg6Vw?feature=shared
இந்தி டப்பிங் படம் தான்- ஆனால் ஜமுனாராணியின் குரலில் அப்படியொரு கிறக்கம்-
https://youtu.be/22LQiS3cDsw?feature=shared
1958ல் வெளிவந்த கவிஞரின் 'மாலையிட்ட மங்கை' படத்தில் விஸ்வநாதன்- ராமமூர்த்தி இசையில் T.R. மகாலிங்கம் பாடிய 'செந்தமிழ் தேன் மொழியாள்' பாடல் எல்லோரும் அறிந்ததே. ஆனால் அதே பாடலின் சோக வடிவம் ஜமுனாராணியின் குரலில் ஒலித்தது பல பேர் அறியாதது.
https://youtu.be/RjBHuecOolk?feature=shared
1958ல் இளம் பெண்ணாய் பாடிய பாடலை 2005ல் கனடா நாட்டில் ஒரு மேடையில் ஜமுனாராணி மீண்டும் எவ்வளவு அழகாக பாடியிருக்கிறார் பாருங்கள்: ( நன்றி திரு Sivakumaran Siva Sivalingam )
https://youtu.be/QvW8Vh6et7k?si=-2hgvNq-G6kk8106&sfnsn=wiwspwa
விஸ்வநாதன்- ராமமூர்த்தியும் K.V. மகாதேவனும் இப்படி கொண்டாடிய பாடகிக்கு அறுபதகளின் இடையிலிருந்து காரணமே புலப்படாமல் வாய்ப்புகள் குறைந்தன. எழுபதுகளில் V. குமார், சங்கர்- கணேஷ் இசையில் ஓரிரு பாடல்கள்.
கிட்டத்தட்ட பத்து வருட இடைவெளிக்கு பிறகு ஜமுனாராணி ஸ்டூடியோவக்குள் மீண்டும் நுழைந்தது- இளையராஜாவின் அழைப்பின் பேரில்! 'நாயகன்' படத்தின் 'நான் சிரித்தால் தீபாவளி' - M.S. ராஜேஸ்வரியுடன் ஜமுனாராணி பாடிய பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்தது.
https://youtu.be/yw3EFXI3mPM?feature=shared
கியான் வர்மாவின் இசையில் 1992ல் வெளிவந்த ' அண்ணன் என்னடா தம்பி என்னடா' படத்தில் ஜிக்கியுடன் சேர்ந்து ஜமுனாராணி பாடிய இந்த அழகான பாடல் தான் தமிழில் அவர் கடைசியாக பாடியது-
https://youtu.be/hjV9cgKS04w?feature=shared
ஜமுனாராணி! இப்படி விதவிதமான, அழகழகான பாடல்களை பாடி தமிழ் திரையிசை சுவடிகளில் தனக்கென ஒரு தனி அத்தியாயத்தை வகுத்துக்கொண்டுள்ளார்.
ஒரு முறை நேரில் சந்தித்தும் தொலைப்பேசியில் சில முறை பேசியும் அவரது பாடல்களை சிலாகித்திருக்கிறேன். அடக்கமாக ரசிப்பார், கடந்த கால நினைவுகளை மகிழ்ச்சியாக அசைபோடுவார். தனது பாடல்களால் நம்மை மகிழ்வித்த ஜமுனாம்மா ஆத்மா இறைவனிடம் இளைப்பாறட்டும் 🙏
- Saravanan Natarajan
No comments:
Post a Comment