dhool

dhool
Click on the above image and Join the discussion in our Facebook group

Wednesday, July 29, 2026

V Kumar - Swarna

 🎵எங்கெங்கு நீ....அங்கங்கு நான்....நீயின்றி நானில்லை கண்ணா....🎵


'ஏம்மா... நீங்க இருங்க.... நான் போயிக்கிறேன்...' என்று தடுத்து பார்த்தேன்.  ' அதனாலென்ன... இங்க தானே... நான் வரேன்' என்று பிடிவாதமாக என் கையை பிடித்துக்கொண்டே லிஃப்ட் வரைக்கும் வந்தார். பட்டனை அழுத்தி விட்டு காத்திருக்கையில் 'உடம்பை பார்த்துக்கோங்கமா... உங்கள இன்னிக்கு பார்த்துதல ரொம்ப சந்தோஷம்' என்றேன்...


 'எனக்கும் தான் ரொம்ப சந்தோஷம்... ரொம்ப நாளைக்ப்புறம் நெஞ்சு நிறைவா இருக்கு.... அந்த காலத்துக்கே போயிட்டு வந்தா மாதிரி... அதுவும் அவர் பிறந்த நாளன்னக்கி இவ்வளவு தூரம் என்னை தேடி வந்திருக்கீங்க.... அவரும் இன்னிக்கு நம்ளோட இருந்தாரு... நம்ம சிரிச்சு, பேசி, பாடிக்கிட்டிருந்ததெல்லாம் அவரும் நம்ம கிட்ட உக்கார்ந்து கேட்டுக்கிட்டிருந்தார்னு  தோணுது...' என்றபோது அவர் குரல் கம்மியது. புடவை தலைப்பால் கண்களை அவசரமாக துடைத்துக்கொண்டார். எனக்கும் மீண்டும் அந்த மாபெரும் இசைவித்தகரின் நினைவு வரவே கண்களில் நீர் எட்டிப்பார்த்து. நல்ல வேளை, அந்த நேரம் லிஃப்ட் வந்திவிடவே, நான் உள்ளே நுழைந்து  'போயிட்டு வரேன்' என்பது போல் தலையாட்டினேன்.  அதுவரைக்கும் என் கையை பற்றிக்கொண்டிருந்வர் அதை மெல்ல விடுவத்து, விடுவித்த கையை மீண்டும் ஒரு முறை தட்டி கொடுத்து என்னை வழியனுப்பினார். 


நினைவுகள் தோய்ந்த அன்பினால் இப்படி பிணைந்திருக்கும் போது அங்கு வார்த்தைகள் அவசியமற்று போகின்றன....


நான் சந்திக்க சென்றவர் ஒரு திறமையான பாடகி. மிக இனிமையான குரல் கொண்டவர். திரைப்படங்களில் மிகச்சில பாடல்களே பாடியிருந்தாலும் அந்த சில பாடல்களிலேயே தன் மேதாவிலாசங்களை விட்டுச்சென்றவர். காலஞ்சென்ற அவரின் கணவரோ என் சிறு வயதிலேயே தன் மெல்லிசையால் என் மனதில் நிரந்தரமாக இடம் பிடித்துவிட்ட மாமணி....


*  *   *  *  *


1960களின் மத்தியில் சென்னை டி.நகர் லட்சுமி காலனியில் ஒரு மாடி வீடு. கீழ் தளத்தில் வசித்து வந்தார்கள் வீட்டின் உரிமையாளர்களான ஆந்திரா விஜயநகரத்தை சேர்ந்த சூர்யகாந்தம்மாவும் அவரது மகள்களான ரமாவும் சுவர்ணாவும்.


குச்சிப்புடி கலைஞரான ரமா பல நாட்டிய நிகழ்ச்சிகள் வழங்கி வந்தார். அந்த நிகழ்ச்சிகளில் பின்பாட்டு, ஜதிகள் பாடி நட்டுவாங்கம் செய்து வந்தது விஜயநகரத்தின் பிரபல இசைக்கல்லூரியில் முறைப்படி சங்கீதம் பயின்றவரும் இனிமையான குரல் வாய்ந்தவருமான தங்கை சுவர்ணா.


அந்த நேரத்தில் ஒருவர் தன் தாயாருடன் இவர்களின் வீட்டின் மாடியில் வாடகைக்கு குடிவந்தார்.  அடக்கமும் அமைதியும் நிறைந்த அந்த மனிதர் வேறெவரும் இல்லை- அந்த காலகட்டத்தில் K. பாலசந்தரின் நீர்க்குமிழி, நாணல், மேஜர் சந்திரகாந்த் போன்ற படங்களுக்கும், பல மேடை நாடகங்களுக்கும் இசையமைத்து வந்த V. குமார்!


இது தெரிந்ததும் குமார் வீட்டில் இருக்கும் நேரம் பார்த்து சுவர்ணா ஒரு நாள் தயங்கியபடியே படியேறி சென்றார் சுவர்ணா. தனக்கு பாட வரும் என்று சொல்லி குமாரிடம் சினிமாவில் பாடும் வாய்ப்பு தருமாறு கேட்டுக்கொண்டார். அவரை பாடச்சொல்லி கேட்ட குமாருக்கு சுவர்ணாவின் குரல் பிடித்தது. முதலில் நாடங்களிலும் பிறகு திரைப்படங்களிலும் தனது இசையில் சில அருமையான பாடல்களை பாடும் வாய்ப்பை சுவர்ணாவுக்கு கொடுத்தார் குமார். சுவர்ணாவின் குரல் பிடித்து... பிறகு காதல் மலர்ந்து கரத்தையும் பிடித்தார் குமார். 1969ல் திருப்போரூர் முருகன் கோயிலில் குமார்- சுவர்ணா திருமணம் நடந்தது.


அறுபதுகளின் கடைசி ஆண்டுகளிலும் எழுபதுகள் தோறும் அற்புதமான பாடல்கள் குமாரின் இசையில் உருவாகின...


*  *  *  *  *  *


🎵ஒரு நாள்...யாரோ...

🎵அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா

🎵தாமரை கன்னங்கள்

🎵புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்

🎵தொட்டதா தொடாததா

🎵உன்னை தொட்ட காற்று வந்து என்னத்தொட்டது

🎵புலவர் சொன்னதும் பொய்யே 

🎵நல்ல நாள் பார்க்கவோ 

🎵கண்ணொரு பக்கம்

🎵காதோடு தான் நான் பாடுவேன்

🎵மூத்தவள் நீ கொடுத்தாய்

🎵தேவன் வேதமும் கண்ணன் கீதையும்

🎵பகை கொண்ட உள்ளம்

🎵சிகப்பு கல்லு மூக்குத்தி

🎵நாள் நல்ல நாள்

🎵மழைக்கால மேகம் மகராஜன் வாழ்க

🎵என்னை அழைத்தது யாரடி கண்ணே

🎵திருக்கோவில் தேடி ரதி தேவி வந்தாள்

🎵வாழ்வில் சௌபாக்கியம் வந்தது

🎵உன்னை பார்க்க வேண்டும் பழக வேண்டும்

🎵ஆலயம் நாயகன் கோபுரம் நாயகி

🎵சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன்

🎵கண்களால் நான் வரைந்தேன்....


இப்படி குமார் வடித்திட்ட காவியங்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்....


மனோரமா பின்னாட்களில் பல திரைப்பாடல்கள் பாடுவதற்கு வித்திட்ட, பட்டிதொட்டியெங்கும் ஒலித்த 🎵'வா வாத்தியாரே வூட்டாண்டே'🎵


இன்று வரை புத்தாண்டு பிறக்கும் போது தவறாமல் ஒலிக்கும்🎵 'நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன்'🎵


பல வருடங்களாக தமிழ் சினிமாவில் பாடாமல் ஒதுங்கி இருந்த  A.M. ராஜாவை அழைத்து வந்து பாடவைத்த 🎵'முத்தாரமே உன் ஊடல் என்னவோ'🎵


பெரும்பாலும் நகைச்சுவை மற்றும் இரவு விடுதி பாடல்களையே பாடி வந்த L.R. ஈஸ்வரியை ஒரு இல்லத்தரசி பாத்திரத்துக்கு மென்மையாக பாடச்செய்து, ஈஸ்வரியின் மிகச்சிறந்த பாடலாய் இன்று வரை கருதப்படும் 🎵'காதோடு தான் நான் பாடுவேன்'🎵


தன் சொந்த இசையிலேயே மிக அபூர்வமாக பாடி வந்த மெல்லிசை மன்னரை இந்த மெல்லிசை மாமணி பாடவைத்த🎵 'உனக்கென்ன குறைச்சல்... நீயொரு ராஜா🎵


SPBயின் ஆரம்பகாலங்களில் அவரை மிகவும் ஊக்குவித்து, மேன்மேலும் புகழடையச்செய்த 🎵'படைத்தானே பிரம்மதேவன்',🎵 'பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு', 🎵'இது நான் அறியாத மயக்கம்', 'ஓராயிரம் கற்பனை'🎵


நேரமில்லாததால் SPB பாடமுடியாமல் போய், யேசுதாஸுக்கு மங்காத புகழை தேடித்தந்த 🎵'உன்னிடம் மயங்குகிறேன்'🎵


ரஜினிகாந்தின் ஆரம்பகால பாடல்களில் மிகவும் பிரபலம்  அடைந்த 🎵'மதனோத்சவம் ரதியோடுதான்'🎵


இது போன்ற அழகழகான பாடல்களை வடித்தவருக்கு எண்பதுகளில் வாய்ப்புகள் இல்லாமல் போனது. கிடைத்த ஒன்றிரண்டு படங்களில் நல்ல பாடல்களை கொடுத்தும், அந்த படங்களின் தோல்வியினால் அவை எடுபடாமல் போயின. பக்தி பாடல்களுக்கு இசையமைத்தார். தொலைக்காட்சியில் சில இசை நிகழ்சிகளை வழங்கினார். 


மெல்லமெல்ல மக்களின் நினைவுகளிலிருந்து மறைந்தார்.

1996 ஜனவரியில் இந்த உலகிலிருந்தே மறைந்தார்.


*  *  *  *  *


2003யில் நான் tfmpageல் 'மலரும் நினைவுகள்' என்ற தலைப்பில் V.குமார் அவர்களின் பாடல்களைப் பற்றி ஒரு தொடர் எழுதி வந்தேன். அப்போது அதைப்படித்து வந்த ஒரு நண்பர் மூலம் குமார் அவர்களின் மகன் அமெரிக்காவில் வசிக்கும் சுரேஷ் பரிச்சயமானார். தன் தந்தையை பற்றி நிறைய தகவல்கள் பகிர்ந்தார். 2016ல் துபாயில் என் வீட்டுக்கு தன் குடும்பத்துடன் வந்தார். நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். இன்று வரை எங்கள் நட்பு தொடர்கிறது. 


2005யில் ஒரு முறை சென்னை வந்திருந்தபோது திருமதி சுவர்ணாவை சென்று பார்த்தேன். அவருடைய சகோதரி ரமாவுடன் டி. நகரில் குமார் சொந்தமாக கட்டிய வீட்டில் வசித்து வந்தார். பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு 2020 ஜனவரியில் குமார் அவர்களின் நினைவு நாளில் அவ்விருவரையும் சந்தித்தேன். அப்போது சிறுசேரியில் ஒரு உயர்ரக அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தார்கள். 


இன்று குமார் அவர்களின் பிறந்தநாளில் சுவர்ணா அவர்களை சென்று பார்த்தால் என்ன என்று திடீரென்று தோன்றியது. சுரேஷை WhatsApp callல் அழைத்து கேட்டேன். அவரும் 'தாராளமாக போய் பாருங்கள்....she will be very happy!' என்று சொன்னார்.


என் அலுவலக வேலைகளை அதற்கேற்றார் போல் அமைத்துக்கொண்டு கிளம்பினேன் சிறுசேரிக்கு. போக்குவரத்து நெரிசலில் அவர்கள் வீடு சென்றடைய ஒன்றரை மணிநேரம் ஆயிற்று.


ஆனால் என்னை கண்டதும் சுவர்ணாவின் முகத்தில் மின்னலென படர்ந்த ஆனந்தம்....நொடிப்பொழுதில் அந்த இன்னல்களையெல்லாம்  மறக்கச்செய்தது. அன்பொழுக அவர் என்னையும் என் குடும்பத்தாரையும் விசாரித்தார். அவரது அக்கா திருமதி ரமா நடக்க முடியாமல் படுக்கையிலேயே இருந்தார். என்னை பார்த்து 'வா வா' என்றார் மெல்லிய குரலில்.


பிறகு திருமதி சுவர்ணாவுடன் சுமார் இரண்டுமணி நேரம் பேசிக்கொண்டிருந்தேன். குமார் சாரின் மாலையிட்ட படத்தை வணங்கிவிட்டு 'இன்னிக்கு சாரின் பிறந்தநாள். இந்தாங்க சாக்லேட்' என்று கூறி நான் வாங்கி சென்றிருந்த சாக்லேட் பேக்கட்டை அவரிடம் நீட்டினேன். கலங்கிய கண்களுடன் அதை வாங்கிக்கொண்டார். அதை பிரித்து எனக்கு ஒன்றை கொடுத்து தானும் ஒன்றை எடுத்துக்கொண்டார்.


பழைய நினைவுகளில் மூழ்கி பல விஷயங்கள் பேசினோம். குமார் அவர்களின் இசையில் சுவர்ணா பாடிய பாடல்களை ஞாபகப்படுத்தினேன். 


மலேசியா வாசுதேவனுக்கு முதன்முதலில் பாடும்வாய்ப்பை கொடுத்தவர் குமார். அந்த பாடல் 'தில்லி டு மெட்ராஸ்'  என்ற படத்தில் வந்த 'பாலு விக்கிற பத்மா'.  உடன் பாடியவர்- சுவர்ணா!


'வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு',  'சேதி கேட்டோ சேதி கேட்டோ', 'எழுதாத பாடல் ஒன்று' போன்ற பாடல்களிலும் சுவர்ணா இனிமையாக ஒலித்தார்.


இவற்றைத் தவிர குமாரின் இசையில் எனக்கு மிகவும் பிடித்த சுவர்ணாவின் பாடல்கள்:


SPB யுடன் சுவர்ணா பாடிய 'கண்ணெல்லாம் உன் வண்ணம்'


https://youtu.be/jGyJW9sNxok


யேசுதாஸூடன் சுவர்ணா பாடிய 'இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்'


https://youtu.be/f55BMenbCb0


ஜெயச்சந்திரனுடன் சுவர்ணா பாடிய 'என்னோடு என்னென்னவோ ரகசியம்'


https://youtu.be/_7--1YVY6x0


SPB பாட சுவர்ணா humming செய்யும் 'ஒரு பார்வை பார்க்கும் போது'


https://youtu.be/7DnFhT0_sr4


யேசுதாஸுடன் சுவர்ணா பாடிய 'இளமைக்கோயில் ஒன்று இரண்டே தீபங்கள்'


https://youtu.be/mLT6-kX9NtQ


இவற்றையெல்லாம் நான் குறிப்பிட்டபோது பரவசத்தில் சுவர்ணாவின் கண்கள் மிளிர்ந்தன.... 'கொஞ்சம் பாடுங்களே அம்மா'  என்றேன். 'ஐயோ. .. நான் பாட்டெல்லாம் பாடி ரொம்ப வருஷமாச்சே....' என்று மறுத்தார். நான் வற்புறுத்தி கேட்க சில வரிகளை தயங்கியபடியே பாடினார்.... ஆஹா... இன்றும் இனிமையாக, அருமையாக இருக்கிறது சுவர்ணா அவர்களின் குரல்.  மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்தேன். 


குமாரின் இசைக்குழுவில் இளையராஜா combo organ வாசித்திருக்கிறார். கங்கை அமரன் கிட்டார் வாசித்து வந்தார். பாவலர் சகோதரர்களின் மேடை கச்சேரிகளில் சுவர்ணா பாடியிருக்கிறார். 'அமரு தான் வந்து என்னை டாக்ஸியில் கூட்டிட்டு போவார். 'Hum tum ek kamre mein band ho', 'Jaane Jaa doondutha' போன்ற இந்தி பாடல்களை நான் பாடுவேன்' என்று நினைவுகூர்ந்தார் சுவர்ணா. 


நேரமாகி கொண்டிருந்தது. எனக்கு நான்கு மணிக்கு ஒரு teams meeting இருந்தது. அதனால் விடைபெற மனமில்லாமல் அங்கிருந்து கிளம்பினேன். 'எங்களை எல்லாரும் மறந்துட்டாங்கன்னு நினச்சேன்... நீ வந்து பேசிக்கிட்டிருந்தது மனசு லேசாயிடுச்சு...' என்றார் அற்புதமான பாடல்களை பாடியவரும், ஒரு மாபெரும்  இசைமேதையின் மனைவியுமான சுவர்ணா...


காரில் திரும்பிக்கொண்டிருந்போது என் கையில் சுவர்ணா அவர்கள் பற்றியிருந்த கதகதப்பு இன்னும் இருந்ததுபோல் ஒரு உணர்வு. கண்களை துடைத்துக்கொண்டு OMRரெங்கும் எழுப்பப்பட்டிருந்த CTS, TCS போன்ற IT கம்பெனிகளின் உயர்ந்த கட்டிடங்களை வேடிக்கை பார்க்க தொடங்கினேன். மாமன்னன்,  மாவீரன் போஸ்டர்கள் தெரிந்தன. 'வா நு காவல்லய்யா' வை கொண்டாடும் ரஜினி ரசிகர்களுக்கு 'மதனோற்சவம்' தந்த மயக்கம் புரியுமா? இது வேற் உலகம்...


#songpostsfromme 


- Saravanan Natarajan


https://www.facebook.com/share/v/1Bd13huk6V/

No comments:

Post a Comment