dhool

dhool
Click on the above image and Join the discussion in our Facebook group

Thursday, August 20, 2026

Kanava idhu unmaiya

 கனவா....  இது உண்மையா....


ஜானகி அம்மாவை சென்ற வாரம் அவர்கள் இல்லத்தில் சந்தித்ததை பற்றி எழுத சில முறை ஆரம்பித்து , முடியாமல் அந்த முயற்சியையே விட்டுவிட்டேன். எதில் ஆரம்பிப்பது, எப்படி தொடர்வது, எதில் முடிப்பது என்பதற்கெல்லாம் மேலே அந்த பிரம்மிப்பை, அந்த கரை புரண்டோடிய உணர்சிகளை, இந்த அன்பை பெறுவதற்கு நான் தகுதியானவன் தானா...  அந்த தகுதிக்கு உடையவனாக என்னை நானே மேம்படுத்திக்கொள்ள வேண்டுமே என்ற ஆதங்கத்தை, அந்த நெகிழ்சி நிறைந்த தருணங்களை விவரிக்க வார்த்தைகள் வராமல் தடுமாறியது தான் நிஜம்.


இன்னும் கனவு போல் இருக்கிறது... அவருடன் இருந்த அந்த இரண்டு- இரண்டரை மணி நேரம். பாடல்களை பற்றி(யும்) பேசினோம்....


SPB- ஜானகி duet பாடல்களில் வித்தியாசமான Vocal Arrangements, அதாவது நான் நினைவுக்கூர்ந்த ஒவ்வொரு பாடலிலும் SPBயும் ஜானகியும் அந்தந்த பாடல் சூழ்நிலைக்கேற்ப எப்படி செயல்பட்டார்கள் என்பதை கொஞ்ச நேரம் அலசினோம்.


இது எப்படி ஆரம்பித்தது என்றால் என் மனதில் அந்த நொடியில் தோன்றிய, அப்பொழுது என் மனநிலைக்கேற்ற 'கனவா, இது உண்மையா.... மனமே, பதில் இல்லையா' என்ற பாடல்- படம்:  'சலங்கையில் ஒரு சங்கீதம்' தெலுங்கில் இருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வந்தது. (Kalise Prathi Sandhyalo from Alapana).


SPB பாடியதும், ஜானகி அம்மா முதல் பல்லவியில் இரண்டு வரிகள் பாடுவார், முதல் சரணத்தின் முடிவில்  பல்லவி ஒரு வரி பாடுவார், பின் இரண்டாம் சரணத்தின் landing notesஸை பிடித்துக்கொண்டே பாடலின் முடிவில் முழு பல்லவியையும் பாடுவார். இடையில் ஜானகிக்கு சரணங்களில் humming மட்டும் தான்.... ஆனால் அதிலும் எத்தனை அழகுகள் சேர்த்திருப்பார் இந்த மாயக்காரி...


SPBயின் ஒவ்வொரு வரிக்கும் ஜானகியின் பதில்கள் சிலிர்க்க வைக்கும்....  ஒரு முறை கேட்கும்போது SPB பாடிய வரியை 'ஆமாம் சரி தான், எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது!'  என்று ஜானகி ஆமோதிப்பபோல் இருக்கும், மீண்டும் கேட்கும்போது SPB வரிகளுக்கு ஜானகி  'ஆ.. அப்படியா!' என்று ஆச்சரியப்படுவது போல் தோன்றும்- இன்னும் சொல்லப்போனால் 'முத்தம் ஒன்று சிந்திவிட்டேன் அன்னமே' என்று SPB கதகதப்பாக அறிவிப்பதை தொடரும் hummingல் 'Oh wow!' என்று ஜானகி புருவம் உயர்த்தி ரசிப்பதுப்போலும், 'அது உள்ளிருந்து தீ வளர்க்கும் இன்னுமே' என்று SPB தணலில் தவிப்பதை தொடர்ந்து வரும் hummingல் ஜானகி தோளை குலுக்கி 'oh, come on... no big deal' என்று ஏளனம் செய்வதுப்போல் தோன்றும்.... 😊 மீண்டுமொரு முறை கேட்கும் போது SPBயின் கெஞ்சல்களுக்கு ஜானகி கொஞ்சல்களாக அரவணைக்கிறார் என்று தோன்றும், சில சமயம் இருவருமே ஏதோ ஒரு தவிப்பில் உருகுகிறார்கள் , ஒரு வேதனையில் வாடுகிறார்கள் என்பதுப்போல் தோன்றும்...  எத்தகைய வித்தகர்கள் இவ்விருவரும்! 


இளையராஜாவின் மன ஓட்டத்தை நம்மால் புரிந்துக்கொள்வது சாத்தியமில்லை. நாம் கீழே புழங்கும்  சாதாரண மனிதர்கள். அவர், இன்றல்ல, என்றிலிருந்தோ மேலவையில் சஞ்சரிக்கும் ஒரு உன்னதமான படைப்பாளி....


முகப்பிசையே (prelude) இல்லாமல் SPB குரலில் பல்லவியுடன் பாடல் நேரிடையாக ஆரம்பிப்பது இளையராஜா இந்த பாடலெங்கும் நிறைத்த ஆச்சரியங்களில் முதலாவது. 


மாயாமாளவ கௌளயின் வீச்சுகளைக்கொண்டு பிண்ணிய ஒரு மின்னலை நம் செவிகளுக்குள் ஏவுகுகிறார். பாடல் முழுதும், மறைந்திருக்கும் மாயமோகினிப்போல் ஒரு சலங்கை ஒலி கேட்டுக்கொண்டே இருக்கும். 


முதல் இடையிசையில் மிருதங்கமும் தபலாவும் திரையை விலக்க, வீணையும் சிதாரும் புல்லாங்குழலும் சந்த்தூரும் புரியும் ஒரு மாயாஜாலத்திலிருந்து நாம் மீண்டு வருவதற்கு முன் அதே மிருதங்கம் ஆர்ப்பாட்டமும் அவசரமும் கொண்டு திரையை இழுத்து மூடுகிறது. 


சரணங்களில் பாலுவும் ஜானகியும் இந்த விந்தை உலகின் அரசன்- அரசி போல் இசை பரிவட்டங்களுடன் கம்பீரமாக வலம் வருகிறார்கள்.


இரண்டாவது இடையிசையின் அழகை வர்ணிக்க வெறு‌ம் வார்த்தைகளால் இயலாது. வீணைக்கும் சித்தாருக்கும் இடையே ராஜா அமைத்திருக்கும் counterpoint....  அடடா.... Sheer Brilliance! பின்பு புல்லாங்குழலும் சந்த்தூரும் வீணை- சிதாரின் அரியணையில் மிடுக்காக அமர்ந்து அந்த ஓட்டத்தை தோய்வில்லாமல் தொடர்கின்றன. 


அந்த 'கனவா' வார்த்தைக்குப் பின் ஒரு comma போட்டதுப்போல் ஒரு pause...  தனக்குத்தானே கேள்வி கேட்பதுப்போல்... வியப்பதுப்போல்....


'இது உண்மையா?' என்று SPB வினவும்போது ஒரு குழப்பத்தின் தவிப்பு தெரியும். பின்வரும் ஜானகியின் அந்த 'உண்மையா' ஒரு கூடுதல் அழுத்தத்துடன் வெளிப்படும்- இது உண்மையாய் இருக்கக்கூடாதா என்ற ஏக்கம் அங்கு மேலோங்கி நிற்க்கும்....


எப்பேர்பட்ட creativity!


என் கைப்பேசியில் பாடலை ஜானகி அம்மாவும் நானும் ஒன்றாக கேட்டோம்...  அவரும் என் கையைப்பற்றி கைப்பேசியை தாங்கியபடி இந்த பாடலை  கேட்டுக்கொண்டிருந்தார். என் கைகளில் சிறு உதறல்... கண்களில் சிறு குளம். அவர் முகத்தை பார்க்க துணிவில்லாமல் தலையை குனிந்து தரையை பார்த்துக்கொண்டிருந்தேன்... இன்னொரு கையால் என் தோளை மெல்ல  தட்டிக்கொடுத்தார்... அவர் முகத்தை தயக்கத்துடன் அண்ணாந்து பார்த்தேன்.... அவர் கண்களில் புரிதலும் இதழ்களில் வாஞ்சையான புன்னகையும் தவழ்ந்தன...  உணர்சிவசப்படும் ரசிகர்கள் அவருக்கு ஒன்றும் புதியதாக இருந்திருக்காது.....


அங்கு வார்த்தைகள் அவசியமில்லாததால் தொண்டையிலேயே தங்கிவிட்டன...


https://www.youtube.com/watch?v=wA4xtm60Tjw


🎵வாழ்க்கை போகும் போக்கிலே போகுதே...

வாழ்க என்று சொல்லடி வாழ்கிறேன்....🎵


- Saravanan Natarajan


#SPBJanakiuniqueduets

https://www.facebook.com/share/p/1G6M5Nvxxj/

No comments:

Post a Comment