dhool

dhool
Click on the above image and Join the discussion in our Facebook group

Tuesday, June 7, 2016

Aasai Irukku - Neerottam




Tiruchendurai Ramamurthy Sankar  writes:

இவர்தாங்க அந்த இன்னொரு ரமணன் ( The other Ramanan)

நடு 70 களில் TMSஇன் குரலுக்கு மாற்றாக SPB வந்தாயிற்று. யேசுதாஸை எம்.ஜி.ஆருக்குப் பிடித்து போனதால் அவருக்கும் ஏறு முகம். இந்நிலையில் எம்.எஸ்.வி புதிய குரல்களை அறிமுகப்படுத்தும் முயற்சியில் , ஜெயசந்திரன் ( மணிப்பயல்) ஜாலி ஆப்ரகாம் ( வணக்கத்துக்குரிய காதலியே), ஏ.வி.ரமணன் ( மன்மதலீலை) , டி.எல்.மகராஜன் ( ஒரு வீடு ஒரு உலகம்) , சிவாஜிராஜா( அன்புள்ள அத்தான்) , சந்திரபோஸ் ( ஆறு புஷ்பங்கள்) களமிறக்கினார்.
மன்மதலீலை (1976) படத்தில் SPB, KJY இவர்களுடைய குரலில் பாடல்களோடு ஏ.வி.ரமணன் என்ற புதிய பாடகரை " நேற்றொரு மேனகை" என்ற பாடலைக் கிஷோர்குமார் பாணியில் யோடலிங் சகிதம் பாடவைத்தார். ஜெயப்ரதா அறிமுகமாகமானதால் இந்தப் பாடல் வரலாற்றுச் சிறப்புப் பெறுகிறது என்று சொன்னால் மிகையில்லை.

மியூசியானோ என்ற இசைக்குழுவை நடத்திவந்தவர் ரமணன். அந்த சமயத்தில் பெரியவீட்டுக் கல்யாணம் தொடங்கி பெரியபாளையத்தம்மன் தேர் வரை மியூசியானோ கச்சேரி உண்டு....மெல்லிசைக்காகப் பிரபலமானது.
ரமணனின் குரல் இருக்கும் எந்தப் பாடகர் குரல் போல் இல்லாமலிருந்தாலும் ஒரு புரட்சியையோ, எதிர்பார்ப்பையோ உண்டாக்கவில்லை. அதனால் தொடர்ந்து பெரிய வாய்ப்புகள் வரவில்லை. ருத்ர தாண்டவம் (1978) படத்தில் " ஒரு ஆத்துக்கு கரையும்" ( LR ஈஸ்வரி டூயட்) , ராதாரவிக்காகப் பாடிய போதும் எடுபடவில்லை. அந்தப் படத்தில் பிரபலமானது " புது மஞ்சள் மேனிச்சிட்டு" . அந்த டியூனை MSV சற்றே மெதுவாக்கி தெலுங்கு " மரோ சரித்ரா" வில் , காலத்தால் அழியாத " ஏதிக பூவுனு" பாடலாக்கினார்.

இதயம் பேசுகிறது மணியன் தன்னிடம் பாடல் வாய்ப்புக் கேட்ட ரமணனை " பாட்டு எதுக்கு, நீங்க ஹீரோவாகவே நடிக்கலாம்" என்று பயங்கரமான ஒரு ஐடியா கொடுத்து உதயம் ப்ரொடக்‌ஷன்ஸில் எடுக்கப்பட்ட படம்தான் " காதல் காதல் காதல்" (1980) . குடுமி வைத்து அப்பாவி கெட்டப்பில் , கனவுக்கன்னி தீபாவுடன் டூயட். " காதல் காதல் காதல் என்று கண்கள் சொன்னதென்ன" என்ற பாட்டு வரும்போது மக்களுக்கு மின்சாரம் சேமிக்கும் எண்ணம் மேலிட ரேடியோவை அணைத்தார்கள். படத்தில் மற்றொரு டூயட் ரமணனுக்கு , மலேசியா வாசுதேவன் பாடினார். ( இசை-சங்கர்-கணேஷ்)

மணியன் அதைத் தொடர்ந்து ரமணனை வைத்து " கவிதாவுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்" என்ற படத்திற்கு பூஜை போட்டதாக சாஸ்திரிகள் வட்டாரத்தில் ஒரு பேச்சு அடிபட்டது. படம் வரவில்லை. பின்னாளில் தூர்தர்ஷன் தொடரில் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத அய்யாரக நடித்தது , தமிழுக்குப் பெருமை சேர்த்ததா என்ற விவரமில்லை.

விஜயகாந்த் நடித்த " நீரோட்டம்"(1980) படத்திற்கு இசை அமைத்து மனைவி திருமதி.உமா ரமணனுடன் பாடிய " ஆசை இருக்குது நெஞ்சுக்குள்ளே, அடிக்கடி துடிக்குது ஏனோ தெரியலே" என்ற பாடல் சிலகாலம் வானொலியில் வந்தது. பிறகு உமா பாடிய " பூங்கதவே தாள் திறவாய்" என்ற புயல் அடித்ததும் உமா , மக்களின் அபிமானப் பெண் பாடகரானார். ரமணன் " அபிமான்" ஆண் பாடகரானார். ( புரிந்தவர்கள் சொல்லாதீர்கள்!)

சன் டிவியின் சப்தஸ்வரம் பற்றி எழுதப்போவதில்லை. மெரீனாவின் தனிக்குடித்தனம் நாடகத்தை விஞ்சிய பிராமண பாஷையுடன் நடத்தப்பட்ட நிகழ்ச்சி அது!

ஆனால் ரமணன் , இளையராஜா ஶ்ரீரங்கம் ராஜகோபுரத்திற்கு நிதி திரட்டுவதற்காகத் திருச்சியில் நடத்திய நிகழ்ச்சியில் " இளமை எனும் பூங்காற்று" பாடலை மேடையில் பாடினார் ...அதற்குப் பிறகு ஏதாவது இளையராஜா நிகழ்ச்சியில் அவர் பாடியிருந்தால் ராஜாவுக்கு மன்னிக்கிற மனசு!

டைட்டில் உமா ரமணனைக் குறிக்கவில்லை...ரிட்டயர் ஆன வானிலை அறிக்கை ரமணனைக் குறிக்கிறது!

https://www.facebook.com/groups/1018417744856618/permalink/1248608571837533/

No comments:

Post a Comment