dhool

dhool
Click on the above image and Join the discussion in our Facebook group

Monday, June 20, 2016

Ellorum Nallavare - Krishna Bhakthi

Kumaraswamy Sundar writes:

ரசிகன் பார்வையில் பி யு சின்னப்பா :

என்னுடைய சிறு வயது முதலே திரை இசையில் மனதை பறிகொடுத்த எனக்கு பி யு சின்னப்பாவின் பாடல்களை எப்படி பிடிக்காமல் போகும்! என்ன ஒரு குரல் வளம் அவருக்கு! எப்படிப்பட்ட இசை ஞானம்! என்ன ஒரு கனமான சாரீரம்! கந்தர்வ கானம் அல்லவா அது. என்னுடைய பதினைந்தாவது வயதில்தான் முதன்முதலில் பி யு சின்னப்பாவின் பாடல் ஒன்றை இலங்கை வானொலியில் கேட்டேன்.

அந்த பாடல் ‘குபேர குசேலா’ படத்தில் வரும் 'நடையலங்காரம் கண்டேன்' என்கிற கரஹரப்ரியா ராகப்பாடல். குறிப்பாக அந்த பாடலின் சரணத்தில் 'தேடக்கிடைத்திடா தெய்வீக மருந்து' எனத்துவங்கி சற்று துரித கதியில் 'பா வெனமொழி பகரெழில் சுகமருவு சா ரசவதன மதியின் மாண்பாகும்" என்பதில் சொக்கிப்போனேன். அந்த நிமிடம் முதல் பி யு சியின் ரசிகனானேன்.

அப்பொழுதெல்லாம் பாண்டிச்சேரி வானொலி நிலையம் நாள்தோறும் காலை 8.30 மணிக்கு 'நினைவல் நின்றவை' நிகழ்ச்சியில் அடிக்கடி சின்னப்பாவின் பாடல்களை ஒலிபரப்பினார்கள். அப்படி நான் கேட்டு ரசித்த பாடல்தான் ‘கிருஷ்ணபக்தி’ படப் பாடலான 'சாரசம் வசீகர கணகள் சீர்தரும் முகம் சந்திர பிம்பம் ' பாடல். பாடலில் என்ன ஒரு துள்ளல்!

1970களின் மத்தியில் சென்னை தொலைகாட்சி வந்த பிறகு சில சின்னப்பாவின் படங்களை பார்க்க நேர்ந்தது. ஒவ்வொரு படத்திலும் அவர் பாடியுள்ள பாடல்களை அவ்வளவு ரசித்திருக்கிறேன். குறிப்பாக பாடல்களின் மெட்டமைப்பும் அவருடைய அனாயாசமான பாடும் விதமும் அற்புதமானது. இந்த தருணத்தில் ஒரு விஷயத்தை கண்டிப்பாக சொல்ல வேண்டும்- சென்னை தொலைக்காட்சியில் ‘வயலும் வாழ்வும்’ நிகழ்ச்சியில் அந்த காலத்தில் நாடக நடிகரும் சின்னப்பாவின் பரம ரசிகருமாயிருந்த திரு. வலம்புரி நாகராஜன் அவர்கள் பி யு சி படத்தில் பாடிய அதே மெட்டுகளில் சில சமயம் வேறு வேறு வார்த்தைகளை இட்டு நிரப்பி அருமையாக பாடுவார்.

அப்போது தொலைகாட்சி நாடகங்களில் நடித்து வந்த நடிகை ராணி சோமநாதன் வலம்புரி நாகராஜன் பாடல்களுக்கு எல்லாம் அழகாக அபிநயித்துக்காட்டுவார். அந்த நாட்களில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு நிகழ்ச்சி இது. என்னுடைய திரை இசை பாடல் ரசனை மிகுதியானதற்கு சென்னை தொலைக்காட்சியின் பங்கு மிகப்பெரியது. அந்த நாட்கள்போல் வருமா என்று ஏங்குகிறது மனம். எப்படியாவது இந்த வலம்புரி நாகராஜனை சந்திக்க வேண்டும் என்று மிகுந்த ஆசை தோன்றியது.

நான் 'ராகப்ரவாஹம்' என்ற இசைக்குழுவை 1989ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவக்கினேன். எங்கள் இசைக்குழுவில் ராகங்களின் அடிப்படியில் அமைந்த பாடல்களை மட்டுமே பாடல்களுக்கு விளக்கமும் சொல்லி வழங்குவோம். எங்களுடைய இரண்டாம் நிகழ்ச்சி நாரத கான சபாவின் ஆதரவின்கீழ் சபா அரங்கிலேயே நடத்தும் வாய்ப்பு கிட்டியது. அப்பொழுது வலம்புரி நாகராஜன் மியூசிக் அகாடமி பின்புறம் வசிக்கிறார் என்பதை அறிந்து நேரில் சென்று அவர் தொலைக்காட்சியில் பாடிய பாடல்களைப்பற்றி பேசினேன். ஒரு இளைஞன் இந்த பாடல்களையெல்லாம் இப்படி ரசிக்கிறானே என்று ஆச்சரியப்பட்டுபோனார். இருவரும் நல்ல நண்பர்களாகிவிட்டோம். அவரை என்னுடைய நிகழ்ச்சியில் பங்கேற் கச்செய்து 'நடையலங்காரம்' பாடலையும் ‘ரத்னகுமார்’ படப்பாடலான 'கேலி மிக செய்வாள்' பாடலையும் பாடவைதேன். எங்கள் நிகழ்ச்சிகளில் 1940,50களில் வந்த பாடல்களை எல்லாம் சர்வ சாதாரணமாக பாடுவோம்.

சென்னை தொலைகாட்சி வருவதற்கு முன்பாகவே பத்திரிகைகள் வாயிலாக அந்த கால நாடக நடிகர் R.V உடையப்பா என்பவரைப்பற்றி அறிந்து கொண்டேன். பி யு சின்னப்பாவின் அதி தீவிர ரசிகர் அவர். அதனாலேயே தம்முடைய பெயரைக்கூட பி யு சின்னப்பா என்பது போலவே மாற்றிக்கொண்டவர். அவரும் நன்றாகப் பாடக்கூடியவர். பின்னாளில் வெளிவந்த 'கண்ணாமூச்சி' (1978) படத்தில் பூதமாக நடித்தார். மேலும் 'அனிச்சமலர்' (ஸ்ரீ காளீஸ்வரி மூவீஸ்/1981) என்ற படம் ஒன்றை தயாரித்து பி யு சியின் மகன் ராஜபஹதூரை கதாநாயகனாக்கியவர். அந்த படத்தில் ஷங்கர்-கணேஷ் இசையமைப்பு சற்று சுமாராயிருந்தபோதிலும் எனக்கு பிடித்திருந்தது. அவரையும் எப்படியாவது சந்திக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் அந்த ஆசை நிறைவேறவே இல்லை.


1992ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி நானும் நண்பர் திரு. சர்வேஸ்வரனும் இனைந்து 1930,40,50களில் வெளிவந்த பழைய பாடல்களை ரசிப்பதற்காகவும் அவைபற்றி விவரமறிந்த ரசிகர்களை ஒன்றிணைக்கவும் 'விண்டேஜ் ஹெரிடேஜ்' என்ற அமைப்பை துவக்கினோம். நாங்கள் எதிர்பார்த்ததைவிட அமோக ஆதரவுடன் செயல்பட துவங்கியது. கடந்த 24 ஆண்டுகளாக நிகழ்சிகளை நடத்திக்கொண்டிருக்கிறோம் ரசிகர்களின் அன்பான உறுப்பினர்களில் நல்லாதரவோடு. அதில் 1993 செப்டம்பர் மாதம் மீண்டும் வலம்புரி நாகராஜனை அழைத்து பி யு சின்னப்பாவின் பாடல்களைக்கொண்ட ஒரு முழு நேர நிகழ்ச்சியாக அமைத்துக்கொடுதோம். அவருக்கு அதில் மட்டற்ற மகிழ்ச்சி.

விண்டேஜ் ஹெரிடேஜ் பி யு சியின் பல படங்களை திரையிட்டிருக்கிறது.. .உத்தமபுத்திரன், ஹரிச்சந்திரா, ரத்னகுமார், சுதர்சன், கிருஷ்ணபக்தி போன்ற எமக்கு கிடைத்த படங்கள். 2000ஆண்டு ஜனவரி மாதம் வி .ஹெ . சார்பாக கர்நாடக இசை பாடகர் சங்கீத கலாநிதி திருமதி. மணி கிருஷ்ணசுவாமி அவர்களும் நானும் இனைந்து 1940களில் வெளிவந்த பாடல்களைக்கொண்ட ஒரு சிறப்பு நிகழ்ச்சியை செய்தோம். அதில் சின்னப்பாவின் 'குபேர குசேலா' படப்பாடலான 'ஆண்டருள் ஜகதம்பா நானுன் அடிமை அல்லவோ' என்கிற கதனகுதூகல ராகப் பாடலைப் பாடினோம். எப்படிப்பட்ட பாடல் தெரியுமா? இந்த ராகத்தில் வேறு எந்த பாடலும் சினிமாவில் இந்த அளவுக்கு வந்திருப்பதாக தெரியவில்லை. நிகழ்ச்சிக்கு அப்படி ஒரு கூட்டம், சாஸ்திரி ஹால் நிரம்ப் வழிந்தது. மாடிப்படிகளில் எல்லாம் மக்கள் கூட்டம்.

அதற்கு அடுத்த மாதம் சின்னப்பாவின் ‘ஹரிச்சந்திரா’ படத்தை திரையிட்டோம். அந்த படத்துக்கும் சிறப்பு விருந்தினராக மணி கிருஷ்ணசுவாமியை மீண்டும் அழைத்திருந்தோம். அந்த படத்தில் சின்னப்பா பாடிய பாடல்களை கேட்டுவிட்டு நெக்குருகி அவர் கண்கள் பனித்தன. அதற்கு மறுநாள் எம்மை அழைத்து அந்த கௌரிமனோஹரி பாடலான 'எனையாளும் தயாநிதி', குந்தலவராளி ராகத்தில் 'இதுவே புண்யபூமி' மற்றும் கடைசியில் வரும் பாடலான 'காசிநாதா கங்காதரா' சிந்துபைரவி ராகப்பாடலையும் அவ்வளவு சிலாகித்து பேசினார். அதற்க்கு சில மாதங்களுக்கு பிறகு அவர் மறைந்தவிட்ட செய்தி கேட்டு மனம் கலங்கினோம். தான் ஒரு சங்கீத கலாநிதி என்ற அகந்தை சிறிதும் இல்லாத நல்ல மனிதர் அவர். அது என்னவோ, பி யு சியைப்போலவே மேறகூறிய வலம்புரி நாகராஜன், உடையப்பா, மணி கிருஷ்ணசுவாமி எல்லோருமே சீக்கிரமாக மறைந்துவிட்டனர். என்ன விந்தையோ?

என்னுடைய தனிப்பட்ட விருப்பமாக நான் மிகவும் ரசிக்கும் ஒரு பாடல் 'ஆர்யமாலா' -சரஸ்வதி ராகத்தில் வரும் 'சிவக்கிருபையால்' பாடல்.பி யு சியின் ராக ஞானத்தை வெளிக்கொணரும் ஒரு பாடல். அவரும் இசையமைப்பாளர் எஸ் வி வெங்கடராமனும் இணைந்தால் சொல்லவே வேண்டாம். தேன்மாரிதான். 'கண்ணகி' படத்தில் நவரசகன்னட ராகத்தில் 'அன்பில் விளைந்த அமுதமே' பாடல். பின்னாளில் வந்த பூம்புகார் படத்தில் இடம்பெற்ற 'பொன்னாள் இதுபோலே' பாடல் என்னதான் இருந்தாலும் இந்த பாடலுக்கு ஈடாகாது. 'சந்திரோதயமிதிலே' பாடலில் அமைந்ததுபோல் வேறெந்த திரை பாடலிலும் சங்கராபரணம் ராகம் இவ்வளவு சிறப்பாக அந்த ராகத்தின் கிரமம் மாறாமல் அமைந்ததில்லை. மாண்டு ராகத்தில் 'வந்தனள் ஒரு சுந்தரி', மிஸ்ர சாமா ராகத்தில் 'பத்தினியே உன்போல்' பாடல்கள் என் நெஞ்சை விட்டகலாதவை. 'தேவமகள் இவள் யார்' பாடல் ஹிந்துஸ்தானி பஹாடியில் காதல் ரசம் சொட்டச் சொட்ட பாடினார். இந்த மயக்கும் ரசக்கலவையை தன் சாரீரம் என்னும் பளிங்குக்கோப்பையில் பரிமாறினார் பி யு சி.மொத்தத்தில் அந்த பாடல்களெல்லாம் ஒரு முக்கனிச்சாறு . ஜி ராமநாதன் பி யு சி இனைந்து செய்த பாடல்களைவிட எஸ் வீ வெங்கடராமனுடன் அவர் பாடிய பாடல்கள்தான் என்னை மிகவும் கவர்ந்தவை.

‘குபேர குசேலா’ -குன்னக்குடி வெங்கடரம ஐயரும் என் எஸ் பாலக்ரிஷ்ணன் இருவரும் இசையமைத்த படம். பாடல்களெல்லாம் தேனோடு கலந்த தெள்ளமுது எனலாம். குறிப்பாக "செல்வமே சுக ஜீவாதாரம்'- சாமா ராகத்தில் வரும் இந்த பாடல் பி யு சியின் பாவம் ததும்பும் பாணிக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. 'நடையலங்காரம் கண்டேன்' என்று உருகுவார். கரஹரப்ரியாவை கடைந்து எடுத்த சிற்பமாக வெளிக்காட்டும் இனிமையான பாடல்.

ஹரிச்சந்திராவில் 'எனையாளும் தயாநிதி' கௌரிமநோஹரியில் என்ன ஒரு உருக்கம்...கேட்பவர் மனது கரையாதா?

‘ஜகதலப்ரதாபன்’ –‘தாயைப் பணிவேன்’ - கல்யாணி ராகத்தில் அவருடைய அபார ஸ்வர ஞானத்துக்கும் மனோதர்ம சங்கீதத்துக்கும் ஒரு சான்று.
‘மங்கையர்க்கரசி’ - கம்பதாசனின் பாடல்கள்- ஜி ராமநாதன் -குன்னக்குடி வெங்கடராம ஐயர் -சி ஆர் சுப்புராமன் மூவர் இசையமைப்பு. ‘காதல் கனிரசமே’-குன்னக்குடி வெங்கடராம ஐயர் மெட்டமைப்பு. சித்தரஞ்சனி ராகத்தில் சிந்தை கவர்ந்து 'பார்த்தல் பசி தீரும்' என்று செஞ்சுருட்டியில் நெஞ்சுருட்டினார் பி யு சி. விண்டேஜ் ஹெரிடேஜ் 2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த படத்தை திரையிட்டபோது படத்தின் வசனகர்த்தா உவமைக்கவிஞர் திரு. சுரதா அவர்களை கே கே நகரில் வசித்து வந்த அவரை நேரில் சென்று அழைத்து வந்தோம். தம்முடைய நினைவலைகளை எம்முடன் பகிர்ந்துகொண்டார்.

மனோன்மனியில் கானடா, தர்பாரி கானடா என்று 'மோகனாங்க வதனி' என்று மோகனமாய் இசைத்தார். 'மோகனமாமதனா'வில் புன்னாகவராளியில் மனம் வருடும் ஒரு நாதம்.'உன்றனுக்கோர் இணையானவர்' என்ற பைரவி ராகப்பாடலை கேட்கும்போது 'மணமகன் தேவை' படத்தில் வரும் 'வேலவரே உமைதேடி' பாடல் காதில் ரீங்காரமிடும்.

'வனசுந்தரி' படத்தில் 'கண்ணிலே விளையாடும்' பாடலில் எப்படி தம்முடைய குரலை அடக்கி ஒரு காதல் பாடலை மென்மையாக பாடவேண்டும் என்று வகுப்பே நடத்தியிருக்கிறார்.

'சுதர்சன்' படத்தில் 'தாமோதரா'பாடலில் சிந்து பைரவி ராகம் சிந்தை குளிர வைக்கும்.


எல்லோரும் நல்லவரே - பி யு சின்னப்பாவின் நூற்றாண்டில் அவரை நினைத்துப்பார்க்கும் நல்லிதயங்கள் எல்லோரும் நல்லவரே.



P.S. My above write-up on PUC is going to be published in a book titled “Rasigan paarvaiyil P U Chinnappa” to be brought out shortly this year as part of PUC’s centenary year celebrations by Pudukottai hard-core PUC fans.

Discussion at:
https://www.facebook.com/groups/1018417744856618/permalink/1255553397809717/

No comments:

Post a Comment